தூத்துக்குடி – மீளவிட்டான் இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையிலான 158.81 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் ரூ.1890.66 கோடி செலவில் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இறுதியாக மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையம் வரையிலான 7.67 கிலோமீட்டர் தூர இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து பெங்களூரு தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் மதுக்கர் சவுத்ரி இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய இரட்டை ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தினார். இன்று காலை மீளவிட்டானில் இருந்து மோட்டார் டிராலி மூலம் தண்டவாள பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா, மின்மயமாக்க பணிகள் தரமாக செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மதியம் அதிவேக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி தட்டப்பாறை ரயில் நிலைய்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ரயில் என்ஜின் புறப்பட்டு, 4 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைந்தது. பின்னர் 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு தட்டப்பாறையை சென்றடைந்தது. ஆய்வு பணிகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி முதல் தட்டப்பாறை வரையிலான ரயில்வே தண்டவாளங்களின் உறுதித்தன்மை, சிக்னல்கள், இடைப்பட்ட ரயில் நிலையங்கள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் இந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.
ஆய்வின்போது, தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை நிா்வாக அதிகாரி வி.கே. குப்தா, தலைமை பொறியாளா்கள் வி. தவமணிபாண்டி, கே. மஸ்தான் ராவ், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் தலைமை திட்ட மேலாளா் கமலாகர ரெட்டி, திட்ட மேலாளா் பத்மநாபன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். அதிவேக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் காரணமாக மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி ரயில் நிலையம் வரையிலான தண்டவாளத்தின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


