ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புனிதசந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. 10-வது திருவிழாவான நேற்று அதிகாலை 4.45 மணி, காலை 5.45 மணி மற்றும் காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஸ்டீபன்அந்தோணி ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் இருந்து மிக்கேல் தூதர் முன்செல்ல சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும், ஆலயத் திருத்தேரில் மாதாவும் காட்சியளித்தனர். திருத்தேரை மீனவ மக்கள், இறைமக்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து ஆலயம் சென்றடைந்தது.
இதில் குழந்தை ஏசுவை மாதா சுமந்தவாறு புனித சந்தியாகப்பர் தேர்பவனியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, பெரியதாழை, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம் உள்ளிட்ட கடலோர மீனவ மக்கள் குடும்பத்தினருடந் திரண்டிருந்து உப்பு, மிளகு, மலர் தூவி வழிபாடு நடத்தினர். ஏராளமான கிறிஸ்தவர்கள் குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த வழிபாட்டில் பல்வேறு மதங்களை சார்ந்தவர்களும் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.


