தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 921 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 107 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 310 பள்ளிகளில் பயிலும் 22 ஆயிரத்து 921 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் 230 மாற்றுத்திற னாளி மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வை முன்னிட்டு மாவட்டத்தில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தேர்வை கண்காணிக்க 107 முதன்மை கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 1200 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 214 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


