தென்மேற்கு பருவமழை தாமதமாகி வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்காக ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் 14 கூட்டு குடிநீர் திட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உறை கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் இன்றி வறண்டு மணல் திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி, நாசரேத் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மணிமுத்தாறு அணையிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்ட உறை கிணறுகளுக்கு எதிர்ப்புறம் தண்ணீர் செல்கிறது. இதனால் தண்ணீர் திறந்து விடப்பட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் குடிநீர் வடிகால் துறை, பொதுப்பணித்துறை, மற்றும் வருவாய்த் துறையினரோடு இணைந்து ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட உறை கிணறுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, உறைக் கிணறுகளுக்கு எதிர்ப்புறம் செல்லும் தண்ணீரை கூட்டுக் குடிநீர் திட்ட உறைக் கிணறுகள் வழியாக தண்ணீர் செல்லும் வகையில் தண்ணீரை திருப்பி விட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த பணிகளை பார்வையிடுவதற்காக நேரில் வருகை தந்தார். அவர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் வருகின்ற தண்ணீரை பார்த்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ராட்சத இயந்திரம் மூலம் கூட்டுக் குடிநீர் திட்ட உறைகிணறுகளுக்கு தண்ணீர் திருப்பி விடும் பணிகளை அவர் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் வருகை தந்தனர். தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,
குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆற்றில் உள்ள உறை கிணறுகள் அருகில் தண்ணீர் வரும் வகையில் ராட்சத இயந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கூடுதலாக தண்ணீர் திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றை தூய்மை படுத்துவதுடன் நீர்நிலைகள் அனைத்தையும் சீரமைக்கும் பணி விரைவில் நடைபெறும் என்றார் அவர்.


