சிவாஜி கணேசன் (1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.


