தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முத்தாலங்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் ஆலயம் மிகவும்பழமையானது. இந்த கோயில் வளாகத்தில் மிகவும் பிரமாண்டமான முக்குறுணி அரிசி பிள்ளையார், தென்கத்தில் இங்கு மட்டும் காணப்படும் லெட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. தற்போது இந்த ஆலயங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த ஆலயத்தினை சுற்றி எல்லை கல் இல்லாத காரணத்தினால், முள்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. எனவே இந்த முள்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியில் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அறநிலையத்துறையினர் கோயில் எல்கையை நவீன கருவி மூலமாக அள விட்டனர். இதற்காக கோயில் நிலங்களுக்கு எல்லை கல் நடப்பட்டது. தொடர்ந்து ஆன்மிக அன்பர்கள் உள்ளூர் பிரமுகர்கள் மூலம் கம்பி வேலி அமைக்கவும், வளாகத்தில் உள்ள முள்செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அளவீட்டில் தனி வட்டாட்சியர் ஈஸ்வர நாதன், ஆய்வர் நம்பி, அறங்காவலர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சுடலைமணி, நில அளவர்கள் ஜெகன் ராஜ், ஆனந்தகுமார், பூல்பாண்டி, முத்துசெல்வம், கிராம நிர்வாக அலுவலர் சக்தி, தலையாரி பாலகிருஷ்ணன், திருக்கோவில் பணியாளர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நினைவுக்கு எட்டாத நாள்களில் இருந்தே இந்த கோயிலில் புதர் மண்டி கிடந்தது. தற்போது அறநிலை துறையினர் சார்பில் நவீன முறையில் நில அளவை அதிரடியாக செய்து, கோயில் நிலங்களை மீட்டு தந்துள்ளனர். இதனால் பக்தர்கள் அறநிலை துறையினரை பாராட்டியுள்ளார்கள்.


