திருச்செந்தூர் வந்து செல்லும் பாலக்காடு இரயில் கொரோனா காலத்திற்கு முன்பு வரை செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. அதன் பின் இயக்கப்பட்ட போது செய்துங்கநல்லூரில் ரயில் நின்று செல்லவில்லை. இதனை கண்டித்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகமும், செய்துங்கநல்லூர் வியாபாரிகள் சங்கமும் போரட்டம் நடத்தியது. இதில் செய்துங்கநல்லூர் தபால் நிலையத்தின் முன்பு தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன், செய்துங்கநல்லூர்பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார் உள்பட உள்ளூர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து முற்றுகை போரட்டம் நடத்த போராட்ட குழுவினர் ஏற்பாடு செய்த போது மாவட்ட ஆடசி தலைவர் மரு.கி செந்தில்ராஜ் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் ரயிலை நிறுத்த ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ் உடன் இருந்தார்.
இதற்கிடையில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி செந்தில்ராஜ் முறைப்படி மதுரை தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதன் படி விரைவில் பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நிறுத்துவதாக பொதுமேலாளர் அறிவித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நிறுத்த வேண்டும் என கனிமொழி எம்.பி அவர்களிடமும் மனு அளித்திருந்தார். அவர் மதுரை ரயில்வே பொதுமேலாளரிடமும், ரயில்வே அமைச்சரிடமும் செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்ல வேண்டும் என மனுவை கொடுத்திருந்தார். பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நிறுத்தவில்லை. இதனால் தொடர் முயற்சியில் ஊர்மக்கள், பஞ்சாயத்து நிர்வாகம், வியாபாரி சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்துங்கநல்லூர் வியாபாரி சங்கத்தினர் இதற்கான மனுவை செய்துங்கநல்லூர் ரயில் நிலைய அதிகாரி சித்திரை புத்திரனிடம் சங்க தலைவர் ஐயப்பன் தலைமையில் வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்தனர். அந்த மனுவில் செய்துங்க நல்லூரை சுற்றியுள்ள 42 கிராம மக்கள் இந்த ரயிலை ஆன்மீக ரீதியாக பழனி செல்வதற்கும் வணிகரீதியாக மதுரை மற்றும் கேரளா செல்லவும் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ரயில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதால் திருநெல்வேலி சென்று இந்த ரயிலை பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் திருநெல்வேலி புற நகர் பகுதியான கே.டி.சி நகர் உள்பட சுற்று பகுதி மக்கள் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் வந்து தான் ரயிலை பயன்படுத்துகிறார்கள். இதனால் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் முன்பதிவு உள்பட பல்வேறு பயணிகள் மூலமாக நல்ல வருமானம் வரும் ரயில் நிலையமாக மாறி விட்டது. எனவே திருச்செந்தூர்- பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் கனகராஜ் பூபாலராயன், வெண்ணிலா ஆறுமுகம், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் வேம்பு துரை, கந்தப்பன், பிரபா ஜெயபாண்டின், அப்துல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


