தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள பொன்னங்குறிச்சி சுப்பிரமணியபுரத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணறுகளை பார்வையிடுவதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் நேரில் வருகை தந்தார். ஆனால் அணைக்கட்டு பகுதியில் உறைகிணறுகள் உள்ள பகுதியில் கார்கள் செல்ல முடியாமல் இருந்தது.
உடனே பாதுகாப்பிற்காக உடன் வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் புல்லட் பைக்கை வாங்கிய மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்ல தயாரானார். அவருடன் ஆய்வுக்கு சென்ற ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களையும் பின்னால் அமர வைத்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் பைக்கில் சென்று அதன் பின் உறைகிணறுகளை ஆய்வு செய்தார்.
மதியம் சுமார் 12 மணி அளவில் உச்சி வெயிலில் தண்ணீர் இல்லாத தாமிரபரணி ஆற்றில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.


