தனுஷ் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான், புதுப்பேட்டை , பொல்லாதவன், ஆடுகளம் , வேலையில்லா பட்டதாரி, மாரி , அசுரன் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். ராஞ்சனா போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வென்றுள்ளார்.[7] இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[8]
தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படங்களைத் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.


