செய்துங்கநல்லூரில் பெய்த தீடீர் மழை காரணத்தினால் மழை தண்ணீர் கடைக்குள் புகுந்தது. இதனால் வியாபாரிகள் அவதியுற்றனர். தென்னஞ்சோலை பகுதியில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.
செய்துங்கநல்லூரில் மாலை 6 மணிக்கு மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின் தீடீரென்று பெய்த மழை சுமார் 1 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ளம் சாலையில் ஓடியது. செய்துங்கநல்லூரில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது. சி.எஸ். ஐ கோயில் தெருவில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கியது. இதனால் ஆலயத்தில் நடைபெறும் ஆராதனைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். தென்னஞ்சோலை, அண்ணாநகர் பகுதியில் புகுந்த தண்ணீர் வீட்டுக்குள் சென்றது. திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள கடைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அரிசி,பருப்பு, சீனி போன்ற பொருள்கள் பாதிப்புக்கு உள்ளானது.
இதற்கிடையில் இன்று புதன் கிழமை செய்துங்கநல்லூரில் வார சந்தை நடந்தது. காலை முதல் மக்கள் கூட்டம் இல்லாமல் மந்தமாகவே காணப்பட்டது. இதனால் 6 மணிக்கு மேல் தான் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கையுடன் காத்து இருந்தனர். இந்த நிலையில் தீடீர் மழையால் சந்தைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. வியாபாரிகள் தார்பாய் கொண்டு தங்களது பொருள்களை மூடி காப்பாற்றிக்கொண்டனர். மழை முடிந்த பிறகு மீண்டும் வியாபாரம் சூடுபிடித்தது.


