இயக்குநர், நடிகர் மனோபாலா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் புகழஞ்சலி சூட்டியுள்ளனர்.
தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மனோபாலா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்: “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.”
நடிகர் கமல்ஹாசன்: “இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் உதவி இயக்குநராக அறிமுகமான மனோபாலா அப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘கல்லுக்குள் ஈரம்’ என ஏராளமான படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் பிரபலமாகின.
விவேக் உடன் ஒரு படத்தில் அவர் பேசிய ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ என்ற வசனம் டிரேட் மார்க் ஆனது. நடிப்பு தவிர்த்து ஏராளமான படங்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ், கார்த்திக் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.


