கழுகுமலை அருகே மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தீக்குளித்த விவசாயி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த போலையா நாயக்கர் மகன் பாலமுருகன் (55). விவசாயி. இவருக்கு ராஜேஸ்வரி (48) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் மனைவி ராஜேஸ்வரியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் மது குடிக்க பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியுடன் தகராறு செய்து திடீரென்று வீட்டில் கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் தீப்பற்றியது.
இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


