அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று (27.05.2023) நடைபெற்றது. மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொqழி கருணாநிதி தெரிவித்ததாவது: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சனைகளை அதிகாரிகள் தங்களின் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். மக்கள் பிரதிநிதிகளும் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். குடிநீர், சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சனைகளுக்கும் விரைந்து தீர்வு காண வேண்டும். அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியால் நமது மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி – குலசேகரப்பட்டிணம் – பெரியதாழை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் சாலையில் பழுதுகள் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து தர வேண்டும். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியால் கடம்பாகுளம் புணரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலைஞர் ஆட்சியில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்பேரில், திருச்செந்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளை மாவட்ட மருத்துவமனையாக உயர்த்தினார்கள். தற்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருங்காலங்களிலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பெற்றுத்தருவார்கள் என மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியர் கௌரவ்குமார், மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


