“ஏலே ராசுக்குட்டி எங்களே போனே”
“இங்கத்தான் நிக்கேன் ஆச்சி. ஏன் கத்துற”
சரிதான்லே நான் சத்தம்போட்டா உனக்கு கத்துற மாரி தெரியுதோ? கிட இன்னைக்கு உனக்கு கதை கிடையாது.
“ஆச்சி அப்படி சொல்லாத ஆச்சி. நீ கத்தவே இல்லை சத்தம் போட்ட போதுமா?”
“ம்….” ஆச்சி கோபமாக சென்றாள்.
“ஏன் ஆச்சி கோபமா?”
ஆச்சி சத்தம் காட்டவில்லை.
“ஆச்சி நீ நேத்தே சொன்ன கதையில என் மனசு உருகி போச்சு. பாவம் அந்த அம்மா இப்படி தலையை அறுத்துப்புட்டானுவளேன்னு நினைச்சேன். அதனால இன்னைக்கு யாரு கூப்பிட்டாலும் என் காதுல விழவே இல்லை. தப்பா நினைச்சுகாத ஆச்சி”.
ஆச்சி. அவனை நிமிர்ந்து பார்த்தாள். “ஆமாண்டே இன்னைக்கும் அந்த பக்கம் போன குழலியம்மனை நினைச்சா. மனசுக்கு சங்கடமாத்தான் இருக்கும்”.
“சரி ஆச்சி. இன்னைக்கு ஒரு நல்ல கதையா சொல்லு”. ராசு குட்டி விடவில்லை.
ஆச்சி. “ம்” என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் மனதில் ஓடியது.
தாமிரபரணி நதி ஓடிவரும் நில பகுதியில் தான் எத்தனை எத்தனை சுடலை தெய்வங்கள். பல ரூபத்தில் அல்லவா காட்சியளிக்கிறார், சுடலை ஆண்டவர். ஊர்காட்டு சுடலை, சீவலப்பேரி சுடலை, மாரடிச்சான் சுடலை, அடுக்கு சுடலை, கூழையாத்து சுடலை, ஆறுமுக மங்கலம் சுடலை, பொழிக்கரை சுடலை, ஓத்தப்பனை சுடலை, எனப் பல வகையில் பலரூபங்களில், சுடலை பெயர்களை அடுக்கி கொண்டே போகலாம். நம் வீட்டு தெய்வமாகவே விளங்குகிறார் சுடலை. நமக்கு தவறு செய்பவர்களை நமது தாய் தந்தையர் எந்த அளவுக்கு வேகமாகச் சென்று தட்டிக் கேட்கிறார்களோ. அதுபோலவே சுடலை தட்டிக் கேட்கிறார். தப்பு செய்யும் எதிராளிகளுக்குத் தண்டனையை உடனே தருகிறார். அவள் சிந்தனை சுடலை ஆண்டவரை பற்றி ஓடிக்கொண்டிருக்கிறது.
“என்ன ஆச்சி இப்படி யோசிக்கிறீயோ. எனக்கு இப்படி கதை சொல்லு” என்றான் ராசுக்குட்டி. ஆச்சி சொல்ல ஆரம்பித்தாள்.
“சுடலை பல ரூபத்தில் வருவாரு. எங்கும் நிறைஞ்சு இருப்பாரு. அவரைப் புலையன் என்ற மந்திரவாதி சிமினியில அடைஞ்ச போது , அவரு அதை உடைத்து எறிஞ்சு விட்டு வெளியே வந்தாரு. பக்தர்களின் மனதுக்கேற்ப பல அதிசயங்களை புரிஞ்சவரு. பல அற்புதங்களை செஞ்சவரு. சுடலை தாமிரபரணி ஆத்தங்கரையில நிறைய இடத்தில இருக்காரு. இதில ஆத்தங்கரையில இருக்க ஐந்து மரத்து சுடலை ரொம்ப பேமஸ். ஆனா அவர விட இவரு ரொம்ப பிரமாண்டமா இருககிற ஐந்து மருதமரத்து அடியில இயற்கையில் தோன்றியவரு. அப்படியே வல்லநாடு பக்கம் போன, ஆத்துக்கு மறுகரையில் முறப்பநாடு ன்னு ஒரு ஊரு உண்டு. அந்த ஊரு பக்கத்துல , படுகையூருன்னு ஒரு சின்ன கிராமம். இங்க விவசாயம் செய்யுற மக்க மாரு குடியிருக்காவ. இவுக கும்பிடுற தெய்வம்தான் ஐந்து மரத்து சுடலை”.
“நல்லா இருக்கே. இந்த சுடலை பேரே நல்லா இருக்கே”.
“அந்த காலத்தில சுடலை இந்த இடத்தில அவரோட தாய் பேச்சியம்மா கூட வந்து அமர்ந்து இருந்திருக்காரு. ஆனால் யாருக்கும் தெரியலை. ஆத்துல வெள்ளம் வந்து வயக்காட்டை அழிச்ச போது இவரு வயக்காட்டுக்குள்ள புதைஞ்சி போயிட்டாரு. அந்த சமயத்தில இவரை யாரும் கண்டுக்கல”.
“ஐயோ அப்படியா. பொறவு எப்படி வெளிய தெரிஞ்சாரு?”.
“அதைதான் சொல்லப்போறேன். அமைதியா கேளு. கொஞ்ச காலம் இவரை யாரும் கவனிக்கல. இப்படி இருக்கும் போதுதான் இந்த மக்களுக்கு தான் உள்ள இருக்கிறது தெரியனுமுன்னு நினைச்சாரு. அதுக்காக நல்ல காலத்தையும் எதிர்நோககி கிட்டு இருந்தாரு”.
“அப்படியா?”
“என்ன நொப்படியா? சொல்லுறதை கேளு”.
“சரி ஆச்சி. நீ சொல்லு கேட்கேன்”.
“படுகையூர் உழவர் ஒருத்தரு தன்னோட வயலுல இறங்கி வேலை செஞ்சாரு. இந்த இடமெல்லாம் ஆதீனத்துககு சொந்தம். இவரு அந்த வயலில கூலிக்கு வேலை செஞ்சாரு. ஒரு நாள் இவரு உழுத போது கலப்பை சாமி தலையில போய் இடிச்சிகிட்டு நின்னுச்சு. அவ்வளவு தான் மறு நிமிடம் ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட ஆரம்பிச்சுட்டு. பயந்தே போனாரு. உடனே ஓடிப்போய் நாட்டாண்மை கிட்டே சொன்னாரு. இந்த தகவலை கேட்டவுடனே எல்லோரும் குய்யோ முறையோன்னு கூச்சல் போட்டுக்கிட்டு வயலை நோக்கி ஓடி வந்தாவ”.
“அப்போதான் வானத்துல இருந்து ஒரு குரல் கேட்டுச்சு. ‘பயப்படாதீய. நான் தான் சுடலை ஆண்டவரு, என் தாயாருடன் பல காலம் இந்த மண்ணுக்குள்ள புதைஞ்சி இருந்தோம். இப்போ உங்களுக்கு அருள்தர மீண்டும் காட்சி தந்தோம். எங்க இரண்டு பேரையும் எடுத்து பக்கத்தில இருக்கிற ஐந்து மருத மரத்துக்கு அடியில பிரதிட்சை செய்யுங்க நான் காக்கும் தெய்வமா இருந்து உங்களை காப்பாத்துவேன்னு சொன்னாரு. மக்க எல்லோருக்கும் கும்பிட்டு விழுந்தாவ. இந்த உலகத்தை ஆழும் மன்னரே எங்களை முள்மொறிவு இல்லாம காப்பாத்துங்கன்னு சொன்னாவ”.
“ உடனே ஈசான மடத்துக்கு ஓடிப்போனாவ. ஆதீனத்துக்கிட்ட நிலத்தை கேட்டாவ. ஈசனோட மவனுக்கு இடம் கொடுக்க மறுப்பாவளா ஆதீன கர்த்தா. உடனே கொடுத்துட்டாவ”.
“அதுக்கப்புறம் சாமியை நல்லா வணங்க ஆரம்பிச்சாவ. அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் நல்லா கும்பிடுவா. எல்லாரும் நல்லா இருக்காவ. இதுல என்ன தெரியுமா?. இந்த ஐந்து மரமும் பெரிசா வளர்ந்து சாமிக்கு கொடை பிடிச்சிக்கிட்டு நிக்கு. ஏதாவது புயல் வந்து கிளை ஒடிஞ்சா கூட உடனே இன்னொரு மரம் வளர்ந்துடும். இவரு சின்னதா தான் இருக்காரு. மூர்த்தி சிறிசானாலும், இவுக கீர்த்தி பெரிசா இருக்கு”.
“இந்த கோயிலுல கொடை விழா சிறப்பா நடக்கும். இவுக வேட்டைக்கு போறது வித்தியாசமா இருக்கும். சுடலை ஆண்டவருக்கு நேர்ச்சையாக கோழிகள் வரிசையா கட்டி வைச்சிருப்பாவ. அதுக்கு கீழே பனை ஓலையை விரிச்சி வைச்சிருப்பபாவ. சாமி வேட்டைக்கு போவும் போது சாமி ஓலையில தீயை கொளுத்திட்டு போவாரு சாமியாடி. அப்போ எரியிற தீயில கோழிகளை சுடும். இத சாமி ஏத்துக்கிடுவாரு”.
“நெருப்பு பட்டு கோழி கத்தாமலையா இருக்கும்”. ஆச்சரியமாக கேட்டான் ராசுகுட்டி.
“அது தான் சுடலை ஆண்டவர் அருள். எந்தக்கோழியும் சிறு சத்தம் கொடுக்காம தங்க உயிரை சுவாமியிடம் ஒப்படைப்பது ஆச்சரியம் தான்”.
“அப்படியா?”
“ஆமாம் இன்னும் சுடலை அருள் இருக்கு. இந்த கோயிலில் பெண் வழி மக்க தங்க வாழ்க்கையில முன்னேற தீர்த்தம் கொடுப்பாவ. அதாவது சுவாமிக்கு கோழியை தீர்த்தம் கொடுப்பாவ. அப்போ கோழியை சாமி நேரே நீட்டியவுடன் துள்ளாம துடிக்காம கோழிக்கு உயிர் போயிடும் . அதாவது சுவாமி நிழலில அந்த கோழி உயிர் ஐக்கியமாகிடும்”. ஆச்சி ஆச்சரியத்துடன் சொன்னார்.
“அப்படியா ஆச்சி ஆச்சரியமா இருக்கே”.
“அது மட்டுமா? ஆச்சரியம் அதிசயம் எல்லாம் ஐந்து மரத்து சுடலை கிட்டே உண்டு. இந்த கோயிலில் சுவாமி வேட்டைக்கு போவும் போது இவரை எதிர்ப்பார்த்து முன்னொரு காலத்தில பசியும் பட்டினியுமா செத்து போனா பிள்ளதாச்சி பெண் தன் எட்டு குழந்தையோட, ஓடை அருகே காத்து கிடப்பாளாம். இந்தப் பெண் அருகில் உள்ள கிராமத்தில் வாழ்ந்தவிய. இவுக தனது எட்டு பிள்ளைகளை வளக்க முடியாம கஷ்டப்பட்டு வந்தாள். தன் கணவர் தவிக்கவிட்டு ஓடிய காரணத்தினால் ஒருவேளை சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் தவிச்சி வந்தாரு. தினமும் குழந்தைகள் பட்டினி பசியோடு இருப்பதைப் பார்த்து மனம்நொந்து போனாவ இந்த பெண். இதனால சுடலை முன்னால போயி தமது உயிரை மாய்த்து கொள்ளனுமுன்னு முடிவு செஞ்சாவ. தனது எட்டு பிள்ளைகளையும் ஓடையில் தள்ளி முதலில் கொலை செய்தாவ. அதுக்கு பொறவு தானும் தற்கொலை பண்ணிக்கிட்டாவ. ஆனாலும் அவுகளுக்கும் குழந்தைகளுக்கும் மோட்சம் கிடைக்கல. அவுக விழுந்து இறந்த பிள்ளைதாச்சி ஓடையில இப்பவும் சுத்திக்கிட்டு திரியிறாவ. அவுகளுக்கும், குழந்தைகளும் பசி அடங்காம அலையிறாவ. கோயில் திருவிழாவில் திரளை கொடுத்து விட்டு ஊர் சுற்றி வரும் சுடலை சாமியாடி கிட்ட உணவு கேட்டு வருடந்தோறும் இவுக குடும்பத்தோட காத்து கிடப்பாவ”.
“சுடலையும் வேட்டைக்கு போயிட்டு , இடுகாட்டில் திரளை கொடுத்து விட்டு, அங்கிருந்து பிள்ளைதாச்சி ஓடைக்கு போவாரு. சுடலையை எதிர்பார்த்து தாயும் மக்களும் அங்கே பசியோடு காத்து நிப்பாவ. தங்கள் பசியைப் போக்கணும் என சுடலை ஆண்டவனை மறிச்சி நிப்பாவ”.
ராசுகுட்டி ஆச்சரியத்துடன் கேட்டுகொண்டே இருந்தான்.
“உடனே இவரு இடுப்பில் வைச்சிருக்கும், வெற்றிலையை எடுத்து போடுவார். பசியில் இருக்கும் தாயும் குழந்தைகளும் அதில் உள்ள உணவைச் சண்டை போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயம் சாமியாடி அங்கிருந்து கிளம்பி விடுவார்.
அவ்வேளையில் அவர்கள் சண்டையிடும் சத்தம் காச். பூச். எனக் கூச்சலாய் எதிரொலிக்கும். இந்தச் சத்தம் தூரத்தில் நின்னு வேட்டைக்கு போன சாமியின் வரவை எதிர்ப்பார்த்து காத்து இருப்பவர்களுக்கு ரொம்ப தெளிவா கேட்கும். இந்த ஆலயத்தில் ஐந்து மரத்து சுடலைக்காக சாமி ஆடுபவர் பெயர் சுடலை . இவருக்கும் ஐந்து மரத்து சாமி அருளில் தான் சாமி ஆட்டம் கிடைச்சுது. அதன் வரலாறு மிகவும் விசேசமாக்கும்”.
மற்றொரு கதையை சொல்ல ஆரம்பித்தாள் ஆச்சி. ஒரு கதையை தொட்டா மறு கதை வந்துக்கிட்டே இருக்கே.
“ சாமியாடி சுடலை வல்லநாட்டில படிச்சிகிட்டு இருந்தாரு. ஒரு சமயம் படுகையூரில் கோயிலு பக்கத்தில உட்காந்து படிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்போ இவரு மீது நாகப்பாம்பு ஒன்னு ஏறி தலை மேலே நின்னு படமெடுத்து ஆடிக்கிட்டு இருந்துச்சு. இதைச் சுடலை உணரவில்லை. ஆனால் எதிரே இருந்த மற்றொரு நண்பருக்கு இந்தக் காட்சி தெரிஞ்சது. இவரிடம் கூறினால் அவசரப்பட்டு உதறினால் பாம்பு கொட்டு புடும். அதனால அவர் பயந்தபடி ஐந்து மரத்தானை எண்ணி அப்படியே கண்ணை மூடி அமர்ந்து விட்டார்”.
“சிறிது நேரத்தில் நாகப்பாம்பு சுடலையின் உடலை விட்டு கீழே இறங்கி போயிட்டு. மாலையில நண்பர்கள் இரண்டு பேரும் வீடு வந்து சேர்ந்தாவ. இரண்டு பேரும் சுடலை மேலே பாம்பு நின்னு ஆடியதை யாருக்கிட்டேயும் சொல்லலை. ஆனால் அந்த அறிகுறிக்கான விடை அந்த வருடம் நடந்த கொடைவிழாவில எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு”.
“ஐந்து மரத்தானுக்குக் கோமரத்தானா இருந்தவர் சுடலையின் தாத்தா. இவர் இப்போ உயிரோடு இல்லை. இவருக்கு பின் முறைப்படி சுடலையின் தந்தை தான் ஐந்துமரத்தான் சுவாமி ஆடவேணும். கோயில் கொடைவிழாவில் மேளதாளத்தோட அவருக்குச் சுவாமி அருள் வர முயற்சி செஞ்சாவ. ஆனால் அவருக்குச் சுவாமி வரலை. ஆனால் ஓரத்தில நின்னுகிட்டு இருந்த சுடலைக்குத் திடீருன்னு சாமி அருள் வந்து, ஆடினாரு. அதன் பின் ‘நான் தான் ஐந்துமரத்தான்’ ன்னு பக்தர்களுக்கு அருள் கூறிவிட்டு, வேட்டைக்கு போயிட்டாரு”.
“அனைவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே போயிட்டாவ. அப்போ தான் நண்பர் மூலம் சுடலை தலை மீது பாம்பு படமெடுத்து ஆடிய அந்தச் சம்பவத்தை பத்தி சொன்னாவ. சுடலை தனக்கு சேவை செய்ய இவரு தான் ஏற்ற நபர், எனப் பாம்பு ரூபத்தில் அருளிவிட்டார் என நினைக்கும்போது ஐந்து மரத்தானின் அருளாசியை நாம் எப்படி கூற, இந்த ஆலயத்தினை அனைவரும் பயபக்தியுடனே வணங்கி வருகிறார்கள். இங்கு வந்து வணங்கி நின்றால் கேட்ட வரம் கிடைக்கும்”. ஆச்சி சொல்லி முடித்தாள்.
“ஆச்சி இந்த கோயில்கொடை விழாவுக்கு என்னை கூட்டிட்டு போவியா?”.
“வரட்டும் பாப்போம்”.
“ஆச்சியும் ரொம்ப நாளைக்கு முன்னால இந்த கோயிலுக்கு கொடைக்கு போயிருக்கா. படுகையூரில இருந்து வயல் வெளிக்குள் இறங்கி நடந்து போனா அங்க இயற்கையின் வனமாகக் விளங்கும் நாலுமரத்துக்கு அடியில சுடலை காட்சி தருவாரு. அதை பாத்து சந்தோசமடைஞ்சி இருக்கா. அந்த நாளு என்ன அழகான நாளுன்னு ஆச்சரியப்பட்டு இருக்கா”.
ஒரே வார்த்தையில் சொன்னாள் ஆச்சி.
“தாமிரபரணி ஆத்துல சலசலன்ன ஓடும் சத்தமும், மயில்களும், குயில்களும் மெல்லியதாய் இசை இசைக்க அங்கத்தான் அமர்ந்து அருள் புரியிறாரு நம்ம ஐந்து மரத்து சுடலை”.
அவரை நினைக்கும் போதே ஆச்சிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
அவளுக்கும் ஐந்து மரத்து சுடலை கோயிலுக்கு மீண்டும் போகணுமுன்னு ஆசை பிறந்தது.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


