திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே வண்ண ஆடை அணிந்து கும்மி பாட்டு பாடி, நடனமாடி வழிபாடு செய்தனா்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சோ்ந்த கொங்குநாடு கலைக் குழு சாா்பில், வள்ளியம்மாள் வரலாறு, வள்ளி-முருகன் திருமணம் குறித்து ஆண்டுதோறும் ஏதாவது ஒரு முருகன் கோயிலில் கும்மி பாட்டு பாடி நடனமாடி வழிபாடு நடத்துவது வழக்கம். நிகழாண்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஆசிரியா் தமிழச்சி தாரணி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி-முருகன் திருமணம் குறித்து கும்மி பாட்டு பாடியும், நடனமாடியும் வழிபாடு செய்தனா்.
இதில் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 7 வயது சிறுமி முதல் 70 வயதுள்ள பெண்கள் வரை கலந்து கொண்டனா். ‘ஒரே குழுவாக இணைந்து கும்மி பாட்டு நடனம் ஆடுவதால் மன அழுத்தம் நீங்கி, உடலும் மனமும் ஆரோக்கியம் அடைவதோடு, தன்னம்பிக்கை ஏற்படுகிறது’ என்று அவா்கள் கூறினா்.


