தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மிகவும் பழமையான ஊர். இவ்வூரில் உள்ள சிவபெருமான் வீரபாண்டிஸ்வரர் என்னும் முகில் வண்ண நாதர் என அழைக்கப்படுகிறார். தாயார் சிவகாமி அம்மையார். வீரபாண்டிய என்ற பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பதால் சிவனுககு இப்பெயர். எப்போதுமே மேக கூட்டங்கள் சூழலும் இடத்தில் தாமிரபரணி கரையில் இவர் அமர்ந்து இருப்பதால் இவருக்கு முகில் வண்ண நாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு சிவன் கோயில் மிக பிரமாண்டமாக இருந்துள்ளது. அதற்க்கு சாட்சி இக்கோயிலில் உள்ளே உள்ள பிரமாண்டமான விநாயகர், பைரவர், சிவகாமி அம்மாள் ஆகியோரின் சிலைகளாகும். பிரமாண்டமான கோயில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனவே பிற்காலத்தில் இவ்வூரை ஆண்டவர்கள், இந்த கோயிலை சிறிதாக கட்டி அதனுள் அனைத்து தெய்வங்களை பிரதிஷ்டை செய்து விட்டார்கள். அதன் பின் வழிபாடுகள் குறைந்தது சில நூற்றாண்டு காலமாக வழிபாடுகளும் தடைப்பட்டு போய் விட்டன. எனவே இக்கோயில் புகழும் மங்கி விட்டது. தற்போது கோயிலுக்குள் சிவலிங்கம், சிவகாமியம்மாள், பைரவர் உள்பட அனைத்து தெய்வங்களும் ஒரே வளாகத்துக்குள் உள்ளது. இந்த கோயிலில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நந்தி தற்போது வெளியே தெரிந்து, அதை ஊரில் மற்றொரு இடத்தில் வைத்து வணங்கி வருகிறார்கள். இதற்கிடையில்இந்த கோயில் வளாகத்தில் உள்ள மற்றொரு சன்னதியில் மிகப்பிரமாண்டமாக லட்சுமி நரசிம்மர் உள்ளார்.
தமிழகத்தில் லட்சுமி நரசிம்மர் தனிச்சன்னதி ஒரு சில இடங்களில் தான் காணப்படுகிறார். நெல்லை நகரத்தில் லட்சுமி நரசிம்மர் நெல்லைப்பர் கோயில் மேற்கு ரதவீதி அருகில் தனிச்சந்நதியில் மிகச் சிறப்பாக உள்ளார். மற்ற இடங்களில் லெட்சுமி நராயணரை போல லெட்சுமி நரசிம்மர் காணப்படுவது அபூர்வமாகத்தான் உள்ளது. எனவே முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் முக்கியத்துவம் பெறுகிறார்.
நரசிம்ம அவதாரத்தின் போது பெருமான் மிகுந்த கோபத்துடன் இரணியனை வதம் செய்தார். இரணியன் தனது மகன் பிரகலாதனை பகவானை வணங்கக் கூடாது என்று தடுக்க, அவன் முடியாது, நான் நாராயணனைத்தான் வணங்குவேன். என பிடிவாதமாக இருந்தான். “நாராயணா நாராயணா… என்று சொல்கிறாயே… உன் கடவுள் இந்த தூணில் இருப்பாரா…?” என இரணியன் கேட்கிறான். “அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என பிரகலாதன் கூறுகிறான்.இதனால் ஆத்திரமடைந்த இரணியன் அருகில் உள்ள தூணை உடைக்கிறான். அந்தச்சமயம் தூணில் இருந்து பகவான் நரசிம்மராக வெளியே வருகிறார். அவரின் கோபம் மிகப்பயங்கரமாக இருந்தது. இதனால் அவரின் காதில் இருந்து வெப்பம் புகையாக கிளம்பி அந்த இடத்தினையே பயங்கரமான சூழலாக மாற்றியது. கோபமாக இரணியனை வதம் செய்கிறார் நரசிம்மர். மிக கோரமான அந்த சம்பவம் முடிந்த பிறகும் கூட, அவரின் கோபம் தணிந்த பாடில்லை. அங்கிருந்து பொருள்களை தூக்கி எறிந்த வண்ணம் இருக்கிறார். தேவர்கள் கலங்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். லட்சுமி தேவியிடம் ஓடிச் சென்று எப்படியாவது பகவானை கோபம் தணித்து, பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லி அவரை வைகுண்டத்தில் இருந்து அழைத்து வருகிறார்கள். லட்சுமி தேவி ஓடோடி வந்தார். ஆனாலும் நெருப்பு கக்கும் கோபத்துடன் இருக்கும் பகவானைக் கண்டு அவரும் பயந்தே போய்விட்டார். “அய்யோ என்ன பயங்கரம்” என்று அந்த இடத்தினை விட்டு நகர்ந்தார். லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லையே. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த தேவர்கள் திகைத்து நின்றனர். அந்த சமயம் சிறுவனான பிரகலாதன் தைரியமாக பகவானை நோக்கி சென்றான். பின் பகவானின் மடியில் போய் தைரியமாக ஏறி கொண்டு அவரின் தலையை வருடி விட்டான். வெப்பம் கக்கும் கோபத்தில் இருந்த பகவானின் நாக்கு ஏதோ நீண்ட நெடுங்கை போல் நீட்டி கொண்டிருந்தது. கோபம் தணிய பகவான் அந்த நாக்கை கொண்டு பாலன் பிரகலாதன் முதுகில் தேய்த்து தனது சூட்டைத் தணித்தார். கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்து தன் பழைய நிலைக்கு வந்தார் நரசிம்மர்.
பகவானின் கோபம் தணிந்தபிறகே தேவர்கள் முனிவர்கள் ஏன் லெட்சுமி தேவியே அருகில் செல்ல முடிந்தது. அதன் பின் சாந்த ரூபத்தில் தேவர்களுக்கு லெட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்துள்ளனர். இந் நிகழ்ச்சியை காரணமாகவே முத்தாலங்குறிச்சியில் தனிச்சன்னதியில் லட்சுமி நரசிம்மர் அருள் தருகிறார். கோயில் பழுதடைந்து கிடந்த போது இதன் அருள் யாருக்கும் புலப்படவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கோயில் பிரபலமாகி வருகிறது. தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பலர் தங்கள் வெற்றி வேண்டி தனி பூஜைக்காக இங்கு வந்த போதுதான் இந்த சன்னதியின் அருள் அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது. இங்குள்ள லட்சுமி நரசிம்மரை கண்டு அதிசயத்து நின்றனர்.
ஒருவர் வெற்றி களிப்பில் இருக்கும் போது அவரிடம் என்ன கேட்டாலும், கேட்ட வரம் தருவார். இங்கே இரணியனை வதம்செய்து விட்டு, வெற்றி கழிப்பில் தனது தொடையில் லெட்சுமியை அமர வைத்து மிக சந்தோஷமாக இருக்கிறார். எனவே இங்கு வந்து வணங்கி நின்றால் வேண்டிய வரம் கிடைக்கிறது. எதிரிகள் தொல்லை குறைகிறது. தேர்வில் வெற்றி கிடைக்கிறது. நாள் பட்ட பிரச்சனைகள் தீர்கிறது. எனவே அவருக்கு அபிசேகம் செய்து அலங்காரம் ஆராதனை செய்து வேண்டிய வரம் பெற்று செல்கிறார்கள் பக்தர்கள்.
சிவன் கோயிலுக்கும் லெட்சுமி நரசிம்மர் கோயிலுக்கும் இடையே விநாயகர் குடி கொண்டிருக்கிறார். உருவத்தில் பெரியவர். 5 அடி உயரம் கொண்டவர் வெட்டவெளியில் வெயிலில் அமர்ந்து இருக்கிறார். இவருக்கு வெயிலுகந்த விநாயகர் என்றும், முக்குருணி அரிசி விநாயகர் என்றும் பெயர். ஊரணி மூக்கு கரையில் இருப்பதால் இவருக்கு முக்குருணி பிள்ளையார் என பெயர் பெற்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு முக்குருணி அரிசியில் கொழுக்கட்டை செய்து படையல் இட்டால் கேட்ட வரம் தருவராம். அதனால் சிலர் தங்கள் நிறைவேறுதல் நடைபெற கொழுக்கட்டை படையல் செய்து வருகிறார்.
இந்த விநாயகரை சிற்பி மிக பிரமாண்டமாக செதுக்கியுள்ளார். வயிற்றில் தொப்புள், பூநூல் உள்பட உடல் அமைப்புகள் அனைத்தும் தத்துருவமாக, மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது.
இவ்வூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நல்லபிள்ளைபெற்ற அம்மாள் என்ற குணவதி அம்மன் என்ற தாய் தெய்வமும் உள்ளது. கணவனை பிரிந்து வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்து பேறுகாலம் பார்த்த மருத்துவச்சி இவர். நல்ல ஆண்பிள்ளை பெற்றெடுக்க காரணமாக இருந்த காரணத்தினால் இவரை நல்ல ஆண் பிள்ளை பெற்ற குணவதி என்றும் அழைப்பர்.
அம்மன்தான் இவ்வூரின் காவல் தெய்வம். 7 தலை முறைக்கு முன்பே ஊரில் இருந்து வெளியூர் சென்றவர்களை தேடி கண்டு பிடித்து பிரசன்னம் மூலம் ஊருக்கு கூட்டி வந்த தெய்வம். அந்த வாரிசுகள் தான் அம்மன் கோயிலை கும்பாபிசேகம் செய்துள்ளார்கள்.
எப்போதுமே முகில் வண்ணம் நிறைந்து இருந்த இவ்வூரில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு முருகபக்தர் கந்தசாமி புலவர் என்பவருக்கு உணவு தர மறுத்த காரணத்தினால் ‘முத்தாலங்குறிச்சி முகில்வண்ண பெருமானுக்கு அன்றாட பூஜை, அரைநெல்லு சாவி. வரைபடி விதைச்சாலும் அரைப்படி தேயும் என சாபம் இட்டு விட்டாராம். எனவே தான் தற்போது இவ்வூரில் ஒரு போகம் கூட விளையவில்லை. இந்த கோயிலை திருப்பணி செய்து கும்பாபிசேகம் செய்தால்தான் அவரின் சாபம் தீரும் என பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே ஓரே வளாகத்தில் உள்ள வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், முக்குறுணி அரிசி பிள்ளையார் கோயில் திருப்பணியை துவங்கி புதிதாக ஆலயத்தினை கட்டி கும்பாபிசேகம் செய்ய திட்டமிட்டு அதற்காக அடிக்கல் நட்டியுள்ளனர். பக்தர்கள். விரைவில் திருப்பணி நடைபெறும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மேலும் இந்த கோவிலின் வரலாறு பற்றி அறிய, முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நவீன தாமிரபரணி மகாத்மியம் மற்றும் தவழ்ந்து வரும் தாமிரபரணி போன்ற தாமிரபரணி குறித்த புத்தகங்களை வாசிக்கலாம். அல்லது சமூக வலைதளத்தில் அமேசான் கிண்டல் இன்னும் பக்கத்தில் ஆன்லைன் மூலம் இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை. இந்த தினத்தில் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று உள்ளது


