பத்மினி (சூன் 12, 1932 – செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.
17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார். ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார். பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார். இவை தவிர சிலோன் தியேட்டர்சின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள்.தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.
பத்மினி, 2006 செப்டம்பர் 24 ஞாயிறு இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.


