55. முத்து கிளி
தொடர் கதை -முத்தாலங்குறிச்சி காமராசு
முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். இதனால் 100 வீடுகள் தீக்கிரையானது. தீ வைத்தவர்களை ராஜதுரை கண்டு பிடித்து உதைக்கிறான். அவர்கள் அங்கிருந்து தப்பித்து பண்டாரவிளை நாடாரிடம் மருத்துவம் செய்கிறார்கள். அவர்களுக்கு உதவ கிறிஸ்தவ மேலை நாட்டு பிரசங்கியார் ரேணியஸ் அடிகளார் குதிரையில் வருகிறார். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமே ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். அதற்காக ஒரு முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை.
இனி.
55. காரை வீடு கட்டிய பனையேறி மக்கள்
மறுநாள் மூன்று பேரும் ஆற்றங்கரையில் கூடினர்.
“ஏலே இப்படி ஒருத்தனை ஒருத்தன் பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி ஏதாவது பேசுங்கல”
உலக்க நாடாருத்தான் ஆரம்பித்தார்.
“என்னத்தை பேச . நாம பேசுற நிலையிலா இருக்கோம்”.
பொன்னு நாடார் சலித்துக்கொண்டார்.
“ஏலேய் ராஜ துரை ஏதோ சொல்லப்போறான் . அவன் சொல்லையும் கேட்புமே”.
“என்னைத்தை கேட்க” சலிப்பாக இருந்தது.
“அவன் நாம காரை வீடு கட்டுனனுமுன்னு சொல்லுதான். நாம கட்ட முடியுமா?”
உலக்கநாடாருக்கு கோபம் வந்தது.
“ஏலே ராஜ துரை: அவன் கேட்கிறதுல நியாயம் இருக்குடே. என்ன ஏதுன்னு பதில் சொல்லு”
“தாத்தா இங்க பாரும். நாம ஏன் காரை வீடு கட்ட முடியாது. நம்ம பனை கட்டையை வைச்சித்தான் எல்லா பயலும் வீட்டுக்கு கட்டை குத்துதானுவ. நம்ம பயினியோட கடுக்காய் காய்ச்சித்தான் கட்டை குத்துக்கு அரைசெங்கல் குத்துதானுவ. நம்ம கிட்ட உழைப்பு இருக்கு. ஆத்து கரையில குறுமண் இருக்கு. மண்ணை நாமா செங்கலா அறுத்து காரை வீடு கட்டினா வேண்டாமுன்னா இருக்கு”. என்றான் ராஜதுரை.
அப்போது பால் நாடார் அங்கே வந்தார். “இவன் சொல்லுதது உருப்படுற மாதிரிதான்டே இருக்கு. நம்ம ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கட்ட போற இடத்தில புகையிலை வியாபாரம் பாக்க சிவகாசியில இருந்து ஒரு நாடார் குடும்பம் வந்து இருக்குடே. அவிய ஊருல தொழில் பாக்க நிறைய பேரு இருக்காவுலாம். நல்ல தொழில் கிடைச்சா இங்க வந்துருவாளாம். அவியளுல ஒருத்தரை கொண்டு வந்து நம்ம ஊருல செங்கள் சூளையும், ஓட்டு கம்பேனியும் வைக்க சொல்லுவோம். பனையேத்து போவ மத்த நாளுகளுல அந்த இடத்தில போயி உழைப்போம். நம்ம கூலிக்கு பதிலா பொருளை வாங்குவோம். காரை வீடு கட்டுவோம்” என்றார்.
எல்லாருக்கும் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.
“அப்படி செய்ய முடியுமா?”
“ஏன் முடியாது. நம்ம கிறிஸ்தவ மதத்துக்கு மாறினவிய எல்லோரும் புதுக்குடியிருப்பு ஏற்படுத்தி மத்தில அவிய ஆலயத்தை எழுப்பி இரண்டு புறமும் காரை வீடு கட்டி சும்மா நச்சின்னு வாழுதாவளே. அப்படி இருக்கும் போது நாம மட்டும் எப்படி வாழாம இருக்க முடியுமா-?”.
“நாம உழைக்க தயாரா இருந்தா நிச்சயம் காரை வீடு கட்ட முடியும்”.
“கட்ட முடியும் என்ன? கட்டுவோம்”.
ராஜ துரை உற்சாகமாக கூறினான்.
உலக்க நாடாரும், பொன்னு நாடாரும் சந்தோசமாக எழுந்தனர்.
“ஏடே இப்போ அந்த சிவகாசி பொயலை வியாபாரி மாரு எங்க இருக்கவா. அவியள போய் பாப்பும். அவிய மூலமாக ஏதாச்சும். செங்கல் சூளை வைக்க நம்ம ஆளுக கிடைக்காவுளா பாப்போம்”.
ராஜதுரை எழுந்தான்.
“தாத்தா நாளைக்கு காலையில நாம ஸ்ரீவைகுண்டத்துக்கு கிளம்புவோம்”.
என்றான்.
தற்காலிகமாக அந்த சிறிய கூட்டம் கலைந்தது .
மறுநாள்.
அதிகாலையில மூன்று பேரும் நடைபயணமாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கட்டும் இடத்துக்கு கிளம்பினார்கள்.
ஸ்ரீவைகுண்டத்தில் அணைக்கட்டும் வேலை மிக வேகமாக நடந்து கொண்டிருந்தது.
பாளையங்கோட்டையை உடைத்து அதில் உள்ள கற்களை கொண்டு அணையை கட்டிக்கொண்டிருந்தார்கள். பக்கிள் துரை என்ற ஆங்கிலேய கலெக்டர் தான் இதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தார்.
பாளையங்கோட்டை ஜெயில் கைதிகள் தான் இந்த வேலையை செய்து கொண்டிருந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள மக்களையும் கொண்டு வந்து அணைக்கட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள்.
ராஜதுரை உலக்கநாடார், பொன்னு நாடாரை கூட்டிக்கொண்டு அவ்விடத்துக்கு வந்தான்.
ஒரிவரிடம் விசாரித்தான்.
“இங்கே பொயலை வியாபாரி எங்க நிக்காரு?”
“அதோ அந்த தூரத்தில் மரம் தெரிகிறதே. அங்கத்தான் நிப்பாரு” என்றான் ஒருவன்.
அவன் சொன்ன இடத்தில் தான் புகையிலை வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தினை நோக்கி “வாருங்கள்” என இருவரையும் அழைத்து ச்சென்றான் ராஜதுரை.
அங்கே ஒருவர் புகையிலை விற்றுக்கொண்டார். அவருக்கு சிவநேசன் என்று பெயர். சிவகாசி தான் பூர்வீகம். அங்கிருந்து குடும்பத்தோடு வியாபாரம் செய்ய வந்து இருக்கிறார்.
மணக்கரை கிராமத்தில்தான் அவரது குடும்பம் இருக்கிறது. அங்கிருந்து காலையில் வியாபாரத்துக்கு வந்து விட்டார்.
அவரை மூன்று பேரும் சந்தித்தனர். அந்த நேரம் குதிரையில் கலெக்டர் பக்கிள் துரை அவ்விடத்துக்கு வந்தார். அங்குள்ள மக்களிடம் விவரத்தினை கேட்டறிந்தார். அதன் பின் மக்களோடு மக்களாக நின்று அவர்கள் செய்யும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
சிவநேசன் தான் பேசினார். “இங்கிலிஷ் கலெக்டர் இங்க வந்தமா. வேலையை பார்த்தோமான்னு போவமா பாவம் வெயிலில கிடந்து இந்த மக்களுக்காக வேலை செய்யிறாரு” என்றார்.
உலக்கநாடார், அவரிடம் வந்தார். “அண்ணாச்சியோ அப்படி இவரு என்ன த்தான் செஞ்சாரு”. என்று வாயை வம்புக்கு இழுத்தார்.
“யோவ் உமக்கு வேர ஊரா. பக்கிள் துரை பத்தி உமக்கு தெரியாதோ?” என கேட்டார்.
“ஆமாம் அண்ணாச்சி. எனக்கு சரியா தெரியலை . அதான் கேட்டேன்”.
“யோவ் மனிசன் நம்ம மக்களுக்காகவே செத்துக்கிட்டு கிடக்கான். அவன் ஒவ்வொரு நாளும் செஞ்ச காரியம் நம்ம மக்க சன்னதி சன்னதியா அனுபவிக்க மாரி செஞ்சி வச்சிருக்கான்”.
“அதான் கேட்கேன் அண்ணாச்சி. அப்படி என்ன செஞ்சிருக்காவிய” உலக்க நாடார் அப்பாவியாக கேட்டார்.
“நம்ம பயலுவத்தான் தாமிரபரணி தோன்றுத இடத்தில மலைங்காட்டுல காட்டை அழிக்கணுமுன்னு திட்டம் போட்டு மரங்களை வெட்டிட்டு தேயிலை தோட்டம் போடணுமுன்னு அலைஞ்சானுவ. இந்த மனுசன் வெளிநாட்டுக்கு அலைஞ்சி கோர்ல கேஸ் போட்டு, காட்டை அழிஞ்சா நம்ம பூமி தாமிரபரணி வற்றி போய் நெல்லை மாவட்டம் பாலை வனமா போயிடுமுன்னு வாதாடி, காட்டை அழிக்க உடாம கோர்டில ஆடர் வாங்கி, காட்டை வெட்ட வுடமா பண்ணிட்டாரு”.
“அப்படியா?”.
“ஆமாம் நம்ம சுலோசன முதலியார் காலத்தில திருநெல்வேலியில கட்டினாவுலே ஒரு பாலம். அது ஆத்து வெள்ளத்தில தூண் உடைஞ்சி போச்சி. இந்த கலெக்டருத்தான் அதை கட்டி பாலத்தை சீர் செஞ்சி இருக்காவ”.
பொன்னு நாடாரின் கண்கள் விரிந்தது.
“அது மட்டுமா? ஸ்ரீவைகுண்டம் பாலத்தை கட்டி, தென்கால் வடகாலுன்னு இரண்டு கால்வாய் வெட்டி மக்கள் செல்வச்செழிப்பாக வாழ ஏற்பாடு செஞ்சி இருக்காவ. இப்ப முடியப்போற தருவாயில வேலை இருக்கு. வடகாலுல ஏரல், பேய்குளம், செபத்தியாபுரம், குலையன் கரிசலுன்னு தண்ணீரை கொண்டு போய் கோரம்பள்ளம் குளத்தில தண்ணீரை தேக்கி, மீதி தண்ணீரை தூத்துக்குடி ஊருக்குல கொண்டு போய் ஓடை மூலமாக தண்ணீரை பாய வச்சி. தூத்துக்குடி நகரை அழகாக்கி பாக்க ஏற்பாடு செஞ்சிட்டு வாராரு”.
சிவநேசன் சொல்ல சொல்ல ஆச்சரியமாய் பார்த்தார் உலக்க நாடார்.
“கடல் பாதி கடம்பா பாதின்னு சொல்லுத கடம்பா குளத்துக்கு தண்ணீர் கொண்டு போகப்போறரு. இந்த பகுதி பூராவும் இம்ம செல்வ செழிப்பாயிரும்” என்றார்.
சிவநேசன் சொல்வது உண்மைத்தான். தாமிரபரணியில எட்டாவது அணைக்கட்டு திருவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு புதுக்குடிக்கும், திருவைகுண்டத்திற்கும் இடையே கடலுக்கு மிக அருகில் கட்டப்பட்டு வருகிறது. லெப்டினண்ட ஷெப்பர்டு என்பரலால் தான் இவ்வணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த இடத்தில் ஆற்றோட அகலம் 800 கஜம். அணைக்கட்டின் மதிப்பு பதினோராயிரங்கள் . இதன் மேற்பார்வை த்தான் கலெக்டர் பக்கிள் துரை.
பக்கிள்துரை இங்கு அணைக் கட்டும் போது இப்பகுதி மக்களிடம் மிகவும் அன்போடு பேசி வந்தார். இங்கு வசித்த சில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பக்கிள்துரை எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர்.
ஆங்கிலேய அதிகாரிகள் தான் நம்ம பகுதி மக்கள் மனதை எவ்வளவு கவர்ந்திருக்கிறார்கள்.
பேட் என்ற பெயரில் ஒரு கலெக்டர் உண்டு. அவர் மக்களுக்கு நிறைய சேவைசெய்திருக்கிறார். எனவே தான் அவர் பெயரால் பேட்மாநகரம், பேட் துரைச்சாமிபுரம் என்ற பெயரில் ஊர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகில் உண்டு.
தாமிபரணி ஆற்றங்கரையில் உள்ள சிவராம மங்கலம் போன்ற ஊர்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் குடியிருப்பு அடிக்கடி வெள்ளம் வந்து அழித்து விட்டது. எனவே இந்த இடத்தில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் கொடுத்தார், கேம்லாபாத் என்ற ஆங்கிலேய அதிகாரி. எனவே புதிய குடியிருப்பு உருவாகிய இடம் அவர் பெயராலேயே கேம்லாபாத் என்றே அழைக்கப்படுகிறது.
சிவநேசன் தொடர்ந்தார்.
“அதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள் எப்போதும் ஒற்றுமையா இருக்கணுமுன்னு பேய்குளத்தில் விவசாயிகள் சங்கம் ஆரம்பிச்சி அங்குள்ள கிறிஸ்தவ பிரசங்கியர்களை அதில் நிர்வாகிகளாக போட்டு நிர்வாகிக்க ஆரம்பிச்சார். இப்படி நிறைய விசயம் பங்கிள் துரை செஞ்சுகிட்டு இருக்காரு. அதனாலத்தான் இன்னைக்கும் பாருங்க இந்த பகுதியில நிறை ய குழந்தைகளுக்கு பக்கிள், பக்கிள் துரை, பக்கிள் நாடாரு, பக்கிள் பாண்டியன்னு பெயர் வச்சி மக்க அழகு பாக்காவ”.
கேட்டுக்கொண்டே இருந்த ராஜத்துரைக்கு பெருமையாகத்தான் இருந்தது. “பெரும்பாலுமே இந்த பகுதியில உள்ள நாடார்கள் எல்லோரும் ஒரு காலத்தில தாமிரபரணி படுகையில வாழ்ந்தவுகத்தான். இவுகளை பிற்காலத்தில ஆட்சியாளர்கள் அடிச்சி விரட்ட ஆரம்பிச்சாங்க. அதனாலத்தான் அவங்கள் ஆள் அரவம் இல்லாத தேரிக்காட்டு பகுதிக்கு வந்து வாழ ஆரம்பிச்சாங்க. இங்கேயே தங்கி பனை மரம் ஏறி பிழைச்சி வந்தாங்க. ஸ்ரீவைகுண்டம் அணைகட்டு கட்டினா. நிறைய நாடார் மக்களோட வாழ்க்கை தரம் உயர ஆரம்பிச்சிரும். ஆக பக்கிள் துரை பெயரை நம்ம மக்கள் வைக்கிறதுல தப்பே கிடையாது”.
சிவநேசன் தொடர்ந்தார். “இந்த அணைக்கட்டு கட்ட எட்டயாபுரம் ஜமீன்தார் பணம் கொடுத்தாரு. நம்ம காயாமொழி தொழில் அதிபர் சிவந்தி ஆதித்தனார் பணம் கொடுத்தார். இப்படி பணக்காரங்க கிட்ட பணம் வசூலிக்கவும் பக்கிள் துரை தயங்கலை”.
சிவநேசன் சிறிது நேரம் அமைதி காத்தார்.
உண்மைதான். பெரும்பாலுமே ஆங்கிலேய கலெக்டரை துரைன்னு இந்த பகுதியில அழைக்கிறது வழக்கம். இதனால நிறைய பேரு பிள்ளையங்களுக்கு துரைன்னு பேரு வைப்பாங்க. துரைப்பாண்டி, துரைச்சி, துரைராஜ் இப்படி துரையில நிறைய பேரு இருக்கும். பேட்துரையை ஒரு படி மேலே போய் சாமின்னே அழைப்பாங்க. அவங்க நல்லது செஞ்சா நம்ம கடவுள் மாரி தானே. அதனால தான் அவங்க பெயருக்கு பின்னால சாமி தொத்திக் கொண்டிருச்சி. அதனாலதான் ஸ்ரீவைகுண்டம் பக்கத்தில பேட்துரைச்சாமி புரமும் இருக்கு. இப்படி மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் நம்ம பகுதி மக்களுக்கு நிறைய ஒற்றுமை உண்டு.
உலக்க நாடாருதான் சொன்னார். “யய்யா துரை மாரு நமக்கு நெறையா செஞ்சிருக்காவ. அதை வுடுங்க நாங்க தேடி வந்த கதையே வேறே”. என தங்களது சொந்த கதையை ஆரம்பித்தார்.
“என்ன கதை” சிவநேசன் கேட்டார்.
“யய்யா எங்க ஊருல வீடு புறாவும் எறிஞ்சி போச்சி. பாவி பயலுவ ஆ..ன்னா வூன்னா வந்து பொசுக்கு பொசுக்கு கொழுத்தி புடுதானுவ. அதனால நாங்கள் காரை வீடு கட்டணும். அதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணும்”.
சிரித்தார். “யய்யா நான் பொயலை வியாபாரி. நான் உங்களுக்கு என்ன சப்போர்ட் செய்ய முடியும்”.
“உங்க சொந்தகாரவிய நிறைய பணக்காரர்களா இருக்காவளாம். அவுக எங்க ஊருல செங்கச்சூளை வைக்க வருவாளா?”-
சிவநேசன் யோசித்தார். ஏதோ ஒரு யோசனையில் தான் இந்த மக்கள் வந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
“சிவகாசி காரவுக நிறைய பேரு வெளியே போய் தொழில் செய்யணுமுன்னு ஆசைப்பட்டுட்டுத்தான் இருக்காவ. நம்ம சொந்தகாரங்க சில பேரு அப்படித்தான் இருக்காவ. ஆனால் இவுக வீடு கட்டணுமுன்னு வருவாவளா?” யோசித்தார்.
ராஜ துரைத்தான் எடுத்துச்சொன்னான்.
“இங்க பாருங்க அய்யா. நாங்க உழைப்பை கொடுக்கோம். எங்க வீட்டுக்கு செங்கல் ஓடு போக நாங்க நிறைய ஓடு தயாரிச்சுதாரோம். அதை நீங்க வெளியே வித்து சம்பாத்தியம் பண்ணலாம். நாங்களும் எங்களால இயன்றதை தருவோம்” என்றான்.
“யய்யா நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான். ஆனால் நான் முடிவு செய்ய முடியாதுல்லா. முடிவு எடுக்க எங்க சொந்தகாரவிய ஒத்துக்கணும்”.
“எப்படியாவது ஏற்பாடு பண்ணுங்க” பொன்னு நாடார் சிவநேசன் கையை பிடித்துக்கொண்டார்.
“சரி கொஞ்சம் இருங்க பக்கிள் துரை போகட்டும். பொறவு பேசுவோம்” என்றார்.
பக்கிள் துரை அணைக்கட்டும் பகுதியை பார்வையிட்டார். அதன் பிறகு தொடர்ந்து குதிரையில் ஏறினார். நிறைய ஏழை குழந்தைகள் அவரை பார்க்க வந்திருந்தனர். அவர்கள் அருகில் போய் இறங்கினார். அவர்களை பற்றி விசாரித்தார். கலெக்டரின் பி.ஏ வை கூப்பிட்டார். அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்ய சொன்னார்.
தலையில் எண்ணெய் இல்லாமல் போட சட்டை இல்லாமல் தான் நிறைய குழந்தைகள் இருந்தனர். அவர்கள் பொற்றோர்களிடம்.
“என்ன வேலை செய்யுறீங்க. உங்க புள்ளையளை ஏன் ஸ்கூலுக்கு அனுப்பல” என அவர் ஆங்கில கலந்த தமிழில் கேட்டார்.
அந்த குழந்தையின் பெற்றோர்கள் தலையை சொரிந்தனர்.
அவர் தனது பி.ஏ வை கூப்பிட்டார். “ஏ. மேன். இவர்கள் பின்னாலே ஒரு ஆளை போகச்சொல். இவர்களுக்கு என்ன தேவைன்னு கேட்டு அதை செஞ்சிக்கொடு. இவர்கள் பிள்ளையள படிக்க பள்ளி இருக்கான்னு பாரு. இல்லை. பக்கத்து மிஷினரி கிட்டே சொல்லி இவங்க ஊரில ஒரு பள்ளி கூடம் கட்ட சொல்லு” என்று ஆணை பிரபித்தார்.
“சரி துரை. சரி . துரை” என அவர் தலை அசைத்தார்.
பெற்றோர்களை பார்த்து. “நீங்க இன்னைக்கு உங்க வயிற்று பிழைப்பை பாக்கது பெரிசு இல்லை. உங்க குழந்தைக்கு கல்வி ரொம்ப பெரிசு .அதை கொடுங்க” என்றார்.
அதன் பின் குதிரையில் ஏறி கிளம்ப ஆயத்தமானார்.
பொன்னு நாடார் சொன்னார். “ஏலேய் பேசாம இந்த கலெக்டர் கிட்டே சொல்லி நாம பேசாம ஒரு கிறிஸ்தவ ஆலயத்தையும் பள்ளிக்கூடத்தையும் நம்ம ஊருல கட்டிருவோம். பொறவு நாம நல்ல வளர்ந்திடலாம்”.
“சும்மா இருமே. உம்ம குசும்புக்கு அளவே கிடையாது. நமக்குன்னு ஒரு தராதரம் இருக்கு. நான் எப்போதும் சொல்றதுதான். பெத்த அப்பனை விட்டுட்டு, வசதி கிடைக்குதுன்னு இன்னொரு அப்பனை அப்பன்னு சொல்லக்கூடாது” என்றார் உலக்க நாடார்.
ராஜதுரை சொன்னான், “நமக்கு இப்போ இது பிரச்சனை இல்லை. வாங்க நாம அண்ணாச்சி கூட மணக்கரை போவும். அங்கே போய் நல்ல செங்கல் சூளை வைக்கிற ஆளு கிடைக்காராருன்னு பாப்போம்”. என்றான்.
“சரி” என்றனர் இருவரும்.
அன்று அணைக்கட்டில் 5 மணிக்கு வேலை முடிந்தது. நிறைய தொழிலாளிகள் சிவநேசனிடம் வந்து புகையிலை வாங்கினார்கள். இவர் அவர்களிடம் புகையிலையை விற்று விட்டு, காசாக்கி கொண்டு வெறும் சாக்கு பையோடு ஆற்றை விட்டு வெளியே வந்தார்.
இந்த மூவரையும் பார்த்தார். “வாங்க மணக்கரைக்கு போவும். நாளைக்கு ஞாயிற்று கிழமை தான். அதனால லீவுதான் நாளைக்கு உங்க கூட தொழில் செய்ய யாரும் கிடைக்காவுளான்னு ஊர்ல இருந்து பாப்போம்” என கிளம்ப ஆயத்தமானார்.
புகையிலை விற்ற பின்பு இருந்த சாக்கு பையை மடக்கினார். அதைகக்கத்தில் வைத்துக்கொண்டு முன்னால் நடக்க, அவரின் பின்னாலேயே மூன்று பேரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
****
மணக்கரைக்கு நடந்து போகும் போதே அந்த ஊரின் சிறப்பை பற்றி நான்கு பேரும் பேசிக்கொண்டே சென்றார்கள்.
“யய்யா நம்ம கள்ளவாண்ட சுவாமி பிடிமண்ணே மணக்கரை ஊரு கோயிலில இருந்து தான் எடுத்து கட்டியிருக்காவ. நம்ம எல்லா கள்ளவாண்ட சாமி கோயிலுக்கும் மூலக்கோயில் மணக்கரை கோயிலுத்தான்”.
பொன்னு நாடார் பெருமையாக சொன்னார்.
“எல்லா விசேசமும் இந்த ஊருல உண்டே. நம்ம வீரமாமுனிவருன்னு ஒரு அய்யா உண்டுல்லா. அவருத்தான் மணக்கரை ஊருல கித்தேரி மாதா கோயிலை கட்டி தேர் செஞ்சு கொடுத்து இருக்காருல்லா”. உலக்க நாடார் சொன்னதை அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டனர்.
“அப்படியா?”
“ஆமாம் எங்க ஊருல கித்தேரி மாதாவும் ரொம்ப விசேசம்”.
சிவநேசன் சொன்னார், “வீரமாமுனிவர் இந்த ஊரு கித்தேரி மாதாவை பற்றி கித்தேரி அம்மானைன்னு ஒரு பாடலே பாடியிருக்காரு”.
“அப்படியாடே. ரொம்ப சிறப்பாச்சே”.
“அது மட்டுமா? இந்த ஊருல தான் நிறைய வியாபாரி இருந்து இருக்காவ. அதுல மிகப்பெரிய துணி வியாபாரியும் ஒருத்தர் இருந்தார். அவுக வழியா கூத்தங்குளி கடற்கரைக்கு கித்தேரி மாதா போயிருக்காவ”. பொன்னுநாடார் தனக்கு தெரிஞ்ச கதையை கூறினார்.
“நல்லா இருக்குடே இது என்ன கதை. கொஞ்சம் சொல்லேன்”. உலக்க நாடாருக்கு நடந்து போற அலுப்பு தெரியாம இருக்க இதுபோன்ற கதை சொன்னால் நல்லது என நினைத்தார்.
“மணக்கரையை சேர்ந்த துணி வியாபாரி ஒருத்தர் இருந்து இருக்காவ. அவிய பல ஊருக்கு வியாபாரத்துக்கு போயிட்டு வருவாவ. இவியளுக்கு கித்தேரி மாதா மீது கொள்ளை பிரியம். இவிய தொழிலுக்கு கிளம்பும் முன்பு மாதாவை தரிசனம் செஞ்சிட்டுத்தான் கிளம்புவாவ. அந்த சமயம் மாதா இவரோடு துணைக்கு துணி மூட்டையில் ஏறி கூடவே போயிட்டா. அவளுக்கு பக்தனை முள்ளு மொறிவு இல்லாம காப்பாத்தணுமுன்னு ஆசை. அதான் கூடவே இருந்து இருக்கா. ஒருசமயம் இந்த வியாபாரி திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை வழியா வியாபாரம் செஞ்சிக்கிட்டே போயிருக்காவ. அங்க கூந்தங்குளின்னு ஒரு ஊருல மூட்டையை இறக்கி வைச்சி தொழில் செஞ்சிருக்காவ”.
சிறிது நேரம் மூச்சி விட்டார் பொன்னு நாடார்.
“அங்கு உள்ள அழகான கடற்கரையையும், அங்கு வாழ்ந்த மக்களையும் கீத்தேரி மாதாவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு எனவே அங்கேயும் அமர மாதா ஆசைப்பட்டாவ. இதனால துணி மூட்டையில் இருந்த மாதா டபுக்குன்னு அங்க இறங்கிட்டாவ. கடற்கரையிலே தங்கிட்டாவ. அதோட மட்டுமில்லாம அங்கே இருந்து அருள் புரிய ஆரம்பிச்சிட்டாவ. மாதா அங்க இருக்கது, மக்களுக்கு உணர்ந்து புரிஞ்சு போச்சி. அவுக செய்யுற நல்லதை கண்டு மனம் குளிர்ந்து போனாவ. உடனே கித்தேரிமாதா அங்கே இருந்து அருள் புரியணுமுன்னு கோயில் கட்டி வணங்க ஆரபிச்சிட்டாவ”. பொன்னு நாடார் சொல்லி முடித்தார்.
“பராவாயில்லையே. மணக்கரையில இருந்து கள்ளவாண்ட சுவாமிதான் ஊர் ஊருக்கு போனாவன்னு பாத்தா வேதக்கார கித்தேரி மாதாவும் போயிருக்காவளே”. உலக்க நாடார் ஆச்சரித்தோடு கேட்டார்.
சிவநேசன் தொடர்ந்தார். “இந்த ஊரு சாதரண ஊர் இல்லை. எங்க குடும்பமே சிவகாசியில இருந்து வந்து இங்கே தங்கிட்டோம். அதுக்கு காரணமும் இருக்கு” என்றார்.
பேசிக்கொண்டே அந்த நால்வரும் ஸ்ரீவைகுண்டத்தினை தாண்டி தோழம்பண்ணை பகுதிக்கு வந்து விட்டார்கள்.
சிவநேசன் புகையிலை வியாபாரம் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு வந்த வரலாற்றை பற்றி பேச ஆரம்பித்தார்.
“ரொம்ப நாளாவே சர்க்கரை பாகுவை நனைத்து பொகையிலை வியாபாரம் செய்யும் குடும்பம் சிவகாசியில் வாழ்ந்து வந்தோம். நாங்க இந்து நாடார் வம்சத்தினை சேர்ந்தவர்கள். சிவகாசியில் நடைபெற்ற கலவரத்தின் போது எங்க குடும்பம் கடம்பூர் அருகே வந்தது. அங்கேயும் பொகையிலை வியாபாரம் செய்து கொண்டிருந்தோம்.
அப்போதுதான் தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் பாலம் கட்டும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை செய்யும் வேலையாட்களுக்கு பொகையிலை வியாபாரத்தினை செய்ய எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் வந்தார். அவர் வியாபாரத்தினை முடித்து விட்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தங்கியிருந்தார். இந்த பாலம் கட்டும் பணி பல நாள்களாக தொடர்ந்தது. ஆகவே அவர் வியாபாரத்திற்காக ஸ்ரீவைகுண்டம் வந்து விட்டு, பின் குடும்பத்தினைப் பார்க்க கடம்பூர் செல்வது கடினமாகவே இருந்தது. எனவே நமது குடும்பத்தினை இங்கேயே கூட்டி வந்தால் என்ன? என்று நினைத்தார். அதன்படி எங்கள் குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி மற்றும் ஓரே ஒரு மச்சான் ஆகியவர்கள் சேர்ந்த குடும்பம் மணக்கரை கிராமத்தினை நோக்கி வந் தோம். இங்கேயே ஒரு இடத்தினை தேர்வு செய்தோம். அழகான குடியிருப்பு ஒன்றை அமைத்தோம். முதலில் இங்கு நந்தவனம் அமைத்து பிள்ளையார் கோயில் ஒன்றை கட்டினோம். நாங்கள் பிள்ளையாரை வழிபட்டு வியாபாரத்தில் செழித்தோங்கி வளர்ச்சியுடன் இருந்தோம்”.
சிவநேசன் சொல்வதை ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டே நடந்தனர்.
“ஆனாலும் எங்களுக்கு ஆங்கிலேயர்கள் தொடர்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப்பகுதியில் மிக அதிகமான நாடார்கள் கிறிஸ்தவ மதத்தினை தழுவியிருந்த காலம். நாங்கள் சிவகாசியில் இருந்து இங்கு வந்து குடியிருந்த காரணத்தினால் இங்குள்ள இந்து நாடார்கள் எங்களுக்கு பெண் தர மறுத்தார்கள்”.
“இதற்கிடையில் எங்களில் சிலர் ஆங்கிலேய குருமார்கள் பிரசங்கத்தைக் கேட்டு கிறிஸ்தவ மதத்தின் மீது பற்றுதல் கொண்டனர். மணக்கரையில் திருச்சபை ஒன்றை ஏற்படுத்தினர். அந்த திருச்சபையில் இந்து குடும்பத்தினை சேர்ந்தவர்கள் இணைந்து கிறிஸ்தவ மதத்தினைத் தழுவினர்”.
சிவநேசன் பின்னே மூன்று பேரும் நடந்தனர்.
“அதன் பின் இந்த பகுதியில் கல்வி இல்லா குறையை போக்க கிறிஸ்துவ குருமார்கள் முடிவு செய்தனர். ரேணியஸ் அடிகளார் போன்ற பிரசங்கியர்கள் தாமிரபரணி கரையில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களை அமைத்து வந்தனர். அப்போதை ஆங்கிலேயே கலெக்டர் தாமஸ் இதற்கு உறுதுணையாக இருந்தார்.
இப்படி இருக்கும் போது தான் மணக்கரை கிராமத்தில் உள்ள பிச்சை நாடார் என்ற ஆசீர்வாத நாடார் கிறிஸ்துவத்தில் ஐக்கிய மாகி இருந்தார். அவர் ஆங்கிலேய துரைகளுடன் நல்ல உறவு வைத்துக் கொண்டார். அதன் பயனாக கிறிஸ்தவ துவக்கப் பள்ளி மணக்கரையில் உருவாக்கினார்கள்.
இந்த பள்ளிக் கட்டிடம் கட்ட இந்த பகுதியில் வாழ்ந்த இந்து நாடார்கள் உள்பட பொதுமக்கள் உதவினர்”.
சிவநேசன் கதை நீண்டுக்கொண்டே போனாது. ஆனால் உலக்கநாடாருக்கு பொறுமை இல்லை.
“சரி அதெல்லாம் இருக்கட்டும் எங்க ஊருக்கு செங்கசூளை எப்படி கொண்டு வரலாம் சொல்லுங்க”. என்று இடை மறித்தார்.
“இன்னைக்கு ராத்திரி எங்க ஊரு பெரிய மனுசங்களை கூப்பிட்டு பேசிருவோம்” என்றார் சிவராமன்.
அவருக்கு உதவியாக சாக்கு மூடையை ராஜதுரை வாங்கி தலையில் வைத்துக்கொண்டான். நான்கு பேரும் மணக்கரையை நோக்கி பெரிய கனவுடன் நடக்க ஆரம்பித்தார்கள்.
*****
நடந்து வந்தவர்கள் மதிய சாப்பாட்டை முடித்து விட்டு, இரவு கூட்டத்துக்காக காத்து இருந்தனர்.
இரவு ஆனது.
மணக்கரை பிள்ளையார் கோயில் முன்பு ஊர் முக்கிய பிரமுகர்கள் கூடினர். நடுவக்குறிச்சியில் இருந்து சங்கர நாடார் வந்து இருந்தார்.
“ஏடே நம்ம ஊருல நீங்க சொல்ற மாரி செங்கல் சூளை தொழில் செய்ய யாரு இருக்கா” என சங்கர நாடார் கேட்டார்.
அவர் ஒரு வகையில் ராஜதுரைக்கு சொந்த காரர்தான். “அண்ணாச்சியோ. நீங்க மனசு வச்சா முடியும். நம்ம ஊரு காரவிய நல்ல உடலை மடக்கி போட்டு பனை ஏறுதாவ. ஆனா பெரிசா சொத்து ஒண்ணும் சேத்து வைக்கல. அதனால ஏதாவது உதவி கிடைச்சா காரை வீட்டுல உட்காந்து கிடுவாவ. கடனை கொஞ்சம் கொஞ்சம் அடைச்சிருவாவ”. ராஜ துரை உறுதியாக சொன்னான்.
“நீ சொல்றதை நினைச்சா சந்தோசமாத்தான் இருக்குடே. நம்ம மக்க மாடு மாறி உழைக்காவ. அவியளுக்கு ஒரு ஓடு வீடு காரை வீடு கட்டணுமுன்னா இதுதான் வழி. அதுக்கு ஒரு தொழில் காரவிய நமக்கு கிடைக்கணும்”. யோசித்தார் சங்கர நாடார்.
அப்போது தான் எல்லோருக்கும் நினைவுக்கு வந்தது. கருப்பட்டி வியாபாரம் செய்ய சிவகாசியில் இருந்து நடராஜன் நாடார் வந்து இருந்தார். இவர் இந்த பகுதியில் உள்ள கருப்பட்டியை எடுத்து குலசேகரபட்டினத்தில் உள்ள பாரி கம்பெனி வழியாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். இப்படி ஏற்றுமதி செய்வதற்காக இவர் தாமிரபரணி கரையில் ராஜதுரை வசித்த கிராமத்தில் உள்ள தென் பகுதியில் உள்ள பனங்காட்டுக்குள் அடிக்கடி செல்வது வழக்கம். அவருடன் சங்கர நாடாரும் செல்வார்.
அங்கு பனை மரம் மிக அதிகமாக இருக்கும். சில இடங்களில் மதிய வெயில் கூட தெரியாத அளவுக்கு பனை மரங்கள் கும்பல் கும்பலாக இருக்கும். ஒவ்வொரு கும்பலுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். ஆத்தாங்கரை வடலி, சாத்தாங்கோயில் வடலி, புது மடை வடலி உள்பட பல பெயர் வைத்து இருப்பார்கள்.
அந்த இடம் முழுவதும் ஆறாம்பண்ணை முஸ்லீம் சமுதாயத்தினை சேர்ந்த ஒருவர் பெயரில் இருந்தது. நடராஜ நாடார் கூட அலைஞ்சாலும் சங்கரநாடார் ஆறாம்பண்ணை முஸ்லீம் கிட்ட தண்ணீர் பாச்சும் வேலையும் செய்து கொண்டிருந்தார்.
அந்த இடத்தில் வைத்து அவருக்கு ஒரு யோசனை உதித்தது.
“யய்யா நான் ஒரு யோசனை சொல்லுதேன். திருநெல்வேலி வீராபுரம் போவோம், நடராஜன் நாடாரை பாப்போம். அவர் சரின்னு சொன்னா ஆறாம்பண்ணை சாகிப் கிட்டே சொல்லி அந்த பனைக்காட்டை விலைக்கு வாங்குவோம்”. என்றார்.
ராஜதுரை மீதியை சொன்னான்.
“அங்குள்ள பனை மரத்தையெல்லாம் வெட்டி வீட்டுக்கு கூரை போட பயன்படுத்துவோம். கீழே உள்ள மண்ணை செங்கலா அறுத்து நாம வீடு கட்டுவோம். ஓட்டு கம்பேனி ஆரம்பிச்சு அதையும் நாம செய்வோம்” என்றான். எல்லோருக்கும் சந்தோசம். நாளைக்கு காலையில எல்லோரும் வீராபுரம் போவோம். அங்கே நடராஜன் நாடாரை பார்த்து பேசுவோம் என்று முடிவு செய்தனர்.
மறு நாள் அந்த காட்டுக்குள் சங்கர நாடாரை கூப்பிட்டுக்கொண்டு போனார்கள் மூன்று பேரும்.
அந்த இடமே மிகப் பெருங்காடாக இருந்தது. அந்த காட்டில் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தில் உள்ள விழுதுகள் இடையே திருடர்கள் மறைந்து இருந்தால் கூட யாரும் பார்க்க முடியாது.
“ஒரு விசயம் தெரியுமாடே. இந்த பகுதியில கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்கள் போலீசுக்கு பயந்து இந்த காட்டில் வந்து தான் ஒளிஞ்சி கிடப்பாவ. போலீசே வந்தாலும் அவியள கண்டு பிடிக்க முடியாது”. என்றார் சங்கரநாடார்.
உண்மை தான் அந்த அளவுக்கு காடு மிகவும் அடர்த்தியாக இருந்தது.
அதே வேளையில் இந்த இடத்தினை நடராஜன் நாடார் வாங்குவாரா என அனைவருக்கும் கேள்விக்குறியாகவே இருந்தது.
உலக்க நாடார் சொன்னார். “ஏலேய் நீங்க செய்யிற வேலை மோசமான வேலைடே. பகல் கனவுல்லாம் காணுறீய. அவர் இந்த காட்டை வாங்கி உங்களுக்கு வீடு கட்ட செங்கல் அறுத்து தரப்போறாராக்கும். நானே நம்ம ஊருல இருந்து இருக்கேன் இந்த காடு இப்படி இருக்குமுன்னு தெரியாமத்தாண்டே இருந்து இருக்கேன்”. ஆச்சரியத்தோடு பேசினார்.
“உமக்கு வேறே சோலியே கிடையாது மச்சான். எப்ப பாத்தாலும் தடி போட்டுக்கிட்டே இருப்பீரு”. பொன்னு நாடார்.
“பொறவு என்னடே நீங்க கொஞ்சமாவது நல்ல விசயமா நினைச்சா சரி. எட்டாத இடத்தை எட்டி பிடிக்க அலையிறீயளே”.
உலக்க நாடார் சொல்வதில் ஒரு உண்மை இருந்தது.
எனவே எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
“சரி. இருந்தாலும் நாளைக்கு ஒரு எட்டு வீராபுரம் போயிட்டு வந்துருவோம் அங்க நடராஜ நாடாரு கருப்பட்டி ஆபிஸ் போட்டு இருக்காவ. அவரை பாப்போம் என்ன சொல்றாருன்னு கேட்போம்” என முடிவு எடுத்தனர்.
மறுநாள் காலையிலேயே கருப்பட்டி ஆபிஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
*****
அக்ரகாரத்தில் மிகவும் கோபத்தில் இருந்தார் ஐயர்.
அவரை சுற்றி அடியாள்கள் நின்றுகொண்டிருந்தனர்.
“அந்த பயலுவ வீட்டை புறாவும் எரிச்சாச்சு. குடியிருக்க வீடு இல்லாம நடுத்தெருவுக்கு வந்துட்டானுவ. அது மட்டுமா. சாப்பிடவும் வழியில்லாம இருக்கானுவ. ஆனாலும் எந்த பயலும் நம்மை வந்து பாத்து மன்னிப்பு கேட்ட மாரி தெரியலை. உதவியும் கேட்டகலை” கொக்கரித்தார் ஐயர்.
அடியாள்கள் அமைதியாக நின்றனர்.
“ஒரு வேளை அவ்வளவு பேரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிட்டானுவளா. அங்குள்ளவனுவ இவனுவளுக்கு உதவி செய்றானுவளா,”
“இல்லை சாமி அப்படி எதுவும் தெரியலை. வேதக்காரங்க யாரும் அவனுவளை பாக்க வந்த மாரி தெரியலை”
“பொறவு என்ன தான் முடிவு எடுத்து இருக்கானுவ. செத்த பொனம் மாரி கிடக்கானுவ”
“தெரியலையே சாமி”.
“அவனுவ நம்ம அடிமையா இருக்கனும். அதுக்கு என்ன செய்யணும் . அதுக்கு ஏற்பாடு செய்யனும்”.
ஐயருக்கு கோபம் கோபமாக இருந்தது. இந்த அடிமைகள் நம் அடிமை தனத்தினை விட்டு வெளியே போய் விடுவார்களோ என்ற ஆதங்கம் இருந்தது.
அடியாள்கள் பரக்க பரக்க விழித்துக்கொண்டு நின்றனர்.
“சாமி. அந்த ராஜ துரை பையன் இருக்கானே அவன் வெறுவாக்கெட்டவன் ஏதாவது ஐடியா கொடுத்து அந்த மக்களை வேறே வழியில கை தூக்கிருவான்”. அடியாள் ஒருவன் கூறினான்.
“அறிவு உள்ளவன் ஒருவனும் நமக்கு எதிரியா இருக்க கூடாது. அவனை இந்த ஊரை விட்டு கிளப்ப ஏற்பாடு செய்யுங்க. இல்லாட்டி ஏதாவது ஒரு பழியை அவன் மேலே தூக்கிப்போட்டு இந்த ஊரை விட்டு துரத்தி விடுங்க. அடிமைகள், அடிமையாகவே இருக்கட்டும்” ஐயருக்கு கோபம் தலைக்கேறியது.
“சாமி அவன் போவ மாட்டான். அவன்தான் இந்த பயலுவள ஏவி விட்டுக்கிட்டு இருக்கான். அவன் எப்படி போவான்”
ஐயருக்கு கண் சிவந்தது.
“நம்மளை எதித்து இந்த சாணக்குடி கூட்டம் இருக்குன்னா. அதுக்கு இவன் தான் காரணம். அவன் கை காலை உடைச்சிர வேண்டியது தானே”.
அடியாள் பயந்தே போய் விட்டான்.
“அவன் நம்ம காலை உடைச்சிருவான் சாமி. ஏற்கனவே ஒருத்தன் பண்டாரவிளையிலை கட்டுபோட்டுட்டு வீட்டில படுத்துக்கிடக்கான். எங்க காலு கை நல்லா இருக்கு. அதையும் உடைக்க சொல்லுதீயளா சாமி”
அவன் கண்களில் பயம் தெரிந்தது.
“அப்படின்னா அவனை எப்படி துரத்த. இந்த சாணக்குடி மக்களை எப்படி அனாதை ஆக்க”
“எங்க அறிவுக்கு ஒண்ணும் தெரியலை சாமி. நீங்க என்னவேணுமுன்னா என்னனாலும் செய்யுங்க”.
செய்யுறேன். அவனை விரட்டுதேன். அதுக்கு முதலில அவங்க சாதியை பல பிரிவை பிரிச்சி விடுறேன்.
ஐயர் தீர்க்கமான முடிவுடன் அன்றே அந்த கிராமத்தினை நோக்கி கிளம்பினார்.
*****
நடராஜ நாடார் இவர்கள் நான்கு பேரும் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டே இருந்தார். ஏற்கனவே கருப்பட்டி தொழில் செய்து வருகிறார்கள் . அந்த அனுபவம் அவருக்கு கை கூடி இருந்தது. இந்த பகுதி மக்களை நன்றாக தெரியும். நல்ல உழைப்பாளிகள். இவரிடம் விசுவாசியாகவும் இருப்பார். எனவே செங்கல் சூளை ஆரம்பித்தால் மக்களுக்கும் உதவி செய்த மாதிரியும் இருக்கும். அதே வேளையில் நமக்கும் ஒரு நல்லதொழில் உருவாகி விடும். என மனதுக்குள் நினைத்தார். ஆனாலும் பிடி கொடுக்காமல் பேசினார்.
“இங்க பாருங்கடே எனக்கு செங்கல் பிசினஸ் சரியா தெரியாது. ஏற்கனவே நான் கலியாவூர் காலங்கரையில இடம் வாங்கி போட்டு இருக்கேன். அங்கேயும் நம்ம மக்க எனக்கு சப்போர்டா இருக்காவ. அவுகளை வச்சி நாமா ஓட்டு கம்பேனி அமைச்சிருதேன். ஏற்கனவே கேரளாவுக்கு நாலு பேரை டிரைனிங் அனுப்பியிருவோம். ஆனா உங்க ஊருல நான் எப்படி செங்கல் தொழில் செய்ய போறேன்னு தெரியலை”. யோசித்தார்.
“யோவ் சங்கர நாடாரு. நீர் சப்போர்ட் பண்ணி எங் கூட இருக்கிறதா இருந்தா . அதுல நான் இறங்குதேன். உமக்குதான் ஆறாம்பண்ணை சாகிப் தெரியுமே? அவருக்கிட்டே ரேட்டு பேசும். இந்த தொழிலு தென்காசி பக்கம் சாம்பவர் வடகரை காரங்களுக்கு நல்லா தெரியும். அதுல தெரிஞ்ச இரண்டு பேரு எனக்கு உண்டு. அவுகளையும் கூப்பிடுவோம். செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்து வழியா நிலக்கரியை இறக்கி நம்ம ஊருல சூளை வைச்சி செங்கலை சுட்டுருவோம். செலவு எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீங்க நல்லா உழைக்கணும். என்னை கொண்டு போய் இந்த தொழிலை இழுத்து விட்டுட்டு நீங்க பாட்டுக்கு போயிறக்கூடாது” என்றார்.
ராஜ துரை சொன்னான். “அய்யா அப்படியெல்லாம் போக மாட்டோம். எங்க உழைப்பு எப்போதுமே உங்களுக்கு இருக்கும். நிச்சயம் எங்களுக்கு உதவுங்க” என்றான்.
உலக்கநாடாருக்கும் பொன்னு நாடாருக்கு சந்தோசம் வந்தது. “ஏதோ கொஞ்சம் கூடி வருற மாரி தெரியுதுடே”. சந்தோசமாக சொன்னார் உலக்கநாடார்.
அவர் சொன்னபடியே செங்கல் தொழில்சாலையை அந்த ஊரில் ஆரம்பித்தார்கள். சங்கரநாடார் ஆறாம்பண்ணை சாகிப் இடம் விலை பேசினார். அந்த பெரிய காட்டை அவரிடம் இருந்து நடராஜன் நாடார் பெயருக்கு விலைக்கு வாங்கினார்கள்.
அவ்விடத்தில் உள்ள குறுமணல், ஆற்று தண்ணீர், சவுடு என்றழைக்கப்படும் மணல் ஆகியவை செங்கல் தயாரிப்பதற்கு உதவியாக இருந்தது. இந்த செங்கல் சூளைக்கு செங்கல் அறுக்க தென்காசி அருகே சாம்பவர் வடகரை மற்றும் அதன் சுற்று பகுதியில் இருந்து செங்கல் அறுக்கும் தொழிலாளர்களை அழைத்து வந்தனர்.
இந்த செங்கல் சூளை வைக்கும் போது முதல் முதலாக அவர்களுக்கு சாலை வசதி பெரும் பிரச்சனையாக இருந்தது. எனவே சாலை வசதி செய்ய என்ன செய்ய என்று ஆலோசனை செய்தார்கள்.
அப்போது ராஜ துரை, பொன்னுநாடார், உலக்கநாடார் எல்லோரும் கிராம மக்களிடம் பேசி சாலை அமைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி ஊரில் இருந்து செங்கல் சூளை வைக்கும் சாலை போட இந்த ஊர் மக்கள் இடங்களை கொடுத்தனர். அதில் இருந்த பனை மரங்கள் வெட்டப்பட்டது. உரியவர்கள் தங்கள் வீடுகளை கட்ட அந்த பனை மரத்தினை வைத்துக்கொண்டார்கள்.
இதனால் இந்த பகுதியில் சங்க மடம் என்னும் கட்டிடத்தினை நடராஜன் முதலாளி கட்டி கொடுத்தார். இனிமே அவரை நாடார் என்று சொல்லக்கூடாது. முதலாளி என்று தான் கூப்பிடவேண்டும் அப்போது தான் பொருத்தமாக இருக்கும்.
அதன்பின் காடுகள் அழிக்கப்பட்டது மிக பிரமாண்டமான செங்கல்சூளை அமைக்கப்பட்டது. நிலக்கரியை செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் இறக்கி மாட்டு வண்டியில் ஊருக்கு கொண்டு வந்தார்கள்.
ஏற்கனவே ஊரில் தீ பிடித்த காரணத்தினால் பாதிபேர் பனை ஏற்றை இடையிலேயே விட்டு இருந்தனர். எனவே அனைவரும் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்தனர்.
நடராஜ-ன் முதலாளி அவர்களின் உழைப்பை பார்த்தார். அசந்தே போய் விட்டார். எனவே அவர் ஒரு முடிவு செய்தார். முதலில் எரிக்கப்பட்ட 100 வீட்டை கட்டிக்கொடுக்க ஆயத்தமானார்.
காலங்கரையில் உள்ள ஓடுகளையும் இவர்களுக்கே கொடுத்தார். அதன் விலைகளை வேலை செய்து கழித்துக்கொள்ளலாம் எனவும் திட்டம் வகுத்துகொடுத்தார்.
அனைவருக்கும் சந்தோசமாக இருந்தது.
“ஏலேய் ராஜதுரை என்னமோ நினைச்சமுல்ல உன்னை. ஆனா நீ பெரிய ஆளுலே. சாதிச்சிட்டே” என்றார் உலக்க நாடார்.
“தாத்தா நீரும் பொன்னுநாடரும் தான் எங்கூட உழைச்சிரு. பொன்னு தாத்தாவும் என் கூடவே அலைஞ்சிய. சங்கர நாடாரு கடைசியில நம்ம கூட வந்து சேர்ந்தாரு. நம்ம மக்களும் நல்லா உழைச்சாவ. நடரா-ஜ முதலியாளி பெரிய மனசு நமக்கு எல்லாமே நல்லபடியா நடந்து முடிஞ்சிக்கிட்டு இருக்கு. அதனால இந்த இடத்தில நாம நினைச்சப்படி வீடு கட்டுற வேலை வேகமாக நடக்கு” என சிரித்தான்.
அவனுடன் சேர்ந்து மற்றவர்களும் சிரித்தார்கள்.
ஆனால் அவன் சிரிப்பு ரொம்ம நாளைக்கு நீடிக்காது என்பது அப்போது அவனுக்கு தெரிய வில்லை.
***
அய்யர் கோபமாக கத்தினார். “நம்ம காலுக்குள்ள அந்த சாணப்பயலுவ வந்து விழுவானுவன்னு பாத்தா இப்போ அவனுவ காரை வீடு கட்டிக்கிட்டு இருக்கானுவ”.
“எல்லாம அந்த சிவகாசி நாடான் பாத்த பார்வை . அவன் தான் இப்படி செஞ்சிக்கிட்டு இருக்கான். அவன் செலவு பண்ணி அவ்வளவு பேருக்கும் வீடு கட்டி கொடுத்துக்கிட்டு இருக்கான்.”
“அவனை யாருல இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தா?”.
“இந்த ராஜ- துரை பையத்தான். வீடு கட்டி மட்டும் கொடுக்கலை சாமி. சங்கம் வைச்சி அவுக பேச சங்க மடமும் கட்டி கொடுத்திருக்காவளாம்”.
“ஏலேய் அன்னைக்கே இவன் கதையை முடிச்சி கொடுத்து இருந்தா இப்படி அலையுவானா?”
“சாமி. நீங்க லேசா சொல்றீரு. அவன் களரி வீரன். நம்ம கூட வந்தவன் குதி கால் எலும்பை உடைச்சி விட்டுட்டான். வேலை தெரிஞ்சவன்”.
“என்னலே சொல்லுத”
“அவன் களரி வீரன்”.
“களரி வீரன்னா”
“அவன் ஒருத்தனை ஓங்கி அடிச்சான்னா. அவன் 6 மாசம் கழிச்சி செத்தே போவான்”.
“ஓ. அப்போ உங்க கூட்டாளியை அடிச்சு எத்தனை மாசம் ஆச்சி”.
“6 மாசம் தான்”.
“அப்படின்னா அவன் ஏன் இன்னும் உயிரோட இருக்கான்”.
“அது வந்து பண்டாரவிளை வைத்தியரு காப்பாத்தி விட்டுட்டாரு”.
“இல்லை. அவன் 6 மாசத்தில செத்து போனும்”.
“என்ன சாமி சொல்லுதிய”.
“ஆமாம் அவன் 6 மாசத்தில செத்து போனும். அந்த கொலை பலி அந்த சாணாப்பய மேலே விழணும். போலிஸ் கேசுன்னு அவன் சோலியை முடிக்கணும்”.
பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் அசைவு ஏற்பட்டது.
“சாமி”. என சத்தம் கேட்டு திரும்பினார் அய்யர்.
அங்கே ராஜதுரையிடம் அடி வாங்கியவன் காலை கெந்தி நடந்த படியே அங்கே வந்தான்.
“சாமி செலவுக்கு பைசா வேணும்”.
அய்யர் கண்ணில் பளிச் என மின்னல் அடித்தது.
“தாரேன். நீ அந்த கொல்லை பக்கம் போ. இல்லை. இல்லை. நீ. நம்ம தோப்பு பக்கம் வா”. என தீர்க்கமான முடிவுடன் கூறினார்.
அய்யர் முகத்தில் இருந்த அந்த காழ்புணர்ச்சி தெரியாமல் அவன் தோப்பை நோக்கி பணம் தருவார் என நினைத்து நடந்தான்.
அய்யர் தீர்க்கமான முடிவோடு அவன் பின்னால் தோப்பை நோக்கி பின் தொடர்ந்தார்.
“சாமி நாங்க கூட வரவா?” என கேட்ட அடியாள்களை கண்ணாலேயே வேண்டாம் என தடுத்தார்.
அவர்களுக்கு முழு விவரம் தெரியாமல், நடக்க போவும் விபரிதம் தெரியாமல் அவர்அவர் வீட்டை நோக்கி நடந்தனர்.
தோப்பில் உள்ள கிணற்று அருகில் போய் அந்த அடியாள் நின்றான். அவனை நோக்கி அய்யர் வந்தார்.
“ஏலேய் ராஜ துரை அடிச்சானே. நீ ஏன் சாகலை” என்றார் அய்யார்.
“சாமி. என்று சொல்லும் போதே தனது கைவிரலை மடக்கி, அதைக்கொண்டு கழுத்தில் ஒரு சுண்டு சுண்டினார் அய்யர். மறு நிமிடம் தலைகீழாக கிணற்றில் விழுந்தான் அவன்.
மறுநிமிடம் அவன் உயிர் பிரிந்தது.
அதன் பின் வேலையாள் ஒருவனை கூப்பிட்டார் அய்யர்.
“ஏலேய் நேரா போலிஸ் ஸ்டேஷன் போ. அங்க ஏட்டையா இருப்பாரு. அவர்க்கிட்டே 6 மாசம் முன்னால ராஜ துரை அடிச்ச அடியில நம்ம காவலாளி இப்போ கிணத்துல செத்து கிடக்கான் என்று சொல்லு. இதைப்பத்தி அய்யர் சாட்சி சொல்லுவாருன்னு சொல்லி கூட்டிட்டுவா. ராஜ துரை எங்க இருந்தாலும் உடனே அவனை கைது பண்ணி நடுரோட்டில நாயை அடிச்சி இழுத்துகிட்டு வருத மாரி இழுத்துட்டு போகச்சொல்லு. அப்புறமா அவரை ஸ்டேசனுல வந்து அய்யர் கவனிப்பாருன்னு சொல்லு” என்றார்.
சரி எஜமான் என அந்த காவலாளி போலிஸ் ஸ்டேசன் நோக்கி சென்றான்.
இது எல்லாம் தெரியமால். ராஜதுரை அங்குள்ளவர்கள் வீட்டை கட்ட செங்கல் எடுத்துகொடுத்து உதவிக்கொண்டிருந்தான்.
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவார்)


