ஊத்து மலை ராஜா கதையை கேட்டு ராசுக்குட்டி சந்தோசமானான்.
“எப்படி இருந்திருக்காவ . அந்த காலத்தில நல்லா வாழ்ந்து இருக்காவ”.
ஆச்சரியமாக சொன்னான் ராசுக்குட்டி.
ஆச்சி சிரித்தாள். “இந்த கதையெல்லாம் அரண்மனையில மிகச்சிறப்பா நடகக்கும். நிறைய கதை சொல்லுவாவ”.
“ஆச்சி இந்த அரண்மனையில வேறே கதை இருந்தா சொல்லேன்”.
“ராஜா ராணி கதை மட்டுமில்லை. அவுக நண்பர் கதையும் சிறப்பா இருக்கும்”
“அப்படியா? அந்த கதையை சொல்லேன்”
“சொல்லுதேன் கேளு”.
“நாம திருச்செந்தூர் போவும் போது நம்ம ஊரு செந்தூரான் காவடி எடுத்துட்டு போவா பாத்து இருக்கியா?”
“ஆமாம் சர்ப்ப காவடி எடுப்பாவ. அப்பம் எங்கயோ இருந்து பாம்பு வந்து காவடியில ஏறிடும். அதை பூஜையில் வைச்சி அப்புறமா? திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடைபயணமாக எடுத்துட்டு போவாவ. யம்மா பயமா இருக்கும்”.
“சரி. இருக்கட்டும். அந்த காவடி போகும் போது அலுப்பு தெரியாம இருக்க பாட்டு பாடுவாவ”.
“அப்படியா ஆச்சி”.
“ஆமாம் அதுக்கு பேரு காவடிசிந்து”
“அப்படியா?”
“ஆமாம் ஊத்துமலை ஜமீன்தார் கழுகுமலை முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துட்டு போவாரு. அப்பத்தான் சென்னிமலை அண்ணாமலை ரெட்டியார் பாட்டு எழுதி கொடுத்து இருப்பாரு”.
“அப்படியா?”
“ஊத்துமலை ஜமீன்தார் கழுகுமலைக்கு காவடி எடுத்துட்டு போவும் போது, அவுகளுக்கு கால் வலி தெரியாம இருக்க இந்த பாட்டு பாடி இருக்காவ”.
“இதை காவடிச்சிந்துன்னு சொல்லுவாவ. காவடிச்சிந்தின் பெரும் புகழ், ஐ.நா.சபை வரை பரவிஇருககு”.
“அது என்ன ஐ.நா சபையா?”
“எனக்கே தெரியாது. எங்க அப்பன் சொல்லுவாரு. அது வெளிநாட்டுல இருக்காம். அங்க நம்ம தமிழ் காரவிய நுழையிருதே பெருசாம்”.
“அப்படியா?”
“ஆமாம் அங்க நம்ம இசைப் பேரறிஞர் எம்.எஸ்.சுப்புலெட்சுமி அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தை ஐநா சபையில் பாடியிருக்காவ”.
“அப்படியா?”
“அந்தக் காத்தில புலவர்களது புலமையை சோதிக்க, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மாதிரி உம்மால் பாட முடியுமா? ன்னு கேட்பாவளாம். இதிலிருந்து காவடிச்சிந்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு பாத்தியா?”
“யமகம், மடக்கு, திரிபு, சந்தம் இதையெல்லாம் ரெட்டியார் நல்ல படிப்பாரு. இவரு பேச்சிலே சிலேடை மாரித்தான் இருக்கும்”.
“அது என்ன சிலேடை ஆச்சி”.
“அதாவது இரட்டை அர்த்தம் வருத மாரி இருக்கும்”.
“அப்படியா?”.
“அந்த காலத்தில சிலேடையை ரொம்பச்சிறப்பா பேசுவாவ”
“ரெட்டியார் பாக்க ரொம்ப அழகாக இருப்பாவ. கம்பீமா இருப்பாவ, எப்போதுமே இரண்டு பொருள் பட சாதூர்யமாக பேசுவாவ”.
“ஒருமுறை எட்டயபுரம் வந்தாரு அண்ணாமலை ரெட்டியார். அங்கு கோயிலுக்கு வந்த ஜமீன்தாரியை, “தங்கச்சி வந்தியா?” ன்னு கேட்டுப்புட்டாரு. எல்லோருக்கும் கோவம் வந்துட்டு.
ஜமீன்தாரியை இந்தக் கவிஞர் ஒருமையில் பேசிவிட்டாரே ன்னு ராஜாவிடம் கோள் மூட்டி விட்டுட்டாவ.
உடனே ராஜாவுக்கு கோபம் வந்துட்டு. உமக்கு அளவுக்கு மேலே செல்லம் கொடுத்துட்டேன். அதான் நீரு மகாராணியை தங்கச்சின்னு உரிமை எடுத்து பேசிறீருன்னு கோப்பட்டாரு. அதற்கு பதில் பேசிய ரெட்டியார், அந்த அம்மா கையில் வைத்திருந்தது தங்கச்சிவந்தியா?ன்னு கேட்டேன். அதாவது தங்கத்தில் உருவான சிவந்தியா ன்னு கேட்டேன்னு சொல்லி இருக்காரு.
அவர் அறிவை பார்த்து வியந்த போனாவ ராஜா, அவரைத் தன்னோடு இருக்கச் சொல்லிட்டாவ. உம்ம பெயர் என்னன்னு கேட்டதுக்கு தமய பர்வதம் முன்னு சொல்லி இருக்காவ. அதிலேயும் குழப்பமடைந்த ராஜா விபரம் கேட்டு இருக்காவ. தமயன் என்றால் அண்ணா, பர்வதம் என்றால் மலை. அதாவது அண்ணாமலை என்பதையே இப்படி சொன்னேன்ன்னு சொல்லி சிரிச்சாவ. எல்லோருக்கும் சந்தோசமா இருந்துச்சு.
இருபது வயதுகூட நிரம்பாத சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், ஊத்துமலை ஜமீனுக்கு சில வேளை வரவில்லைன்னா அவரைத் தேடி அரண்மனைககு ராஜா பல்லக்கை அனுப்பி விட்டுருவாரு.
அப்படித்தான் ஒரு நாளு அண்ணாமலை ரெட்டியாரைத் தேடி பல்லக்கு வந்துட்டு.
அப்போது மேலத்தெரு முத்தையா பாண்டியன் அவசரமாக ஓடிவந்தாரு, புலவர் முகத்தை பார்க்கிறாரு”.
“என்ன பாண்டியன்? இவ்வளவு அவசமுன்னு” புலவர் கேட்டாரு. “என் மகள் நேத்து சடங்காயிருக்கா விஷேசம் நடத்தனும், அதுக்காக ஊத்துமலை மகாராஜாவை நானும் உங்களுடன் வந்து பாக்கனுமுன்னு” சொன்னாரு.
“மகாராஜாவைப் பார்த்து என்ன கேட்கப் போகிறீர்?” ன்னு புலவர் கேட்டாரு.
“அவரிடம் சடங்கு நடத்த அரைக்கோட்டை அரிசியும், ஒரு ஆடும் கேட்கணும். அதுக்கு நீரு தான்னய்யா சிபாரிசு செய்யணு”முன்னு பாண்டியன் கேட்டாரு.
“உம்ம மகாராஜாவைத் தானே பார்க்க போரூறு. நீரே போய் கேட்கலாமே.. இதுக்கு என் சிபாரிசு எதுக்கு” ன்னு புவலர் கேட்டாரு.
“உங்க பின்னாலேயே வாறேன். நீரு பல்லக்கில் முன்னாலே போருமுன்னு” பின்னாலே போனாரு.
ஊத்துமலை மன்னர் இருதாலய மருதப்ப தேவர் தம்முடைய வீரகேரளம் புதூர் அரண்மனை சபையில புலவர்கள் புடைசூழ இருக்காவ.
“மகாராஜா” ன்னு அண்ணாமலை ரெட்டியார் ராஜவை பாத்து ஓடினாவ.
“மகாராஜா, நான் நேத்தே வரவேண்டியது. முடியலை. மன்னிக்கணும். எனக்காக மெனக்கெட்டு பல்லக்கை அனுப்பனுமா?” ன்னு புலவர் ஆதங்கப்பட்டாவ..
“உமக்காகவா நான் அனுப்பினேன், தமிழக்காக அனுப்பினேன். தமிழ் நடந்து வரலாமா?” ன்னு மன்னர் கூற “காவடிச் சிந்து நடந்து தானே வரவேண்டும்” முன்னு சொன்னாவ புலவர்.
“அது கூடாது என்று தானே, உமக்கு காவடிச் சிந்தை நாமே அச்சு வாகனத்தில ஏத்தினேன்னு” சொன்னாரு.
“இரண்டு பேரும் பேசிறது புரியாம திரு திருன்னு முழிச்சிககிட்டு நின்றாரு பாண்டியன்.
உனககாவது புரியுதா?” ஆச்சி கேட்க ராசுக்குட்டியும் திருதிருன்னுதான் முழிச்சான்.
அந்த நேரத்தில மகராஜாவின் பார்வை அருகில் உள்ள பாண்டியன் மேல விழுது. “யார் இவர்?” ன்னு தோரணையா கேட்காரு. புலவரோ, “மகாராஜா இவர் எங்கள் சென்னிகுளத்தார். இவருடைய மகளுக்கு சடங்கு வைக்க வேண்டும். அதற்கு மகராஜாவிடம் இரண்டு சன்மானம் கேட்க வேண்டும் என்று வந்திருக்கிறார். இவர் கேட்க கூடிய இரண்டில் ஒன்று உறுதியாக நடக்கும். ஒன்று நடக்காது. மற்றபடி மகராஜா திருவுள்ளபடி” என்றார்.
புலவர் சொல்லும்போதே கேட்டுக் கொண்டிருந்த முத்தையா பாண்டியனுககு கோபம் வந்தது. புலவரை சிபாரிசுக்கு கூட்டி வந்தது தப்பா போச்சே. அவரே மகராஜாவிடம் ஒண்ணு நடக்கும். ஒண்ணு நடக்காது என்று சொல்கிறாரே. மகராஜா ஒருவேளை ரெண்டு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் இவரே சோலி முடிச்சு புடுவாரு போல. ராஜா சொல்லக்கூடியதை இவரே ஏன் சொல்லனும்? புலவர் மகா திருடனா இருப்பார் போலிருக்கே ன்னு மனதுக்குள் வருத்தமடைந்தார்.
மன்னரோ, “புலவரே இவருக்கு அரிசியும், ஆடும் வேண்டும் என்பதை என்ன அழகாகச் சொல்லிவிட்டீர். ஆடு நடக்கும், அரிசி நடக்காது. அழகு, அழகு உமது தமிழே அழகு சென்னி என்றால் தலை அல்லவா?. தமிழ் உலகம் சென்னி குளத்தாராகிய உம்மை என்றும் தலையில் வைத்துப் போற்றும்” என்று சொல்லிக் கொண்டே, யாரது என்று வேலைக்காரர்களை கூப்பிட்டு முத்தையா பாண்டியன் வீட்டுக்கு அரிசியும், ஆட்டையும் உடனே அளிக்க ஏற்பாடு செய்தார்.
“நடக்க முடியாத அரிசியைத் தலைச் சுமையாக கொண்டு செல்லுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்து விட்டு, “புலவரே, நமது சமஸ்தானத்தில் நடக்காததும் நடக்கும்”, என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார்.
இவ்வாறு ஊத்துமலை இருதால மருதப்பத் தேவரின் அன்பில் அகப்பட்டு திக்குமுக்காடிக் கொண்டிருந்த அண்ணாமலை ரெட்டியார், தமது இளம் வயதிலே உடல் நலமில்லாமல் சென்னிகுளத்தில் உள்ள தனது வீட்டில் படுத்திருந்தார். இருபத்தாறு வயதே ஆன ரெட்டியார் வாடி வதங்கி படுக்கையில் சுருண்டு கிடக்கின்ற செய்தியை அறிந்த மன்னர் கவிஞரை பார்த்து வர மன்னரைக் கண்ட கவிஞர் முகம் மலர்ந்தது.
“வாடா மருதப்பா, வாடி விட்டேன் பார்த்தாயா?” என்று சொல்லி ஏங்க மன்னருடன் வந்திருந்தோர் “வாடா” என்று பேசிவிட்டாரே புலவர் என்று சங்கடப்பட்டனர்.
மன்னரோ, “புலவரே, நான் வாடாமல் இருப்பதால் தான் உம் வாட்டம் போக்க வந்திருக்கிறேன்” என்று சொல்ல சாகும்போது மன்னரின் நயமான அந்தத் தமிழைக் கேட்ட அண்ணாமலையாரின் கைகள் தாமே குவிந்தன. கண்களும் மலர்ந்து பனித்தனன்னு சொல்லுவாவ.
இதுபோல ஊத்துமலை ஜமீன்தாருக்கு சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரையும் சேர்ந்து பல சுவையான வரலாறுகள் சொல்லுவாவ. என சொல்லி முடித்தாள் ஆச்சி.
“எப்படியெல்லாம் பேசியிருக்காவ”.
“ஆச்சி. இந்த புலவர் கதையெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?. நீ தான் படிக்கவே இல்லையே?”.
“இதுக்கு எதுக்கு படிப்பு ராசுக்குட்டி. நம்ம ஊருல களை பறிக்க போவும் போது இந்த கதை நிறையா சொல்லுவாவ”.
“சுடலை கதை, ராஜா கதை எல்லாம் சொல்லுவாவ. ஆத்து கரையில தான் எத்தனை கதை புதைந்து கிடக்கு தெரியமா?”
“ஆச்சி. நீ. இது மாரி நிறைய கதை சொல்லணும்”.
ஆச்சி பொக்கை வாயை காட்டி சிரித்தாள்.
“ராஜா அரண்மனை சொல்லுத கதையெல்லாம் கேட்க நல்லா இருக்கு. அதானால மறக்காம எனக்கு நிறைய சொல்லு” என்றான்.
“ஆச்சி ஒரு காவடி சிந்து பாடேன்”. ராசுக்குட்டி சிரித்துக்கொண்டே கேட்டான். “ஆச்சி எங்கே பாட போறா?” என நினைத்தான்.
“ம். பாடுதேன்”.
“நந்தவனத்தில் ஒரு ஆண்டி.
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தர்ண்டி”.
சிரித்தான் ராசுக்குட்டி.
“நல்லா இருக்கே ஆச்சி”.
“ம். நம்ம ஊருல தான் நையாண்டி மேளம் ரொம்ப பேமஸ். அவுகதான் காவடி சிந்தும் பாடுவாவ. கேட்க இதமா இருக்கும்”.
“ஆமாம். இந்த பாட்டே நல்ல இருக்கே”.
ராசுக்குட்டி வாய் முனுமுனுத்தது.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி.
பாட்டை வாயில் முனுமுனுத்தப்படி அப்படியே தூங்கி போய் விட்டான்.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


