புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் இந்துக்களின் பண்டிகையான கருடசேவை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வேளையில் எல்லா தெருக்களிலும் கோலம் போட்டு அழகு பார்த்து வருகிறார்கள். ஆனால் செய்துங்கநல்லூர் வாரச்சந்தையில் மீன் வியாபாரிகள் நடுத்தெருவில் கழிவுகளை கொட்டி, அலக்கோலம் செய்து வருகின்றனர். இவர்களை சுகாதார துறையினர் கண்டு கொள்வதே இல்லை. இதனால் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகிறார்கள்.
செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இதைத்தவிர ஞாயிற்றுகிழமை, திங்கள்கிழமை, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகமான மீன் வியாபாரிகள் செய்துங்கநல்லூர் சந்தை அருகில் மொத்தமாக மீனை கொண்டு வந்து அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்கின்றனர். இவர்களிடம் 100க்கு மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்க வருகிறார்கள்.
அதிகமான வாகனங்களை கொண்டு வந்து ரோட்டில் நிறுத்திக் கொண்டு அதிகாலையில் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள். மேலும் இவர்கள் மீன்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு மிக அருகில் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயம், பள்ளிகூடம், வியாபார ஸ்தலங்கள், குடியிருப்புகள் உள்ளது. இவர்கள் இந்த பகுதியில் கழிவு மீன்களையும், கழிவு தண்ணீரையும் கொட்டி -சுகாதார சீர்கேடு விளைவிக்கிறார்கள்.
இன்று புரட்டாசி சனிக்கிழமை. எல்லா பெருமாள் கோயிலும் கருடசேவை நடைபெறும். இதனால் தெருக்களில் இந்துக்கள் கோலமிட்டு, பெருமாள் வரவை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். ஆனால் இந்த பகுதியில் தெருவில் ஆள்களே நடமாட முடியாத நிலையில் மீன் வியாபாரிகள் கழிவு நீரை சென்றுள்ளனர். இந்த மீன் கழிவுகளால் தெருவில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயத்தின் வாசலிலே இந்த கழிவு கொட்டப்படுவதால், கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்பவர்களும் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். அருகில் உணவு விடுதி உள்பட வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவர்களும் மூக்கை பொத்திக்கொண்டுதான் செல்ல வேண்டியது உள்ளது.
மீன் வியாபாரிகளுக்கென வாரச்சந்தையில் பல லட்சம் செலவு செய்து கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்திற்கு இவர்கள் செல்வது கிடையாது. இதனால் பஞ்சாயத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானமும் தடைபடுகிறது.
சுதாதார சீர்கேடு விளைவிக்கும் மீன் வியாபாரிகளை சுகாதார துறையினர் கண்டு கொள்ளவது இல்லை. சுகாதாரத்துறையினர் இந்த மீன் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதிகமாக அபராத தொகை விதித்தால் மட்டுமே அவர்கள் முறையாக வியாபாரம் செய்வார்கள். மேலும் இவர்கள் பஞ்சாயத்துக்கும் யூனியன் அலுவலகத்துக்கும் வருமானம் ஏற்படுவதை தடுத்தும் வருகின்றனர்.
தற்போது சாலை வாறுகால் கட்டும் பணி அறைகுறையாக நடந்து வருகிறது. இவர்கள் அந்த இடத்தில் சாலையை ஆக்கிரமிப்பு செய்வதால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாலையில் காவல் துறையினர் காவலர்களை நியமனம் செய்து, இந்த வியாபாரிகளை சந்தைக்குள் செல்ல அறிவுறுத்த வேண்டும்.
எனவே இந்த பகுதியில் சுகாதார கேடு விளைவிக்கும் மீன் வியாபாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


