ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் ரேசன் கடையின் மேற்கூரை மற்றும் கட்டிட சுவர்கள் பழுதாகிய நிலையில் மாற்று கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் தங்களுக்கு புதிய ரேசன் கடை கட்டித்தந்திட வேண்டும் என்று ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15லட்சம் திட்டமதிப்பில் புதிய ரேசன் கடை கட்டுவதற்கு அனுமதி அளித்தார்.
இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் இன்று ஆறாம்பண்ணையில் புதிய ரேசன் கடையை திறந்து வைக்க ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் வருகை தந்தார்.
அவர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்து ரேசன் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு சங்க தலைவர் அய்யாத்துரை பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
அதனை தொடர்ந்து ஆறாம்பண்ணை நாடார் தெருவில் ரூபாய் 6.70 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற நிதிமிகை மாநில திட்டத்திலிருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து ஆறாம்பண்ணை ஆதிதிராவிடர் காலனியில் 6.85 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற நிதிமிகை மாநில திட்டத்திலிருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்ஹரீம், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட துணை தலைவர் சங்கர், காங்கிரஸ் பொருளாளர் எடிசன், கருங்குளம் காங்கிரஸ் வட்டார தலைவர் புங்கன் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.


