தாமிரபரணிக்கரையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மட்டும் நடைபெறும் வாலியைவதம் செய்யும் வரலாற்றை விளக்கும் விசித்திர திருவிழா. 36 பானையில் கொதிக்கும் சோற்றை அள்ளிதலையில் அடித்து ஆடும் நிகழ்ச்சி. பக்திபரவசத்தில் கண் இமைக்காமல் பார்த்த பக்தர்கள்.
தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயணகாலத்துச் சம்பவங்கள் பல நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாயமானின் உருவம் கொண்டு வந்த மாரீசன் மறைந்த இடம் மாயமான் குறிச்சி என்றும், சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது, ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்ட இடம் ஜடாயு துறை என்றும், சீதையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அனுமனின் தலைமையில் வானரப்படைகள் அணிவகுத்து நின்ற இடம் குரங்கணி என்றும் அழைக்கப்படுகின்றன.
இப்படிப் பல ராமாயண நிகழ்வுகள் நடைபெற்ற இந்த இடத்தில் தான் வாலி வதமும் நடைபெற்றதாக கருதப்படுகிறது.
தன் மனைவியை வாலியிடமிருந்து மீட்க நினைத்த சுக்ரீவன், அத்ரிமலையில் இருந்த ராமரைச் சந்தித்து உதவி கேட்கிறான். சுக்ரீவனுக்கு உதவ நினைத்தார் ராமர். ஆனால், வாலியுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டால், தன் வலிமையில் பாதி வாலிக்குச் சென்று விடும் என்பதால், வாலியை மறைந்திருந்து வதம் செய்கிறார் ராமர். கீழே வீழ்ந்த வாலி, மறைந்திருந்து என்னை வீழ்த்திவிட்டாயே கள்ள ராமா, கள்ள ஆண்டவனே என்று கதறிய படியே உயிர் நீத்தான்.

கிஷ்கிந்தை காண்டத்தில் வரும் இந்த வாலி வதம், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையில் நடந்ததாகச் கூறப்படுகிறது.
இதையட்டி, மணக்கரையில் ராமரின் நினைவாக கள்ளவாண்ட சுவாமி கோயிலை எழுப்பி வழிபட்டு வருகிறார்கள். கள்ள ஆண்டவர் என்ற பெயரே மருவி, கள்ளவாண்டவர் என்று ஆனதாம். இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தன்னுடைய அத்ரி மலை யாத்திரை நூலில் விவரித்துள்ளார். மேலும் அவர் எழுதிய வைணவ தலங்கள் நூலில் இதை பற்றி கூறியுள்ளார்.
மணக்கரையில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயிலிலிருந்து பிடி மண் எடுத்துச் சென்று கட்டப்பட்ட கள்ளவாண்டர் கோயில்கள் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிராமங்களான முத்தாலங்குறிச்சி, நடுவக்குறிச்சி, ஆறாம்பண்ணை, ஆதிச்சநல்லூர், கருங்குளம், அரசர்குளம், வல்லக்குளம், ஸ்ரீபராசங்குநல்லூர், ஸ்ரீராமன்குளம், கிளாக்குளம், பெருமனேரி, தீராத்திகுளம், எஸ்.என்.பட்டி, ஸ்ரீராமன்குளம் உள்பட சில கிராமங்களில் உள்ளது. இந்த ஊர்கள் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. வாலி வதம் திறந்த வெளியில் நடைபெற்றதால், இந்தக் கள்ளவாண்டன் கோயில்கள் அனைத்தும் திறந்த வெளியிலேயே அமைந்திருக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமம் தான் அரசர்குளம். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை நடைபெறும் திருவிழாதான் கோயிலின் முக்கிய நிகழ்ச்சி. திருவிழா அன்று காலை கருங்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்த தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஊரின் முக்கியவீதிகள் வழியாக மேளதாளம் முழங்க வருகை தந்தனர்.
தொடர்ந்து சுவாமி கள்ளவாண்டருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. சுவாமியாடி வேட்டைக்குச் சென்றார். இரவு 1 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேட்டைப்பானை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் 36 பிரமாண்ட பானையில் பனைஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி காய்ச்சுவார்கள். கஞ்சி காய்ச்சும் நேரத்திலேயே நையாண்டி மேளம், உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடலாக, கள்ளவாண்ட சுவாமி கதை சொல்லப்பட்டது. அந்தக் கதையைக் கேட்டு அருள் முற்றும் சுவாமியாடிகள், பானைக்கு அருகில் சென்று தென்னம்பாளையை பானைக்குள் விட்டு சுடு கஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டபடி அருளோடு ஆடுவார். இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் கண் இமைக்காமல் கண்டு பரவசமடைந்தனர்.
வாலியை மறைந்திருந்து வீழ்த்தியகாரணத்துக்காக, கொதிக்கும் கஞ்சியைத் தன் தலையில் கொட்டிக்கொண்டு, தனக்குத் தானே ராமர் தண்டனை கொடுத்துக் கொள்வதாக ஐதீகம். இதில் அனுமன் சாமியாடுபவர் இந்த வாலி வதத்துக்கு தான் தானே காரணம் என அவர் தலையை சுடு கஞ்சியை கொட்டும் போது தானும் உள்ளே புகுந்து அதை வாங்கி கொள்வார். அந்த காட்சியையும் கண்ணார காணலாம்.
இந்த கோயிலை பொறுத்தவரை திருடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் அடுக்கடுக்கான கஷ்டங்களைக் கொடுத்து, மூன்றே நாள்களில் திருடியவரை அடையாளம் காட்டுவதுடன், திருட்டுப்போன பொருளை உரியவரிடமே சேர்த்து விடுவாராம் கள்ளவாண்ட சுவாமி. எனவே, கள்ளவாண்ட சுவாமி கோயில் இருக்கும் ஊர்களில் திருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள்.
கள்ளவாண்ட சுவாமிக்கு வேட்டைப்பானை போடுவதாக வேண்டிக் கொண்டால், விவசாயத்தில் அதிகமகசூல், கல்வியில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

அரசர்குளம் கிராமத்தில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோவிலில் சித்திரைமாதம் கடைசி செவ்வாய்கிழமை நடைபெறும் திருவிழாதான் கோயிலின் முக்கிய நிகழ்ச்சி. திருவிழாவை முன்னிட்டு காலை கருங்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்த தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஊரின் முக்கியவீதிகள் வழியாக மேளதாளம் முழங்க வருகை தந்தனர்.
தொடர்ந்து சுவாமி கள்ளவாண்டருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. சுவாமியாடி வேட்டைக்குச் சென்றார். இரவு 1 மணிக்கு விழாவின் முக்கியநிகழ்ச்சியான வேட்டைப்பானை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் 36 பிரமாண்ட பானையில் பனை ஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி காய்ச்சுவார்கள். கஞ்சி காய்ச்சும் நேரத்திலேயே நையாண்டி மேளம், உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடலாக, கள்ளவாண்ட சுவாமி கதை சொல்லப்பட்டது. அந்தக் கதையைக் கேட்டு அருள் முற்றும் சுவாமியாடிகள், பானைக்கு அருகில் சென்று தென்னம்பாளையை பானைக்குள் விட்டு சுடு கஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டபடி அருளோடு ஆடுவார். அங்கு நின்று பார்த்த பக்தர்கள் கண் இமைக்காமல் இந்த காட்சியை கண்டு பரவசமடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அரசர்குளம் நாடார் சமுதாய மக்கள் செய்திருந்தனர்.


