தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த கோவில் முற்காலத்தில் பதஞ்சலி முனிவர் தவமேற்றிய கோயில் என பெயர்பெற்றது. இவ்வூரில் உள்ள குளத்தில் நடராஜரின் திருநடனத்தினை பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதீஸ்வரரும் கண்டுகளித்து முக்தி அடைந்தனர் என்பது வரலாறு. இதனால் தான் சிதம்பரத்தினை போலவே இவ்வூரில் சிவனின் வழிபாடு நடைபெறுவதால் தென்சிதம்பரம் என இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலில் நீண்ட காலத்திற்கு பின்னர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோயிலில் கொடிமரம் அமைத்தல், ராஜகோபுரம் கட்டும் பணி உள்பட பல பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் வருடம் தோறும் வருஷாபிசேக விழா நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று வருஷாபிசேக விழாவை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து கோவில் முன்பு கலசங்கள் வைத்து சிறப்பு யாகங்கள் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. கடம் கோயிலை சுற்றி வந்து அதன்பின் விமான அபிசேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் மகா அபிசேகம் நடந்தது.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்து ஊர் பொதுமக்கள் ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரவை செய்திருந்தது.


