அடுத்த 10 வது நிமிடத்தில் வீரமாணிக்கபுரம் வந்து சேர்ந்தனர்.
அங்கு சிறிய வீடு ஒன்றிருந்தது. அந்த வீட்டில்தான் காளியும் செல்வியும் வசித்து வந்தார்கள்.
வீட்டு முன்னால் சிறிய கூட்டம் நின்றது. செல்விக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் அருகில் உள்ளவர்கள் பார்க்க வந்திருந்தனர். உள்ளே சென்றார் காளி. “என்ன செல்வி என்னாச்சு”.
காளியைப் பார்த்தவுடன் செல்வி தலையைத் தூக்கி பார்த்தாள்.
“ஒன்னுமில்லங்க. லேசா தலை சுத்துற மாதிரி இருக்கு”.
அருகில் வந்தார்
“உனக்கு ஒன்னும் செய்யாது செல்வி. கவலைப்படாதே”.
அலமாரி அருகில் சென்றார். ஒரு மாத்திரையை எடுத்து வந்து கொடுத்தார். தொடர்ந்து டம்ளரில் தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஏரல் சேர்மன் சாமி கோயில் திருமண்ணை எடுத்தார். அவள் நெற்றியில் பூசியப்படியே சொன்னார்.
“தண்ணீய குடி செல்வி. ஏரல் சேர்மன் சாமி இருக்காரு. உனக்கு ஒன்னும் செய்யாது.”
செல்வி குடித்தாள்.
5 நிமிடம் சென்றது.
“இப்போ எப்படி இருக்கு செல்வி”.
“பரவாயில்லங்க”.
“ஆஸ்பத்திரிக்கு போனுமா?”
“வேண்டாமுங்க”.
அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுவரை முகமெல்லாம் வேர்த்து விறுவிறுத்து போன செல்வி சகஜ நிலைக்கு வந்து இருந்தார்.
“என்னல தம்பி, உன் கை பட்டவுடனே உடம்பு குணமாயிட்டு”. பக்கத்து வீட்டு அக்கா செல்லத்தாய் சிரித்தாள்.
“ம். இன்னும் எவ்வளவு காரியம் செய்ய வேண்டி இருக்கு அக்கா. என் வீட்டுக்காரி அந்த காரியத்தை செய்யாம உயிர் விடமாட்டா”.
“என்னலே சொல்லுத”.
“ஆமாக்கா”
ஒன்றும் புரியாமல் விழித்தாள் செல்லத்தாய்.
“ அக்கா நம்ம தாமிரபரணியை சுத்தமான நதியா மாத்தணும். அதுவரை எனக்கும் செல்விக்கும் உயிரு போகாது” எரிச்சலாய் இருந்தது செல்லத்தாயிக்கு
“போல கிறுக்கு பயலை. தாமிரபரணியை காப்பாத்த போறானாம். முதல்ல உன் பொண்டாட்டியை காப்பாத்துல. உன் பெண்டாட்டிக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. முதல்ல நல்ல டாக்டரா பாரு. சும்மா உட்காந்துக்கிட்டு தாமிரபரணி அது இதுன்னு கிறுக்கு தனமா பேசாத?”
விரக்தியாக சிரித்தார் காளி.
“சரி லே, உன் பொண்டாட்டியை உன் கிட்டே பத்திரமா சேத்துட்டேன். பாத்துக்க.நல்ல பாத்துக்க. அவ இருந்தாதான் உனக்கு கஞ்சி கிஞ்சி காய்ச்சி ஊத்த முடியும்”. பெருமூச்சி விட்டாள். “ சரி எனக்கு வேலை நெறைய இருக்கு நான் வாரேன்”. கிளம்பி போய் விட்டாள் செல்லத்தாய்.
அழகேசன் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு ஓடியே வந்தான். “அண்ணே அக்காளுக்கு ஒன்னுமில்லையே”.
“ஒண்ணுமில்லைடா”.
“ஆஸ்பத்திரிக்கு போணுமா?”
“வேண்டாமுடா?”
அழகேசன் செல்வியை பார்த்தான். அவள் படுகையை விட்டு எழ முயற்சி செய்தாள். காளி அவளுக்கு உதவி செய்து தூக்கி வைத்தார். அழகேசனை பார்த்து புன்முறுவல் பூத்தாள் செல்வி.
“என்ன அக்கா எப்படி இருக்கீயே?. ஆஸ்பத்திரிக்கு போணுமா?”
“வேண்டாமுய்யா. நீ ஊருக்கு போ. நா எதும்னா சொல்றேன்”.
“சரி அக்கா”.
அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். பல வேலை. ஊரில் போட்டது போட்டபடி போட்டு விட்டு கிளம்பியிருந்தான்.
“அண்ணன் வாரேன்”. காளியிடம் வழி அனுப்பி விட்டு அழகேசன் ஊருக்கு கிளம்பி விட்டான். பாளை பஸ் ஸ்டாண்டுல இருந்து மினி பஸ் தருவைக்கு செல்லும். அவை அனைத்துமே வீரமாணிக்க புரம் வழியாகத்தான் செல்லும். எனவே நமக்கு ஆங்காங்கே போகத்தேவையில்லை. அந்த பஸ் இல் ஏறி முன்னீர் பள்ளம் போக வேண்டியது தான். என கிளம்பி விட்டான்.
யோசித்தார் காளி. சுமார் 35 வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வை நினைத்து பார்க்கிறார்.
அவர் கண் முன்னாடி 1988 ல் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
முன் இருட்டு நேரம். கார்த்திகை மாதம் முதல் நாள். பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள அந்த கிராமத்தில் தங்கம்மனுக்கு விளக்கு போட, அந்த ஊர் மக்களே கூடி நின்றனர்.
“ஆத்தா. நல்லா மழை பெய்யல. காடு கரை செழிக்கல. உன் பிள்ளையள பட்டினி போட்டுறாத”. கோயில் பூசாரி, அம்மனுக்கு தீபாரதனை காட்டியபடியே கோரிக்கை வைத்தார்.
மக்கள் எல்லோரும் அமைதியாக சாமியை கும்பிட்டபடியே நின்றனர்.
அதில் ஒரு பெருசு மட்டும் சத்தம் போட்டது. “யோவ் பூசாரி. கோயிலுக்கு ஒரு நேர செலவை நாம வாயை கட்டி வயித்தை கட்டி செலவழிக்கோம். இந்த அம்மன் என்ன கண்ணையா கட்டிக்கிட்டு இருக்கா? மழை பெய்ய மாட்டுக்கு மக்க சோத்துக்கு என்ன செய்வாவ”.
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். உண்மைத்தான் பொதிகை மலை அடிவாரத்தில் இருந்தும் கூட பருவ மழை பெய்யவில்லை. கேட்கத்தானே செய்வார்கள்.
“ஆத்தா உன் மவன் கேட்காமுல்லா. பதில் சொல்லு”. பூசாரி அம்மனை நோக்கி கேட்டார்.
அனைவரும் அமைதியாக நின்றனர். எங்கிருந்தும் பதில் வரவில்லை.
“என்னடே சாமி கொண்டாடிகளா? ஆ ன்னா. ஊன்னா ஆதாழி போட்டு ஆடுவியளே. என்ன சத்தம் காட்டாம இருக்கீய”. நாட்டாமை கேட்டார்.
பெருசு தான் பேசினார். “அவனுவ என்னடே செய்வானுவ. ஆதாழி வந்தா ஆடுவானுவ. ஆதாழி வராட்டி என்ன செய்வானுவ. பரக்கபரக்க த்தான் முழிப்பானுவ”.
இந்த பேச்சுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகதான் அந்த சம்பவம் நடந்தது.
எங்கோ இருந்தோ சொரிமுத்து அய்யனார் கோமரத்தாடி அந்த கூட்டத்துக்குள் புகுந்தார்.
“ஏலே வேறே எங்கோ வேட்டைக்கு போன சாமி, இங்க வந்துட்டுல்லே”. பெரிசு பேசினார்.
“எந்த சாமியா இருந்தா என்னடே. நம்ம கோட்டைக்குள்ள அடுத்த சாமி எப்படி வரலாம். என்ன ஏதுன்னு கேளுங்கடே”. நாட்டாமைக்கு கோவம் வந்தது.
“இருக்க சாமியே ஆடாம பரக்க பரக்க முழிக்கு. இதுல புது சாமி வேற” பூசாரிக்கு கோபம் வந்தது.
ஆனால் அந்த சாமியாடி யாரை பற்றியும் கவலைப்படவில்லை. கூட்டத்துக்குள் நுழைந்தார்.
“ஏடேய் நான் தான் சொரிமுத்து அய்யனார் வந்திருக்கேம்முலே”. என்றார்.
பெரிசு கொஞ்சம் நக்கல் பிடித்தவருதான். எக்களமாய் கேட்டார்.
“ சாமி. நீரு எதுக்கு இங்க வந்தீரு”.
“ஏடேய். என்னை தேடி இனிமே நீங்க மலைக்கு மேல வரவேண்டாம். நான் கீழேயே வந்திருதேன். என்னை இங்க வச்சே கும்பிடுங்கலே” உருட்டிய கண்களுடன் கையில் வைத்திருக்கும் பந்தத்தினை தூக்கிப்பிடித்தப்படியே சத்தமாக சொன்னார். அவர் சத்தம் அனைவரையும் திடுக்கிட வைத்தது.
ஆனால் குசும்புகார பெரிசு சும்மா இருக்க வில்லை.
“எதுக்கு சாமி”.
“ஏடேய் நீங்க வந்து திருவிழாவில என் தாய் ஆத்தை நாசப்படுத்திபுடுதீய. கண்டதை கழியதை ஆத்துல வீசுதீய. சாப்பிட்டுப் புட்டு கழிவை கொட்டுதீய. திருவிழா முடியும் போது என் தாய் தாமிரபரணி விஷமா ஆகி போறா”.
சாமி சொல்லுவதை அனைவரும் கவனமாகக் கேட்டனர்.
“அது மட்டுமா? நீங்க மரத்தை வெட்டினுய. இப்போ மழையே இல்லாம போச்சு. இனிமே நீங்க யாரும் என்னை தேடி வரவேண்டாமுடே. நான் கீழே வந்திருவேன். நீங்க மலைக்கு வரவும் வேண்டாம். அங்க வந்து மரம் வெட்டுறதை நிப்பாட்டுங்க. என் இயற்கையை அப்படியே விட்டுட்டா கூட போதும் மழை நல்லா பொழியும். அதை விட்டுட்டு மரத்தை வெட்டுதீய, தண்ணீயை மாசு படுத்துதீய. இயற்கையை இப்படி பண்ணுனா எப்படிடே மழை பெய்யும்”.
அவருடைய உருட்டிய கண்களை பார்த்தவுடன் அனைவருக்கும் பயம் வந்தது. பெருசு ரொம்ப பயப்பட ஆரம்பித்து விட்டார்.
“சாமி நாங்க உன் புள்ளையை தெரிஞ்சோ தெரியமலையோ அப்படி செஞ்சு புட்டோம். அதுக்காக மழை பெய்யாமல் இருந்தா எப்படி?. நாங்க சோத்துக்கு என்ன செய்வோம்”.
“ஏடே நான் சொல்றதை கேளுங்க. ஒழுங்கா இருங்க. இல்லாட்டி இயற்கை உங்களை சீரழிச்சிடும். ஆமா”.
சொரிமுத்து அய்யனார் சாமி, பயங்கரமாய் ஆட்டம் போட்டார். கூச்சல் போட்டார். அடுத்து திருநீரை எடுத்து அனைவரையும் நோக்கி வீசினார்.
அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, சாமி கிளம்ப ஆயத்தமானார். “சரி. நான் வந்த வழியே போறேன். கவனமா இருங்க”.
சாமி பந்தத்தை எடுத்து தோளில் வைத்தார். அடுத்த நிமிடம் அங்கிருந்து இருட்டுக்குள் ஓடினார்.
கொஞ்சம் கொஞ்சமா தூரத்தில் சிறு புள்ளியாய் பந்தம் தெரிய ஆரம்பித்தது. இறுதியில் காட்டுக்குள் போய் மறைந்தார் அந்த சொரிமுத்து அய்யனார்.
*****
மறுநாள் அந்த ஊரில் எல்லோரும் கூடினார்கள்.
“ஏடே, சாமி குத்தம் ஆகி போச்சுடே. நேத்து உண்மையிலேயே சொரிமுத்து அய்யனார் வந்துட்டாரு”.
“ஆமாண்டே அவரு கண்ணை பாத்தியா? எப்படி வெறி இருந்துச்சு”.
“ஏடே. நம்ம சொரிமுத்து அய்யனார் காக்கும் தெய்வம்தான். ஆனால் கோபம் வந்தா எல்லோரையும் தொலைச்சி புடுவாரு”
“ஆமாண்டே தெய்வமுன்னா சும்மாவா. ஏற்கனவே பொதிகை மலையில பாண்டியன் கோட்டையில வெள்ளிக்கிழமையானா விளக்கு எரியுது. அங்க யாரு போனாலும் மறு நாள் ரத்தம் கக்கி செத்து கிடக்காவ. எல்லாம் சாமி குத்தம் தான்”.
“சரி நமக்கு எதுக்கு வம்பு. நாம எதுக்கு மரம் வெட்ட போறோம். நம்ம வயல்வெளிக்குபோவோம். உழைப்போம். சாமி சொன்ன மாரி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு போன சும்மாவா வாரோம். கண்டது கழியதை ஆத்துல போட்டு தண்ணீயை நாசமாக்குதோம். சாமிக்கு கோபவம் வந்துட்டு, அதான் ராத்திரி வந்து சத்தம் போட்டுட்டு போவுது” பெரிசு சொல்லி முடித்தார்.
அவர்கள் மனதில் இயற்கை வளத்தினை அழிக்க கூடாது என தோன்றியது.
******
வனத்துறை அலுவலகம்.
உயிர் அதிகாரி காளி கையை பிடித்து குலுக்கினார்.
வெல்டன் காளிமுத்து. சிறப்பு உங்கள் நடிப்பை மக்கள் நம்பி விட்டார்கள்.
அருகில் செல்வி சிரித்தப்படியே நின்றாள்.
காளிமுத்துவும் & செல்வியும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர்கள். வனத்துறை மூலம் மக்களிடைய வனத்தை காப்பாற்ற வேண்டும் என இருவரும் அந்த தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். காளிமுத்துவுக்கோ வயது 25. கட்டிளங்காளை. இந்த பூமிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வம். 21 வயது நிரம்பிய செல்வியும் அவன் ஊரைச்சேர்ந்தவள் தான். அவளுக்கும் அவனை போலவே தான் ஆசை. ஆகவே தான் இந்த தொண்டு நிறுவனத்தில் சேர்ந்துள்ளாள்.
அதன் ஒரு கட்டமாகத்தான் நேற்று நடந்த சம்பவம். சொரிமுத்து அய்யனாராக காளி நேற்று இரவு வந்து அந்த கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினான்.
அந்த நடிப்பை தான் வனத்துறையினர் பாராட்டி கொண்டிருக்கிறார்கள். செல்விக்கு காளியை பாராட்டுவது ரொம்ப பிடித்திருந்தது.
செல்வியை பார்க்கிறான் காளி.
அவள் முகம் வெட்கத்தினாள் சிவந்தது.
அவர்கள் இருவரும் தாமிரபரணியை காப்பாற்றி விட்டோம் என பெருமிதம் கொண்டார்கள்.
ஆனால் 35 ஆண்டுகளுக்குள் இந்த நதி சாக்கடை நதியாக மாறப்போகிறது என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை. (நதி கூவமாவதை தடுக்க ஓடுவோம்)


