தூத்துக்குடியில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த சிறுவனுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவர் ஹர்சன் என்பவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தொடர்ந்து 7 மணி 30 நிமிடம் 2 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து அந்த சிறுவன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில் மாணவனின் பெற்றோர் கிருஷ்ணபிரபு, தேவி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்பி வாழ்த்து
இதேபோன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, சிறுவன் ஹர்சனுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏழரை மணி நேரம் நீரில் மிதந்து குளோபல் உலக சாதனை படைத்து இருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த ஹர்சன், இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.


