55. முத்து கிளி
தொடர் கதை – முத்தாலங்குறிச்சி காமராசு
முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்கி விடுகிறார்கள்.
இனி.
56. துரத்திய போலீஸ்- சிட்டாய் பறந்த ராஜதுரை
நினைத்து பார்க்கும் போதே வருத்தமாக இருந்தது. சாதிக்காக வாழ்ந்தவன். இந்த பனையேறி குடும்பம் காரை வீட்டில் குடியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன். அதற்கான உறக்காமல் பல நாள் தவித்தவன். தற்போது அவன் ஆசைப்படி கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது.
சரியாக 15 நாள் பொறுத்து இருந்தால் போதும், புது வீட்டில் பால் காய்ச்சி விடலாம். அதற்குள் இப்படியரு பிரச்சனை.
ராஜதுரையை எப்படியாவது கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்றுதான் நடராஜன் அய்யரின் திட்டம். ஆகவேதான் கொலைப் பலியை இவன்மீது தூக்கி போட்டு விட்டார்.
அது தெரியாமல் ராஜ துரை மிகவும் சந்தோசமாக இருக்கிறான். ஒவ்வொரு வீடாக சென்று வீடு கட்டும் பணியை பார்வையிடுகிறான். குழந்தைகளோடு குழந்தையாக நிற்கிறான். ஒவ்வொருவருக்கும் உதவி செய்து பொருள்களை அள்ளிக்கொண்டு வைக்கிறான். சிலருக்கு ஓடு போடும் பணி. சிலருக்கு காரை கட்டிடம் கட்டும் பணி. சிலருக்கு வெள்ளையடிக்கும் பணி என வேகமாக நடந்து கொண்டிருந்தது.
உழைக்கும் கூட்டம் அல்லவா? வருடம் வருடம் ஓலை வீடு கட்டி , அதை பிரித்து பிரித்து கட்டிக்கொண்டிருந்து மக்கள் இப்போது ஓடு வீட்டையும், காரை வீட்டையும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக தாங்கள் உழைத்து பொருள் கொடுத்தவர்கள், இன்று தங்களுக்காக அந்த பொருளை பயன்படுத்துகிறார்கள்.
என்னவெல்லாம் செய்தார்கள் பாவிகள். இந்த உழைப்பாளி மனிதர்களை நிம்மதியாக கூரைவீட்டில் தூங்க விடாலம் நெருப்பு வைத்தல்லவா கொளுத்தினார்கள்.
ராஜதுரை கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்.
நம்ம மக்கள் எல்லோருக்கும் காரை வீடு கட்டும் பணி ஆரம்பித்து விட்டோம். எப்படியும் மழை காலத்துக்கு முன்னால் அனைவரும் இந்த வீட்டில் குடியேறிவிடுவார்கள்.
சேம்பர் முதலாளி நல்லபடியாக ஒத்துழைப்பு தருகிறார். மக்களின் உழைப்பு அவருக்கு உற்சாகத்தினை ஊட்டியது. எனவே செங்கல்கள் உருவாகி, உள்ளூர் தேவைக்கு போக கூடுதலாக ஏற்று மதி அனது. இந்த ஊரில் மண் வாகு, மக்களின் உழைப்பு தரமான செங்கற்கள் உருவானது. எனவே இந்த ஊர் செங்கலுக்கு என்று தனி மவுசு ஏற்பட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்த வருடம் தூத்துக்குடி துறைமுகம் மூலமாக வெளிநாட்டுக்கே செங்கல் ஏற்றுமதி செய்து விடலாம்.
அனைவருக்கும் சந்தோசம். ஆனால் அதற்குள் இப்படி ஒரு பேரிடி வருகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதுவும் இதற்கெல்லாம் காரணகர்த்தாவான ராஜதுரைக்கு பிரச்சனை வரப்போகிறது என்பது அந்த ஊர் மக்களும் அறிந்திருக்கவில்லை.
அய்யர் அனுப்பிய காவலாளி போலீஸ் ஸ்டேசன் ஓடிப்போனான்.
“ஏட்டைய்யா. அந்த ராஜதுரை பைய நம்ம காவலாளியை கொன்னு கிணத்துக்குள்ள தூக்கி போட்டுட்டுடான். நானும் நடராஜன் அய்யரும் கண்ணால பாத்தோம்”. என்று மூஞ்சிறைக்க சொன்னான்.
“என்னலே சொல்லுத”.
“ஆமாம் ஏட்டையா நீங்க வாங்க. அங்க கிணத்துல பணம் மிதக்குது”.
என்றான்.
மறு நிமிடம் ஏட்டையா மைக்கில் பேசினார். எதிரில் சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம் பேசினார்.
“ஓவர் ஓவர். மைக் ஒன் போலிஸ் ஸ்டேஷன் ஓவர். ஏட்டையா பேசுறேன் ஓவர். என் லிமிட்டுக்குள்ள ஒரு கொலை நடந்துருக்கு ஓவர்”. என்று ஏட்டு ஆரம்பித்தார்.
“என்ன சொல்றீங்க ஏட்டு. ஓவர்”
“ஆமாம் கொலையாளி யாருன்னு தெரிஞ்சு போச்சு . சாட்சியும் இருக்கு ஓவர்”.
“என்ன காரணம். ஏதுன்னு விசாரிச்சீங்களா? ஏட்டு ஓவர்”
“ஏற்கனவே மேட்டிவ் இருந்து இருக்கு ஓவர். கொஞ்சம் போலீஸ் கூட்டம் வேணும் ஓவர். இல்லாட்டி சாதி கலவரம் வெடிச்சிரும் ஓவர்”
இன்ஸ்பெக்டர் அதிர்ந்தார்.
“நீங்க ஸ்பாட்டுக்கு போங்க. நாங்க வாறோம். ஓவர்”.
ஏட்டையா தனது சைக்கிளை தூக்கிக்கொண்டு வேகமாக ஸ்பாட்டுக்கு கிளம்பினார்.
***
பொன்னு நாடார் மூச்சிறைக்க ஒடி வந்தார்.
“ஏலே ராஜதுரை என்னால காரியமுல்லே செஞ்ச”.
அவர் ஓடி வரும் அவசரத்தினை பார்த்து அதிர்ந்தான் ராஜதுரை.
“என்ன தாத்தா சொல்லுதிய?”.
“ஏலே அந்த அய்யர் வீட்டு காவலாளியை நீ கொன்னு கிணத்துல தூக்கி போட்டிட்டுயாமே?. வாஸ்தவமா?”.
அதிர்ச்சியின் உற்சாத்திற்கே போய் விட்டான்.
“என்ன தாத்தா சொல்லுதீய. நான் அதை ஏன் செய்யப்போறேன்”.
“இல்லை. லே. எனக்கு நம்பிக்கை இல்லையிலே. ஆனா ஏட்டையா வந்து அய்யர் தோப்பு கிணத்துல நிக்காரு. அங்க அந்த காவலாளி பொணம் மிதக்குது. அய்யர் ஒன்னைத்தான் கொலையாளின்னு சொல்றாரு. கொலை செய்யும் போது பாத்தேன்னு சாட்டி வேறே சொல்லுதாருலே”.
அவர் சொல்வதை கேட்டு உறைந்து நின்றான் ராஜதுரை.
அதற்குள் உலக்க நாடார் ஓடி வந்தார்.
“ஏலே பொசக்கெட்ட பயலுவ. பொய் கேஸ் போடப்போறானுவ. நம்ம ராஜ துரைதான் நம்ம ஊரு முன்னேற்றத்துக்கும், இந்த பனையேறி மக்களுக்கே சப்போர்ட் பண்ணுதான். அவன் இன்னும் இங்க இருந்தா நிறைய முன்னேற்றம் வந்துடும். அவனை ஒச்சிக்கட்டணுமுன்னு முடிவு செஞ்சுட்டானுவடே. அதான் இவனை ஜெயிலுபிடிச்சு போடனுமுன்னு முடிவு செஞ்சிட்டானுவ”.
ராஜ துரைக்கு எல்லாமே புரிந்தது. நம்மள சுத்தி வலை பின்னல் நடந்து இருக்கு.
“இப்ப என்ன செய்ய”. யோசனையில் அப்படியே இருந்தான்.
அதற்குள் மக்கள் கூட்டம் கூடியது.
“ஏலே இப்படி தொபு தொபுன்னு கூட்டம் கூட்டி பிரயோசனமில்லை. போறப்போக்கப் பார்த்த ராஜதுரையை கைது செஞ்சு புடுவானுவ போல தெரியுது. முதலில நாம ராஜதுரையை காப்பாத்தணும்”.
ராஜ துரை மௌனமாக இருந்தான்.
அவன் மனதுக்குள் தான் கைது ஆவது பெரியதாக தெரியவில்லை. ஆனால் ஏக்கம் இருந்தது.
இன்னும் ஒரு மாதம் இங்கிருந்து, இந்த மக்கள் வீடு கட்டி, அதில் குடியேறுவதை பார்க்கணுமுன்னு நினைச்சான். ஆனால் விதி வேறு மாதிரி அல்லவா வேலை செய்யுது. நிச்சயம் அந்த காவலாளியை அன்னைக்கு தீ வச்ச போது பாத்து ஒரு அடி கொடுத்தது நான் தான். காலை திருவி விட்டேன். ஆனால் உயிர்போக அவனை அடிக்கலையே. அது தான் போகுது. அதுக்கப்புறம் அவனை பாக்கவே இல்லை. இது அய்யரோட சதி. என்ன செய்ய?.
யோசனை செய்தான்.
உலக்க நாடார் சொன்னார்.
“ஏலே கிட்டு, நீ என் வீட்டுல ஒரு கேரியல் வைச்ச சைக்கிள் இருக்கு. அதை தூக்கிட்டு வா. இவனை வண்டியில ஏத்தி மேலே ரோட்டுல கொண்டு போய் பஸ் ஏத்தி விட்டுறு”. என்றார்.
“இல்லை தாத்தா வேண்டாம்”. ராஜதுரை தடுத்தான்.
“என்ன தான் நடக்கும் பார்ப்போம் உண்மை எப்போதும் ஜெயிக்கும். நான் போலீஸ் ஸ்டேசன் போய் சரணடைஞ்சிருதேன். அப்புறம் கோர்ட்டில வாதாடி பாத்திருவோம்”. உறுதியாக சொன்னான்.
“போல பொசங்கெட்ட பயலை. நம்ம சாதி காரவியளுக்கு சப்போர்ட் பண்ண யாரு இருக்கா?. நாமா அனாதை பயலுவ. உள்ளே மாட்டிட்டா உடவே மாட்டானுவ. அடிச்சே கொன்னு புடுவானுவ. அது மட்டுமா?. உனக்கு நிச்சயம் தூக்கு தண்ட¬ ன வாங்கி தந்து புடுவானுவ. இந்த அய்யமாருவ விளங்காதவனுவ” உலக்க நாடாருக்கு ஆத்திரமாக பேசினார்.
பொன்னுநாடார் சொன்னார். “நம்ம இனத்துக்கே சுதந்திரம் வாங்கி தந்த மாறி தந்திருக்க. நம்ம சாதி ஒரு நாளும் உன்னை மறக்காது. நீ. தைரியாம போ. கொஞ்ச நாளு தலைமறைவா இரு. எல்லாம் சரியாயிடும். அதுகப்புறம் நான் சொல்லி வுடுதேன். நீ கண்டிப்பா இந்த ஊருக்கு வந்துரு”.
கொஞ்சம் கொஞ்சமாக ராஜதுரை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் அவனை சுற்றி அரணாக நின்றனர்.
“ஏலே எந்த போலீஸ் மயிரும் வரட்டும். பாத்திருவோம். ராஜதுரையை கைது பண்ண விடக்கூடாது”
ராஜ துரை யோசித்தான். அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. “இந்த மக்களை விட்டு போகப்போறேன். எங்கே போகபோறேன். எப்படி வாழப்போறேன். நான் தினமும் குளிச்சி, அனுபவித்த இந்த தாமிரபரணியை விட்டு போகப்போறேன். இதுபான்ற குளிர்ச்சியான என் நதியில இனிமே குளிக்க முடியுமா? என் தென்னைமரம், நான் தினமும் காத்து வாங்கி அரட்டை அடிக்கும் சங்கமடம். உலக்க தாத்தா, பொன்னு தாத்தா. இந்த மண், இந்த கோயில் , இந்த மரம். என் பூமி இதை விட்டு உடனே போகப்போறன். அவன் மனமே கனத்து விட்டது.
என் சாதி, என் சனம். நான் யாரை காக்கா போரோடினேனோ. அவர்கள் நல்லா வாழப்போற வாழ்க்கையை பாக்காமலே போகப்போறேன்.
கண்ணீர் வந்தது. இவனுக்கு மட்டுமல்ல சுற்றி இருந்தவர்களுக்கும் கண்ணீர் வந்தது. பாட்டி ஒருத்தி அழுதபடியே தனது முந்தானையை வாயிக்குள் வைத்து அழுகையை நிப்பாட்டி பார்த்தாள், முடியவில்லை. அவள் அழுகை ஒப்பாரியாக வெளிபட்டது.
“என் ராஜா.
மாட மாளிகை வேணுமுன்னு
மகராஜா வாழ்ந்தியே.
மாடமும் வந்தாச்சு, மாளிகையும் கட்டியாச்சு,
மகராஜா நீ போறீயே” ன்னு ஒப்பாரி வைத்தார்.
உலக்க நாடார் சொன்னார்.
இதற்குள் போலீஸ் வாகனங்கள் ஊருக்குள் வரும் சத்தம் கேட்டது. அனைவரும் பரபரப்பானார்கள்.
“ஏலே சைக்கிளும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். இவன் கூட யாரும் போகவும் வேண்டாம். இவன் சிங்கமுல்லே. யாரும் கூடப்போனத்தான் தப்பி. இவன் தன்னந்தனியா ஜெயிச்சு காட்டுவான்லே. எங்க குல சிங்கம்.” என்று கூறி விட்டு ராஜதுரையை பார்த்தார், “ஏலே ராஜ துரை நீ ஒத்தையில நம்ம வயக்காடு வழியா போ. மாவடிக்கா போயி. அங்க ஆலங்கால் வழியே போய், அப்படியே பக்கத்து ஊரு சிவன் கோயில் வழியா போ. பஜாருல ஒளிஞ்சு நில்லு. பஸ் வந்தவுடனே ஏறி ஓடிரு”. என்றார்.
இப்போதுதான் ராஜதுரைக்கு உணர்ச்சி பொங்கியது.
“தர்த்தா என்னை கோழை போல ஓடச்சொல்லுறார். செய்யாத தவறுக்காக என்னை விரட்டுகிறார்”.
யோசித்தான். ஆனால் தாத்தா சொல்வது சரிதான். ஓடிற வேண்டியது தான்.
“ஏற்கனவே தாய் இல்லை. தந்தை இல்லை. இந்த சாதி சனம் தான் நமக்கு எல்லாமுன்னு நினைச்சேன். இந்த பனையேறி குடும்பமும என்னை விரட்டுது. எனக்குன்னு வீடு இல்லை. இப்பவும் கட்டலை. உடுக்க துணியும் இல்லை. படுக்க பாயிம் இல்லை. ”
என்ன செய்ய. யாரிடமும் பேசவில்லை.
கையில் என்ன கொண்டு வந்தான் கொண்டு செல்ல. மாற்று துணி ஒன்று மட்டும்தான் வைத்திருந்தான். அதுவும் தேவையில்லை.
மனசா அக்கா ஓடியே வந்தாள். “யய்யா இந்த 10 ருபாய் வச்சிக்கு செலவுக்கு என்ன செய்வ” . என ஒரு 10 ரூபாய்தாளை கொண்டு வந்தாள். அதை வாங்கி கொண்டான்.
யாரிடமும் பேச வில்லை. அங்கிருந்து கிளம்பினான். வயற்காட்டுக்குள் குதித்தான். வரப்பு காட்டு வழியாக நடக்க ஆரம்பித்தான். தூரத்தில் போலீஸ் வேனும், போலீஸ் விசில் அடிக்கும் சத்தமும். பூட்ஸ் காலால் ஓடி வரும் சத்தமும் கேட்டது.
ஓட்டமெடுத்தான். இவர்கள் கையில் கிடைக்க கூடாது. என அந்த இருட்டுக்குள் பச்சைபசேல் என தெரிந்து வரப்பு வழியே ஓடினான். அந்த சிறு வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் பௌர்ணமி நிலவு பட்டு வெளிச்சம் தெறித்தொடியது.
அடுத்த 15 நிமிடம் பக்கத்து ஊர் பஜாரில் பஸ் ஏறி விட்டான். தொடர்ந்து 1 மணி நேரத்தில் வீராபுரம் சென்றான்.
எல்லாமே வெறுமையாக இருந்தது. ஒரு போலீஸ் காரர்களை பார்த்தாலும் அவர்கள் இவனை தேடுவதாகவே தெரிந்தது.
அங்கிருந்து எங்கே செல்ல. இனி என் வாழ்க்கை தான் என்ன?
யோசிக்க ஆரம்பித்தான்.
அந்த யோசனையெல்லாம் இவன் கண் முன் பெரிய இருட்டை தான் கொண்டு நிறுத்தியது.
****
போலீஸ் பட்டாளம் ஊருக்குள் புகுந்தது.
தட தட வென பூட்ஸ் கால் சத்தம்.
“ஏலே சட்டி போலீஸ் ஊருக்குள்ள வருது. அடிச்சி கோப்பாவ. எவனும் வாய் திறந்து புடாதீய” என்றார் பொன்னு நாடார்.
அவர் சொன்ன மாதிரியே ,அங்கே கூட்டமாக நின்ற மக்களிடம் போலீஸ் வந்தது. ஒருவர் உயரமாக, முழுகால்சடடை போட்டு கம்பீரமாக இருந்தார். அவர்தான் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் போல. அவர் தான் மக்களிடையே பேசினார்.
“எங்கேலே அந்த ராஜதுரை”
கோபமாக கேட்டார்.
“தெரியலை எஜமான்”. உலக்கநாடார்.
“பொய் சொல்லாதவே. நீர் தான் ஊர் பெரிய மனுசன் உம்மை தூக்கி உள்ள வைச்சி புடுவேன். உம்மை உள்ள வைச்சத்தான் உண்மை வெளியே வரும்” என்று அதட்டினார், சர்கிள் இன்ஸ்பெக்டர்.
“நாங்க எதுக்கு பொய் சொல்லணும் எஜமான். அவனை காலையில இருந்து காணோம்”.
கொஞ்சம் தைரியமான ஆள் தான். அதான் சர்க்கிள் இன்ஸ்பெக்டரையே எதிர்த்து பேசுகிறார்.
“ஓ. நேத்து ராத்திரியே அவனை கொலை பண்ணி கிணத்துல போட்டுட்டு ஓடிட்டான்”.
இன்ஸ்பெக்டர் கர்ஜித்தார்.
“ஏலே ராஜ துரை எங்க போனாலும் உன்னை விட மாட்டோம்”. என்று கூறியவர்,
“24 மணி நேரம் டைம் கொடுக்கேன். அவனை சரணடைய சொல்லுங்க. இல்லை. நாங்க கண்டு பிடிச்சா, அவனை தூக்கி போட்டு மிதிக்க மிதியில அவன் ரத்தம் கக்கி சாவபோறான். பேசமாக சரணடையசொல்லிருங்க”.
இந்த ஊரில் கொலை நடந்ததே கிடையாது. ஒரு கொலையை செய்திருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய ரவுடியாக இருப்பான் என்பதுதான் போலீஸ் கருத்து. ஆகவே தான் சர்க்கிளுக்கு கோபம். அதுபோல இரண்டு சாதி மோதி கலவரம் ஏற்பட்டா, இங்கிலீஸ் கார துரைக கோபபடுவா? அதுவும் கலெக்டர் மோசமாக ஆளு. நீங்க என்ன மசிரையா புடுங்கிட்டு இருந்தியன்னு கேப்பாரு. அதுக்குள்ள கைதியை பிடிக்கணும்.
உலக்கநாடார், தனது தோளில் கிடந்த துண்டை கக்கத்தில் வைத்துக்கொண்டார். சர்க்கிள் பக்கத்தில் போனார்.
“எஜமான் தப்பா நினைக்காதிய. ராஜதுரை அப்படி பட்ட பையன் இல்லை. ரொம்ப நல்லவனையா” என்றார். அவ்வளவு தான் சர்க்கிளுக்கு கோபம் வந்தது.
“யோவ் ஏட்டையா இந்த கிழவனை தூக்கி முதலில உள்ள போடுங்க. இவன்தான் அவனை எங்கேயோ ஒளிச்சு வைச்சிருக்கான். இவன் உள்ள போனா, அவன் தன்னால வந்து சரணடைவான்”. என்றார்.
உலக்க நாடார் மொதுவாக பின்வாங்கினார். நமக்கு எதுக்கு வம்பு. ராஜதுரை இதுக்குள்ள எங்கேயோ பறந்து போயிருப்பான். நாம ஏன் வாயை கொடுத்து வாங்கி கட்டணும். எனவே அமைதியாக இருந்தார். மற்றவர்களையும் கண்ணை காட்டி அமைதியாக இருக்கச்சொன்னார்.
“ஏலே எவனாவது வீட்டுக்குள்ள ராஜதுரையை ஒளிச்சி வச்சிருந்தா சொல்லிருங்க”.
இன்ஸ்பெக்டர் கோபமாக இருந்தார். எனவே அவர் கவனம் முழுவதும் ஊருக்குள்ளேயே இருந்தது.
“ஏட்டு, எல்லா வீட்டையும் சர்ச் பண்ணுங்க. அவன் எங்க இருந்தாலும் உடனே கண்டு பிடிச்சிட்டு வாங்க”.
போலீஸ் பட்டர்ளம் அந்த ஊருக்குள் புகுந்தது. அனைத்துமே புதிய வீடு தான் கட்டி முடிந்தும் முடியாமலும் இருந்தது.அங்கே இருந்த சாக்கு களை குத்தி குத்தி பார்த்தார்கள். குலுக்கையை அடித்து உடைத்தார்கள். உள்ளே இருந்த நெல் மணிகள் சிந்தியது.
“அய்யா. அது விதை நெல்லுய்யா. அதை ஒண்ணும் செஞ்சி புடாதீங்க. அடுத்த பூவு விளைய வைக்க முடியாதுய்யா?” கிழவி ஒருத்தி சொன்னதை யாரும் பொருட் படுத்தவில்லை.
குழந்தைகள் அலறின.
பெண்கள் பயந்து ஒடினர்.
“வீடு இப்பத்தான்யா கட்டுறோம். யாருமே இன்னும் வீட்டுக்குள்ளேயே தங்கலைய்யா”. பொன்னு நாடார் சொன்னார். “அப்போ எங்கலை அவ்வளவு வேரும் தங்கியிருக்கிய”-. ஏட்டுக்கும் கோபம் வந்தது.
“அய்யா சும்மா குடிசல் போட்டுத்தான்” என இழுத்தார்.
அவ்வளவு தான் மறு நிமிடம் போலீஸ் பட்டாளம் குடிசை வீடுகளை பிரித்து எரிந்தது. சோறு பொங்கிய பானைகளை அடித்து நொறுக்கியது.
அய்யோ. அய்யோ. இப்போ தான் தீக்கு எங்க உடமைகளை பறிக்கொடுத்தோம். அதுக்குள்ள இப்படி பிரச்சனையா என பெண்கள் கதறினர்.
“கொலை பண்ணிட்டு ஒருவன் ஊருக்குள்ள இருக்கான். அவனுக்கு அடைக்கலம் கொடுக்கியளோ. படுவா ராஸ்கோல். புடுங்கி புடுவேன் புடுங்கி”.
மிரட்டினார் இன்ஸ்பெக்டர்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரிடம் கேட்டார்கள் பதில் இல்லை.
எல்லோரும் தெரியாது என்று சொன்னார்களே தவிர யாரும் அவர்களை காட்டிக்கொடுக்கவில்லை.
சிறு பாப்பா ஒன்று அழுது கொண்டே வந்தது. அதை பார்த்த இன்ஸ்பெக்டருக்கு பொறி தட்டியது.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். பாப்பா பொய் சொல்லாது.
இன்ஸ்பெக்டர் பாப்பா அருகில் மண்டியிட்டார். “பாப்பா ராஜ துரை எங்க போனான்” என்றார்.
காக்கி சட்டையில் இருந்த அவரை பார்த்து பீதி அடைந்த பாப்பா, பொய் சொல்லாமல் உண்மையை சொன்னது.
வயற்காட்டை கையை காட்டியது. போலீசுக்கு புரிந்தது. இந்த வயற்காடு வழியாகத்தான் ஓடியிருக்கிறான். அவனை வழியனுப்பி விட்டுத்தான் இந்த மக்கள் இங்கே கூட்டமாக நிற்கிறார்கள்.
மறு நிமிடம்.
அந்த போலீஸ் கூட்டம் வயற்காட்டுக்குள் அதிரடியாக இறங்கியது.
பூட்ஸ் காலால் விளைநிலங்களை நாசப்படுத்திய படியே மாவடிக்கால் கரை வழியாக ஆலங்காலில் உள்ள இடங்களில் தேட ஆரம்பித்தனர்.
*****
பாளை ஹகிரவுண்ட் ஆஸ்பத்திரி, புதிய ஆஸ்பத்திரி இரண்டாவது மாடியில் உள்ள வாளகத்தில் படுத்துக் கிடக்கும் சந்திரனிடம் தான் அகஸ்தீஸ்வரன் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
ராஜதுரை கதையை சொல்ல சொல்ல எல்லோருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் விழித்திருந்து அந்த கதையை கேட்ட ஆரம்பித்தனர்.
யார் யாரோ தியாகிகள் கதை சொல்கிறார்கள். சொந்த சாதிக்காரர்களுக்காக இந்த தியாகி செய்த தியாகத்தினை என்னவென்று சொல்வது.
“அய்யோ ராஜதுரை என்ன ஆகி இருப்பார்” என ஆர்வத்தோடு கதை கேட்டனர். எனவே தொடர்ந்து அகஸ்தீஸ்வரன் கதை சொல்ல ஆரம்பித்தார்.
அப்போது நர்ஸ் வந்தார்.
“யப்பா. ரத்னம் அட்டெண்டர் யாரு?”
“நான் தான் சிஸ்டர்” சந்திரன் எழுந்தான்.
“யப்பா. ஏதோ கேட்கிறாரு ரத்னம். என்னன்னு பாரு” என்றார்.
“சரி சிஸ்டர்” என வார்டுக்குள் ஓடினான் சந்திரன். அதே வேளையில் அகஸ்தீஸ்வரன் சாரிடம் சொன்னான். “ஸார் நான் வந்த பொறவு தான் மீதி கதையை சொல்லணும்”
“உனக்காகத்தாண்டே உன் பூர்விக கதை சொல்லுதன். நீ இல்லாம எப்படி சொல்வேன். நீ வா. எவ்வளவு நேரமானலும் நான் காத்துக்கிட்டு இருக்கேன்”. என்றார் அகஸ்தீஸ்வரன்.
வார்டுக்குள் ரத்னத்தினை பார்த்தான் சந்திரன்.
“அய்யா என்ன ஆச்சி”.
“ஒண்ணுமில்லைப்பா. என்னைக்கும் இல்லாத மாறி இன்னைக்கு எனக்கு கொஞ்சம் பசி எடுக்கு. ஏதாவது சாப்பிடனும் போல இருக்கு”. என்றார்.
“என்ன வேணுமுய்யா?”. சந்திரன் கேட்டான்.
“நான் என்ன கேட்டாலும் கொடுக்கவா போறாவ”. விரக்தியுடன் சொன்னார் ரத்னம்.
“பால் குடிக்கீறியளாய்யா?”
“பாலைத்தான் குடிக்கணும். வேறே என்னத்தை குடிக்க. வாங்கிட்டு வாறீயாய்யா?”
ரத்தினத்தினை பார்க்க சந்திரனுக்கு பாவமாக இருந்தது. பாவம் இவனை பார்த்து தான் யாரும் பாவப்படுவதாக தெரியவில்லை.
“சரிய்யா வாங்கிட்டு வாறேன்”. அருகில் பிளாக்ஸை தேடினான். கிடைக்கவில்லை. ஆனாலும் பார்சல் வாங்கி வரலாம் என நினைத்து கிளம்பினான்.
அந்த இரவில் கடையில் பால் வாங்க ஓடினான் சந்திரன். லிப்டில் வந்து நின்று சுவிட்சை தட்டினான். எதுவும் அசைவு தெரியவில்லை. இரவு என்பதால் ஆப் பண்ணி வைத்து இருப்பார்களோ
எனவே மாடிப்படியாகவே ஓடி வந்தான்.
கீழே போய் அங்கிருந்த டீ கடையில் பால் வாங்கினான். அதன் பின் மாடி வழியே மேலே ஓடினான். ரத்னம் அய்யா பசியை போக்கணும். அதே நேரம் தாத்தா ராஜ துரை கதையையும் கேட்கணும். ஆர்வத்தில் ஓடினான். அந்த படி அவனுக்கு உயரமாக தெரியவில்லை. ஏறும் போது காலில் ஏற்ப்பட்ட வலி பெரிய வலியாக தெரியவில்லை.
அடுத்த 10 நிமிடத்தில் ரத்னம் அய்யா அருகில் போய் நின்றார். அதன் பின் அவருக்கு தான் கொண்டு வந்த துணிக் கப்பில் பால் ஊற்றி கொடுத்தான்.
பாலை குடித்தார் ரத்னம்.
“பசியாறிட்டாய்யா?”
“ம்” மௌனமாக இருந்தார்.
“என்னை மன்னிருய்யா. நல்லா தூங்கியிருப்ப. உன்னைப்போய் எழுப்பிட்டேன். பாரு”. என்றார்.
“பராவாயில்லைய்யா. உங்களுக்கு உதவ நான் காத்து இருக்கேன்”
அவரை கட்டிலில் படுக்க வைத்தான் சந்திரன். அதன் பின் போர்வையை எடுத்து அவர் மேலே போர்த்தினான்.
அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ரத்னம். அவர் மனதுக்குள் ஒரு உறுதி வந்தது. இவனை தனியாக விட்டு விடக்கூடாது.
“சரிய்யா படுத்து தூங்குங்க” என்று கூறிவிட்டு வெளியே ஓடி வந்தான். அகஸ்தீஸ்வரன் அய்யாவிடம் கதை கேட்டவேண்டும்.
வரண்டாவுக்கு ஓடோடி வந்தான்.
அகஸ்தீஸ்வரன் சிரித்தபடியே கதைச்சொல்ல தயாராக இருந்தார்.
********
ராஜதுரைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை வீராபுரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டே இருந்தான்.
எங்கே செல்வான். யாரை பார்ப்பான். நமக்கு சொந்த ஊர்காரங்களை தவிர வேறு யாரை தெரியும்.
அப்போ சுரண்டை என்ற பெயரில் ஒரு பஸ் வந்து நின்றது.
சுரண்டை. கேள்விப்பட்ட பெயராக தெரிகிறதே. யோசித்தான் ராஜதுரை.
தன்னுடைய அக்கா ஒருத்தியை அந்த ஊரில் கட்டி கொடுத்திருந்தது. ராஜதுரைக்கு நினைவுக்கு வந்தது.
கற்பகம். இதுதான் அவள் பெயர். ராஜதுரைக்கு தூரத்து சொந்தம் தான். அக்கா முறைவேணும். அவளும் இவனை போல அனாதை தான். தாய் தந்தையர் இல்லை. அவர் வீட்டுக்கார் சுரண்டை பக்கத்தில் ஒரு ஊரில் பனையேறுகிறார். கட்டிக்கொடுத்த பிறகு அவள் பல வருடங்களாக ஊருக்கே வரவில்லை. சொல்லப்போனால் அவள் கல்யாணத்துக்கு ராஜதுரை சுரண்டை வந்திருந்தான். அதன் பிறகு அவளும் ஊருக்கு வரவில்லை. இவன் உள்பட ஊர்காரங்கள் யாரும் சுரண்டைக்கு செல்லவும் இல்லை.
இந்த பனையேறிகளே நாடோடிகள் தானே. தொழிலை தேடுவார்களே தவிர சொந்தங்களை எங்கே தேடுவார்கள். ஆனாலும் தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார்களே அதுபோலவே என்னை பார்த்தால் அக்கா கற்பகம் கண்டிப்பாக உபசரிப்பாள். அங்கே போய் விட வேண்டியது தான். அவனை அறியாமலேயே அந்த பஸ்ஸில் ஏறினான்.
பஸ் கிளம்பியது. “சுரண்டைக்கு ஒரு டிக்கெட்” என்றான்.
அரை டவுசர் போட்ட கண்டக்டர் இவனை பார்த்துக்கேட்டார்.
“எந்த சுரண்டை பங்களா சுரண்டையா? இல்லை சுரண்டை பஸ் ஸ்டாண்டா?” என்றார்.
எந்த சுரண்டையை சொல்வான். இவனுக்கு அதைப்பத்தி என்ன தெரியும்?. ஆனாலும் தயங்காமல் சொன்னான். “பஸ் ஸ்டாண்டு தாங்க” என்றான். பஸ் கிளம்பியது.
இவன் கண் முன்னால் சொந்த ஊர் தான் வந்து நின்றது. அந்த தாமிரபரணி ஆற்றுமணல். பொங்கலுக்கு விளையாடும் விளையாட்டு.இரவு நேரத்தில் பாட்டி மாருடன் பேசிய படி உளுந்து பயிரை உடைப்பது. ஆகா. என் மக்களை விட்டு பிரிந்து வருகிறேனே. என மனம் எண்ணியது.
அதே வேளையில் ஊரில் என்ன நடந்து இருக்கும். அந்த காவலாளி எப்படி கொலையானான். அவனை யார் கொலை செய்து இருப்பார். அந்த பலி எப்படி நம்ம மீது விழுந்தது. என்னை ஏன் போலீஸ் விரட்ட வேண்டும் என பல விதமாக எண்ண அலைகள் ஓட ஆரம்பித்தது.
ஆனால் போலிஸ் நம்மை பிடித்தால் சும்மா விடுவார்களா?. நாம் இப்படி கோழை போல ஓடி வருவது நியாயம் தானா? இருந்து அல்லவா பிரச்சனையை பேசி முடித்து இருக்க வேண்டும். இப்படியா ஓடி ஒளிவார்கள்.
தன்னை தானே நொந்து கொண்டான் ராஜதுரை.
எப்படியோ போலீஸ் காரர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு சுரண்டையில் போய் இறங்கினான்.
இங்கிருந்து எப்படி அக்காளை கண்டு பிடிப்பான். ஒன்றும் ஓடவில்லை. சுரண்டை திருநெல்வேலி மாறி பெரிய இடமாக இல்லாட்டாலும் அதற்கு பாதியாக இருந்தது. சுற்று பட்டி மக்கள் எல்லாம் இங்கு வந்து தான் வியாபாரம் செய்யும் தலமாக இருந்தது. சொல்லப்போனால் பெரிய பட்டணம் தான். இந்த பகுதியில் பெரிய பெரிய ஜமீன்தார்கள் வாழ்ந்த அரண்மனை பக்கம் பக்கம் இருக்கிறது.
அரண்மனைக்கு சொன்றால் கூட பஞ்சம் பிழைத்துக்கொள்ளலாம். படையில் சேர்ந்தால் கூட வாழ்ந்து விடலாம். ஆனாலும் கொலையாளி என்ற அவப்பெயருடன் வாழ முடியுமா?
ராஜதுரை மனது மிகவும் வேதனைப்பட்டது.
அப்போது தான் எதிரே உள்ள சந்தையில் கற்பகம் அக்காளை பார்த்தான்.
“யக்கா கற்பகம் யக்கா”
“ஏலேய் தம்பி ராஜதுரை. எப்பல்லே வந்த”
யக்கா உன்னை பாக்கணுமுன்னு தான் வந்தேன்.
“பொய் சொல்லாதே”.
பொய் சொல்லித்தான் அவனுக்கு பழக்கம் இல்லையே. ஆனாலும் இந்த இடத்தில் பொய் சொல்லித்தான் தீர வேண்டும்-. காரணம் நான் கொலையாளி என்று அக்காளிடம் சொல்ல முடியமா? இல்லை கொலை பலி சாத்தப்பட்டவன் என சொல்ல முடியமா? ஆகவே இந்த இடத்தில பொய் சொல்லுவது தவறில்லை.
“இல்லையக்கா நீ சொல்றது உண்மைதான். நான் உன்னை பார்க்க வரலை. தாமிரபரணி ஆத்து தண்ணியை பாத்து பாத்து சலிச்சு போச்சு. அதான் மேக்கரையில போய் உன்னை பாத்துட்டு, இங்க நிறைய அரண்மனை இருக்காமே. ஏதாவது ஒரு அரண்மனையில வேலை பாக்கலாமுன்னு வந்தேங்கா”. என்றான்.
கற்பகத்துக்கு தப்பியை பார்த்தவுடன் சந்தோசம் வந்தது. ஆகவே அவனை கூட்டிக்கொண்டு நடைபயணமாகவே அவள் இருக்கும் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
தான் கொண்டு வந்த கருப்பட்டியை சந்தையில் விற்று விட்டு, கொஞ்சம் காய் கறி வாங்கி ஓலைப்பெட்டியில் வைத்திருந்தாள்.
“வா தம்பி. வா. சின்ன வயசுல பாத்தது. ஆனாலும் உன் மூஞ்சு மறக்க முடியாம அப்படியே இருக்கு. நானும் ஊருக்கு வரலை. நீங்க அந்த கரையில கிடக்கிய. நான் இந்த கரையில கிடக்கேன். ஊரு சேதி எங்க தெரியபோவுது. ஏதாவது இனபெந்து கூட இரண்டுபேரை இங்க கட்டிகொடுத்து இருந்தா ஏதாவது சேதி தெரியும். இல்லாட்டி கொடை கிடைன்னு யாரும் கூப்பிட்டாலும் ஊர் சேதி தெரியும். எங்க அய்யன் என்னை கட்டி கொடுத்து கொஞ்ச நாளுல செத்து போனாவ. அவியத்தான் எனக்கு எல்லாம். அவிய காலத்துக்கு பொறவு ஒன்று விட்ட சொந்தம் நீ மட்டும் தான். நீயும் அனாதை ஆயிட்ட, உனக்கு ஒரு தாலி நூலு கட்டி வச்சா. உன் வீட்டுல வந்து விருந்து தங்கலாம். அதுவும் நடைக்கலை. ம்”. என பெரும் மூச்சு விட்டாள்.
“சரி நீ.யாவது என்னை தேடி வந்துருக்கியே”. என சந்தோசம் பட்டாள். ரொம்ப நாள் கழித்து உறவை பார்த்த சந்தோசம், கற்பகம் பொறி பொறி என பொறிந்து தள்ளி விட்டாள். தாய் வீடு சீதனம் என்பார்கள். அக்காவை பார்க்க வந்தவன், ஏதாவது வாங்கி வந்திருக்க வேண்டும். ஆனால் இவன் வந்த நிலை அப்படியா? இவன் போலீசுக்கு பயந்து ஓடி வந்த கதையை அக்காளிடம் சொல்ல முடியுமா?
ஆனாலும் அனாதையாக வந்த ராஜ துரைக்கு அக்காள் கற்பகம் ஆறுதலாகத்தான் இருந்தாள்.
அக்காள் கற்பகம் இருந்த வீடு சுரண்டையில் இருந்து அருகில் உள்ள சிற்றாற்றங்கரையில் இருந்தது. அது ஒரு அழகிய சிறிய கிராமம். சுற்றி வயல்காடு . நடுவில் நாலு வீடுதான் குடியிருப்பு. அதுவும் விடிலி காடுகள். அந்த நாலு பேரும் பனையேறிகள். அந்த இடத்தில் தான் பயினி காய்க்க வேண்டும். படுக்க வேண்டும். சோறு பொங்க வேண்டும். எல்லாமே அந்த இடத்தில் தான். அந்த இடம் கூட இவர்களுக்கு சொந்தம் கிடையாது. அரண்மனைக்கு சொந்தம் தான். அக்கம் பக்கத்தில் உள்ள அரண்மனை பனைகளை குத்தகைக்கு எடுத்து பனை ஏறிக்கொண்டு தங்கள் பிழைப்பை பார்த்துக்கொண்டு, அவர்களுக்கு பாட்டம் கருப்பட்டி கொடுத்துக்கொண்டு அங்கேயே இருக்கிறார்கள். இதில் கற்பகம் அக்காள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இருக்கிறது.
அவர்களை பார்த்தால் பாவமாக இருந்தது. “சே. இப்படி அனாதையாக இந்த ஆற்றங்கரையில் குடிசை கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே. என்னைக்குத்தான் எம் மக்க பிரச்சனை தீருமோ?” என மனதுக்குள் நினைத்தான்.
தாமிரபரணி ஆற்றங்கரையில எல்லோருக்கும் காரை வீடு கட்டி கொடுத்தாச்சு. சிற்றாங்கரையில என்னைக்கு கட்டிக்கொடுக்க போறேன். இதுபோல பல இடங்களில் என் சொந்தங்கள் இருக்கு. அவியளையெல்லாம் போயி பாருன்னுத்தான் கடவுள் என்னை இங்க அனுப்பி வைச்சிருக்காவளோ. அதுக்குத்தான் கொலைப்பலியை எம்மேலே தூக்கிப்போட்டு இருக்காவளோ? என யோசிக்க ஆரம்பித்தான்.
யோசித்தான் ராஜதுரை.
கற்பகம் அவன் யோசனையை கலைத்தாள், “தம்பி ஊருல ஏதாவது பிரச்சனையா? தீடீருன்னு கிளம்பிட்டீயே” என்றாள்.
அமைதியாக இருந்தான் ராஜதுரை. நடந்த விஜயம் எல்லாத்தையும் சொல்லிறலாமா? யோசித்தான். வேண்டாம். இப்போது அக்காளிடம் எதுவும் சொல்ல வேண்டாம். நம்ம ஊரை பத்தி அவளுக்கு எதுவும் தெரியலை. தெரியாத விசயம் தெரியாமலேயே இருக்கட்டும். ஊரில இருந்து போலீஸ் கேஸோடத்தான் உறவு வந்திருக்கு. இல்லையின்னா வந்திருக்க மாட்டாங்கன்னு அக்கா மனசுல விதை தூவிறக்கூடாது. முடிவு செய்தான். உண்மையை அக்காளிடம் இருந்து மறைத்து விட வேண்டியது தான்.
“அக்கா ஊருல வேலை இல்லை. நம்ம ஊருல இப்போ விடிலி காட்டை அழிச்சுட்டு எல்லாருக்கும் ஓடு விடு கட்டி முடிச்சாச்சு. இனிமே பனையேத்தும் முடிஞ்ச மாறித்தான். அதனால வேற வேலை இல்லை. சும்மா அங்க கிடக்கதுக்கு இங்க ஏதாவது வேலை கிடைக்குமான்னு வேலை தேடி வந்தேன்”. என்றான்.
“இங்க வேலை என்ன இருக்கு. எல்லாமே விவசாயம் தான்.சீசன் நேரம் பனையித்து இருக்கும். அதுவும் ஒண்ணு இரண்டு பேருத்தான் ஏறுதாவ”.
யோசித்தாள், “ இல்லாட்டி அரண்மனையில ஏதாவது வேலை இருக்கான்னு பாக்கணும்”. கற்பகம் ஏதார்த்தமாக சொன்னாள்.
ராஜதுரைக்கு பொறி தட்டியது
“அரண்மனையில வேலை கிடக்குமா அக்கா?”.
“மச்சான் கிட்ட சொல்லி அரண்மனையில வேலை வாங்கி தரச்சொல்லுதேன்”.
“முடியுமாக்கா?”
“மச்சான் இங்க உள்ள ஜமீன்தாரினி அம்மா கிட்ட நல்லா பேசுவாவ. அந்த நாச்சியார் நல்ல கொணத்துக்காரி. அவிய கிட்ட சொன்னா வேலை கிடைக்கும்”.
கற்பகம் சொல்லி முடித்தாள்.
ராஜதுரை நினைத்தான். அரண்மனை வேலை கிடைச்சா. அங்க யாரும் நம்மை தேடி வர மாட்டாவ. காட்டுக்குள்ள ராஜா வேட்டைக்கு போனா கூட போவனும். நாம அந்த கரையில இருந்து இங்க வந்தது யாருக்கும் தெரியாது. அங்க நம்மள தேடுத போலீசு இங்க வர மாட்டாவ. அதனால தப்பிச்சிகிடலாம் என நினைத்தான்.
அவன் கனவை கலைத்தாள் கற்பகம்.
“யய்யா வாய்யா வந்து சாப்பிடு, கருவாட்டு கொழம்பு வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு படு. தின்னவேலியில இருந்த பஸ்ஸில வந்திருக்க அலுப்பா இருக்கும். காலையில அரண்மனைக்கு கூட்டிட்டு போவச்சொல்லுதேன்”. என்றாள்.
இரவு சாப்பிட்டு முடித்தார்கள். அந்த விடிலி காட்டில் ஒரு ஓரத்தில் ஓலைப்பாயை கொண்டு போட்டாள் கற்பகம். தம்பி கழுத்து வலிக்க கூடாது என தலைக்கு வைக்க துணியால் செய்யப்பட்ட தலையணையும், பழைய ஜமக்காளம் ஒன்றையும் கொடுத்தாள். ராஜதுரை படுத்தான். அவனுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான்.
அப்போது அத்தான் வந்தார். அவனை யாரு என விசாரித்தார். கற்பகம் விவரத்தினை சொல்லி முடித்தாள்.
“அவனுக்கு சாப்பாடு கொடுத்தியா?” என கேட்டார்.
“கொடுத்தேன்” என்றாள் கற்பகம்.
அவனை எட்டிப்பார்த்தார். அவன் தூங்கிக்கொண்டிருந்தான்.
“சரி. நல்லா தூங்குதான் காலையில பேசிக்கிடுதேன்”. என்றவர் சாப்பிட ஆரம்பித்தார்.
ராஜதுரைக்கோ பயம். தூக்கம் வந்த மாதிரி நடித்தான். உண்மையில் அவன் தூங்கவில்லை. அத்தான் என்ன சொல்லுவாரோ. ஏதாவது கேட்டா என்ன பதில் சொல்ல. யோசனையில் இருந்தான்.
நான் நல்லது தானே செய்தேன். இந்த பனையேறி மக்களுக்கு ஆறுதல்தானே செய்தேன். அதற்கு ஏன் ஆண்டவன் எனக்கு இந்த தண்டனை கொடுக்கிறான்.
அவனால் சீரணிக்க முடியவில்லை.
அத்தானுக்கு 50 க்கு மேற்பட்ட பனை ஏறி இறங்கிய அலுப்பு. சாப்பிட்ட உடனே கொட்டாவி விட்டார். அவரும் இவன் அருகில் வந்து மற்றொரு ஓலைப்பாயை விரித்து படுத்தார்.
இரண்டே நிமிடத்தில் தூங்கினார். தொடர்ந்து குறட்டை விட்டார்.
அந்த சத்தம் அக்காளுக்குபழகி விட்டது. எனவே அவள் அருகில் படுத்து தூங்க ஆரம்பித்தாள்.
ராஜதுரைக்கோ தூக்கம் வரவில்லை.
போலீஸ் மோப்பம் பிடித்து விடுமோ? செய்யாத குற்றத்தினை தப்பி ஓடி வந்த காரணத்தினால் ஒப்புக்கொண்ட மாரி ஆகி விடுமோ?
என்ன செய்யப்போகிறேன்.
அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
ஆனால் ஒரு கொலைப்பலியில் இருந்து தப்பிக்க வந்த ராஜ துரை மற்றொரு கொலைபலியிலும் சிக்குவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


