சில்லாநத்தம், கீழமுடிமண் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்துக்கால், மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்துக்கால் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று பார்வையிட்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டம் செயல்பட துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 91 நீர்வடிப்பகுதிக்குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மொத்தம் 267 லட்சங்கள் நிதி ஒதுக்கீட்டில் தடுப்பணை அமைத்தல், ஊரணி சீரமைத்தல், வரத்துக்கால் சீரமைத்தல், அமிழ்வுக்குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகளும், ரூ.196 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு இடுபொhருள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இன்று சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்துக்கால் சீரமைக்கும் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை பார்வையிட்டேன். அப்பகுதி பஞ்சாயத்து தலைவரிடம் இப்பணிகளால் அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதா எனக் கேட்டறிந்து சீரமைக்கப்பட்ட வரத்துக்கால்வாய் ஓரங்களிலும் அமிழ்வுக்குட்டையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினேன்.
கீழமுடிமண், வெள்ளாரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி நீர்வடிப்பகுதிகளில் உள்ள 24 விவசாயிகளுக்கு ரூ.1,88,400/- மதிப்புள்ள பேட்டரி தெளிப்பான்கள், 39 விவசாயிகளுக்கு ரூ.3,11,805/- மதிப்பில் தார்ப்பாய்களும் வழங்கப்பட்டது. நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு 24 பயனாளிகளுக்கு ரூ.2,39,640/- மதிப்பில் 24 தையல் இயந்திரங்களும் இன்று வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்/வேளாண்மை இணை இயக்குநர் சொ.பழனிவேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, வேளாண்மை துணை இயக்குநர் வே.சாந்திராணி(நு.பா), ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், உதவிப்பொறியாளர் க.தமிம் அன்சாரி, ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் முத்துராமன், வெண்ணிலா மற்றும் சில்லாநத்தம், பாஞ்சாலங்குறிச்சி, கீழமுடிமண் நீர்வடிப்பகுதிகளின் நீர்வடிப் பகுதிக் குழுத்தலைவர்கள், செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.


