தாமிரபரணி ஆற்றில் கடைசி அணைக்கட்டாக விளங்குவது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு பகுதியில் நவத்திருப்பதி ஸ்தலங்களில் முதல் ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் பின்புறம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது திருமஞ்சன படித்துறை. இந்த படித்துறை மிகவும் விசேஷம் வாய்ந்தது.
கோவில்களில் விழாக்காலங்களில் இங்கிருந்து தான் புனித நீர் எடுக்கப்படும்.
ஆனால் கடந்த காலங்களில் இந்த திருமஞ்சன படித்துறை மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் யாரும் அதனை சீரமைக்க முன்வரவில்லை.
இந்த நிலையில் அன்னை தாமிரபரணி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரிடம் நிதி உதவி பெற்று இந்த திருமஞ்சன படித்துறையை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன் பயனாக இன்று இந்த திருமஞ்சன படித்துறை சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


