தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் கடந்த சில நாட்களாக திருச்செந்தூர் சாலை விரிவாக்கப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஊரின் வயல்வெளியில் அமைந்துள்ள திரடு பகுதியில் உள்ள மண்ணை ராட்சத இயந்திரங்களை கொண்டு அகற்றி சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை அறிந்த ஊர் மக்கள் பெண்கள், இளைஞர்கள் பெரியவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் திரண்டு வந்து, சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கிய பின் பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து சாலை விரிவாக்கப்பணிகளை மேற்கொண்ட ஊழியர்கள், அங்கிருந்து கிளம்பினர். இதனால் கொங்கராயகுறிச்சி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இளையபெருமாள் என்பவர் கூறுகையில்,
சாலை பணிகள் நடைபெற்று வருகிற மணல் திரட்டின், எங்களது நிலம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்து ஓராண்டுக்கும் மேலாகிறது. சாலை அமைப்பதற்காக காட்டப்படும் வேகத்தை, நிலத்திற்கான இழப்பீடு வழங்குவதிலும் காட்ட வேண்டும். நாங்கள் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்களுக்காக இழப்பீடு தொகையை விரைவாக வழங்கப்பாருங்கள். இதற்காக ஒவ்வொரு நாளும் வேலையை விட்டு விட்டு நாங்கள் அலைந்து உள்ளேம். எனவே எங்களுக்கான இழப்பீடு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.


