திருநெல்வேலி மாவட்டம், டவுண் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன் சரவணனிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இன்று திருநெல்வேலியில் இருந்து இருவரும் ஸ்ரீவைகுண்டம் நோக்கி சரவணன் காரில் சென்று கொண்டிருந்தனர். கார் கருங்குளம் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. திடீரென அரசு பேருந்து மீது கார் வேகமாக மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த சரவணன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் இந்த விபத்தால் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர்செய்து விபத்தில் உயிரிழந்த முருகன் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


