தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி தூத்துக்குடியில் ரூ.22.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 2,965 பயனாளிகளுக்கு ரூ.22.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது: முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 என இரு தவணைகளாக மொத்தம் ரூ.4000 வழங்கினார்கள்.
நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தினை வழங்கி தாய்மார்களை காக்கும் முதலமைச்சராக உள்ளார். மேலும், கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள கடன்கள், விவசாய கடன், 5 பவுன் நகைக்கடன் ஆகியவற்றையும் தள்ளுபடி செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்காக தொடர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தொடர் திட்டம் என்றால் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 என்றால் அது தொடர்ந்து வழங்கப்படும். இதேபோல் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள் ஆகியோருக்கான உதவித்தொகையும் தொடாந்து வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டத்தை தந்திருக்கிறார்கள். மேலும், இல்லம்தேடி கல்வி, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் காலத்தில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆர். அவர்களின் காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. ஆனால் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் முட்டைகள் வழங்கப்பட்டு உண்மையான சத்துணவு திட்டமாக விளங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சர் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளார்கள். இன்றைக்கு அத்தனை சாலைகளையும் சரிசெய்யும் திட்டங்களையும் தந்திருக்கிறார்கள். மக்களுக்கு நன்மை தருகின்ற ஏராளமான திட்டங்களை தந்திருக்கின்றார்கள். அதேபோல தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் எந்த பகுதியாக இருந்தாலும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அத்தனை பேருக்கும் உதவி செய்யக்கூடியவர்களாக விளங்கி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டாண்டு சாதனை ஆட்சி முடிந்து இன்று மூன்றாவது ஆண்டினை தொடங்குகிறார்கள். நீண்ட ஆயுளோடு எந்த சக்தியாலும் அவரை தொட முடியாத நிலையை உருவாக்குகின்ற வகையில் மக்கள் சக்தியான நீங்கள் என்றென்றும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு மாவட்டத்தில் 1400 பேருக்கு உதவித்தொகை வழங்குவது தூத்துக்குடி மாவட்டத்தில்தான். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.68 இலட்சம் மதிப்பில் 468 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், ரூ.3.73 இலட்சம் மதிப்பில் 373 பேருக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், ரூ.8.58 இலட்சம் மதிப்பில் 572 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், ரூ.25000 மதிப்பில் 25 பேருக்கு கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், ரூ.8000 மதிப்பில் 8 பேருக்கு முதிர்கன்னி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 30 பேருக்கு ரூ.1,60,230 மதிப்பில் தேய்ப்பு பெட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 30 பேருக்கு ரூ.1,67,400 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், 12 பேருக்கு ரூ.78,624 மதிப்பில் தேய்ப்பு பெட்டி, ஒரு நபருக்கு ரூ.1 இலட்சம் ஆதிதிராவிட மகளிர் பால் கூட்டுறவு சங்கத்திற்கான உட்கட்டமைப்பு நிதி என மொத்தம் 2,965 பேருக்கு ரூ.22,38,254 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் முயற்சியால் நாளைய தினம் புன்னக்காயல் ஊராட்சியில் 60 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருந்த 800 பேருக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் பட்டா வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் , உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் வரப்பெற்ற மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் தங்கப்பதக்கம் வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
நமது மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 403 ஊராட்சிகள், 18 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள், 1 மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பொதுமக்களுக்கு ரூ.5000 வழங்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் குழந்தைகளின் வீடுகளுக்கு அருகே சென்று கல்வி கற்பிக்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் 5ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு சிறந்த மனிதாராக மாற்ற செயல்முறை பயிற்சி மூலம் கற்பிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாதிரி பள்ளி விரைவில் செயல்பட இருக்கிறது. இதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மாவட்டம் முழுவதும் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் 400 சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து விலையில்லாமல் உணவு, தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும் சென்னையில் இருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதனால் நீட் தேர்ச்சி பெற்று மருத்துவர்களாகவும், ஐஐடி பொறியாளர்களாகவும் அரசு பள்ளி மாணவர்கள் வர உள்ளார்கள்.
நமது மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்துகொண்டு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. புத்தக கண்காட்சி கடந்த வாரம் நமது மாவட்டத்தில் நடத்தப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் ஊரக சாலைகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரேசன் கடைகளில் இரும்புசத்து, பி12 சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியால் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மீன்பிடி கிராமத்திலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளது. கொரோன நிவாரணத் தொகை மற்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அரசின் திட்டங்களை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வசுமதிஅம்பாசங்கர், முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ராமஜெயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வி.பி.செல்வகுமார், செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


