ராசுக்குட்டி சிரித்துக்கொண்டே நின்றான்.
ஆச்சியிடம் எட்டப்பன் கதைகேட்கணும். “பேக்லேண்ட் மாதிரி இதுவும் வித்தியாசமாத்தான் இருக்கும்” என நினைத்தான்.
“காட்டி கொடுத்தவன் எட்டப்பன்தான். இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னால த.பி. சொக்கலால் ராம்செட் பீடிக்காரங்கள் கிராமத்துக்கு சினிமா போட வந்தாவ. அப்போத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைபடம் போட்டாவ. அதுல தானே எட்டப்பனை பாத்தோம். அவுகதான கட்டபொம்மனை காட்டி கொடுத்தவ. எவ்வளவு மோசமானவிய. இங்கீலிஸ் கார துரைக கூட கூட்டு வைச்சவீய” என எட்டப்பன் கதையை கேட்க ஆர்வமானான் ராசுக்குட்டி.
இந்த இடத்தில நாம ஒன்னை பேசியே தீரணும்.
நெல்லை மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் வரும் முன்பு கிராமத்து மக்களுக்கு பாக்கூத்து தான் சினிமாவாக இருந்தது. திருவிழா வந்து விட்டால் வெளியூரில் இருந்து ஸ்பீக்கர் செட் கொண்டுவருவார்கள். இந்த செட் கொண்டுவரும் ஊழியர்களுக்கு ஊரில் மிக அதிகமான மதிப்பு இருக்கும். பஸ் வசதி இல்லாத கால கட்டத்தில் வயல் வழியாக அவர்கள் இரண்டு குழாய், ஆம்பிளிபெயர், ரிக்கார்ட் பிளேயர், மற்றும் ரிக்கார்டு ஆகியவை கொண்டுவருவார்கள். இதை தூக்கி கொண்டு வர நான் நீ.. என்று சிறுவர்கள் ஒடி வருவார்கள். இதில் போட்டி வேறு இருக்கும். பலர் ஓசிக்கு மாங்கு மாங்குன்னு பெட்டியை தூக்கமுடியாம தூக்கிகிட்டு வருவார்கள்.
ஆரம்ப காலத்தில் கூம்பு வடிவ குழாயும், கிராமபோன் ரிக்கார்டும் தான் இருக்கும். ஒரு பாட்டுக்கு ஒரு முறை அந்த கிராம போனை சுற்று சுற்றி சார்ஜ் ஏற்ற வேண்டும்.
அதன் பிறகு வேறு முறை வந்தது. அதில் ஒரு பாட்டு முடிந்தவுடன் ஊசி மாற்ற வேண்டும். அந்த ஊசியை பொறுக்க ஒரு கூட்டம் இருக்கும். திருவிழா காலங்களில் ரேடியோ செட் கொண்டு வருபவர்கள் கதாநாயகர்களாக தெரிவார்கள்.
“பாரு பாரு பாயாஸ்கோப் படத்தை பாரு..” என்ற பாடல் எல்லாம் ஒரு பெரிய தோசை கல் ரிக்கார்டில் ஓடும். அருகில் இருந்து பார்பதே ஒரு ஆனந்தம். அதே போல் தோசைகல் ரிக்கார்டு சிறிய ரிக்கார்டு ஆனது. அதில் ஒரு பக்கம் ஒரு பாடல் இருக்கும். அந்த சமயத்தில் “ஆனிப்பொன் தேர்கொண்டு மாணிக்க சிலையென்று வந்தாய் நின்றாய் இங்கே” என்ற பாடல் கலக்கல் பாடலாக ஒலித்து. அந்தப் பாடலை ரிக்கார்டை மாற்றி போட்டு மறு புறம் ஒலிபரப்புவார்கள்.
அந்த ரிக்காடு கம்பெனி பெயர் கொலம்பியா.. அதில் ஒரு நாய் ஒன்று கிராம போன் முன்பே பார்த்துக்கொண்டு இருப்பது போல இருக்கும்.
அதன்பிறகு காலங்கள் மாறியது. இளையராஜா காலத்தில் ஒரு பக்கம் இரண்டு பாட்டு என்ற வகையில் “அன்னக்கிளி என்னை தேடுது” என்ற பாடல் வந்தது. இந்த சமயமும் ரிக்கார்டு சுமக்க ஒரு கூட்டம் காத்து கிடக்கம்.
அவர் காலத்திலே “ஓரம்போ.. ஒரம்போ .. ருக்குமணி வண்டி வருது” என்று பாடல் வந்தது. மீண்டும் தோசைக்கல் ரிக்கார்டு, ஆனால் ஒரு பக்கத்தில் மூன்று பாடல் இருக்கும். மேலும் படத்தின் கதை வசனத்தினை சுருக்கி ரிக்கார்டில் போட்டு இருப்பார்கள். இவையெல்லாம் அந்த காலத்தில் உள்ள எச்சங்கள்.
காலங்கள் மாறியது. டேப்ரிக்கார்டர் என்ற வகையில் ஒரு பக்கத்தில் 12 பாடல்கள் வரும் படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதவும் மாறி சிடி சிஸ்டம், கம்யூட்டர் சிஸ்டம் வந்து விட்டது. இதன் மூலம் 100ல் இருந்து பல ஆயிரம் பாடல்களை ஒரே நேரத்தில் சேகரித்து வைத்து ஒலிபரப்பு வாய்ப்பு வந்த விட்டது.
இதே போல் ஊரில் திரைகட்டி சினிமா போடும் திருவிழா.
தற்போது போல வீட்டுக்கு வீடு டிவி இருப்பதுபோல.. அன்று தென்பாண்டி சீமையில் பொழுதுபோக்கு அம்சம் கிடையாது. எனவே சினிமா பார்க்கவேண்டும் என்றால் டவுணுக்குதான் வரவேண்டும். ஆடி தவசு காட்சி சங்கரன் கோயிலில் திருவிழா காணவும், வைகாசி விசாகம் திருச்செந்தூரில் திருவிழா காண வரும் போதுதான் சினிமா பார்ப்பார்கள்.
இல்லையென்றால் தீபாவளி, பொங்கலுக்கு தான் படம் பார்க்க வரவேண்டும். டூரிங் டாக்கீஸ் கூட அன்று தார்பாய் போட்டு மூடி பகல் காட்சியை ஓட்டுவார்கள். கூட்டம் அதிகமாக காத்து கிடக்கும். அந்த சமயத்தில் கட்டுச் சோறு கட்டி வருபவர்களும் உண்டு. அதுமட்டுமல்லாமல் புதிதாக திருமணம் ஆனவர்களை கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டு, சினிமாவுக்குதான் கூட்டிக்கொண்டு வருவார்கள். அந்த அளவுக்கு சினிமா மிகவும் பிரபலமாக இருந்தது.
இந்த நேரத்தில் முக்கூடல் தா.பி. சொக்கலால் ராம்சேட் அதிபர் அரிராம் சேட் புண்ணியத்தில் கிராமம் கிராமாக கொண்டு சினிமா போடுவார்கள். இதற்காக கிராமத்தில் உள்ள முக்கிய இடம் துப்புரவு செய்யப்படும். மிக அதிகமான மக்கள் இருக்க வேண்டும் என்பதால் மணல் அடித்து போடுவார்கள்.
கிராமத்துக்குள் பீடி ஆபிஸ் வேன் வருகிறது என்றார் சிறுவர்களுக்கு எல்லாம் ஒரே சந்தோஷம். ஒடிப்போய் வண்டிக்கு மேலே ஏறுவார்கள்.
டிரைவர், ஆபரேட்டர் ஆகியோருக்கு அன்று சிக்கன் மட்டன் என்று ஊர் முக்கிய பிரமுகர் வீட்டில் வைத்து விருந்து நடக்கும். ஊர் முக்கியஸ்தர் வீட்டில் நடக்கும் அந்த விருந்தை மற்றவர் பார்க்க முடியாது. அவர்களுக்கு விருந்தோம்பல் மிக விசேகமாக இருக்கும். விருந்தை முடித்து விட்டு அவர்கள் எப்போது வருவார்கள் என்று அனைவரும் வெளியே காத்து கிடப்பார்கள்.
அதன்பின் திரை கட்டுவார்கள். படம் போடுவார்கள். இடையில் இழுக்க இழுக்க இன்பம் தருவது தா.பி. சொக்கலால் ராம்சேட் பீடி என்று ஒரு விளம்பரம் போடுவார்கள். அதற்கு என்ன விசில். என்ன கைதட்டு.
அந்த அளவுக்கு சினிமா கிராமத்தில் எட்டாக்கனியாக இருந்தது. அதன்பிறகு 1990 வருடங்களில் கிராமங்களில் சினிமா திரைக்கட்டி போடுவது சகஜமாகி விட்டது. 16 எம்.எம். திரைப்படம் கிராமங்கள் தோறும் ஒடியது. எனவே அதற்காக அதிகமான வாடகை மிஷின் வர ஆரம்பித்தது.
அதன் பிறகு கிராமத்துக்கு கிராமம் 16 எம்.எம் திரைப்படம் மிஷின் வைத்து வாடகைக்கு விட ஆரம்பித்தார்கள். கிராமத்தில் அவர்கள் படம் போடப் போகிறார்கள் என்றால் அவரை கூப்பிட பல ஆள்கள் வருவார்கள். மிஷினை கொண்டு வைத்து தேங்காய் பழம் உடைத்து திரைக்கு பூஜை செய்து, அதற்கு பிறகு படத்தினை ஒட விடுவார்கள். தியேட்டரில் கூட இடையில் இடைவேளை உண்டு. ஆனால் விடிய விடிய மூன்று படங்களை ஒரே மிஷினில் நிறுத்தாமல் ஓட்டுவார் ஆபரேட்டர் . இதில் அவரிடம் சைடு ரீல் கொண்டு வாருங்கள் என்று அன்பு கட்டளை ஈடுவார்கள் அவரும்.. சில படத்தில் இருந்து சில பாடல்களை கொண்டு வந்து ஒளிபரப்புவார். இந்த மாதிரி காலத்தில் தான் வீரபாண்டி கட்டபொம்மன் சினிமா திரையிடப்பட்டது.
அப்போதுதான் அந்த சினிமாவை ராசுக்குட்டி பார்த்தான். அதில் தான் எட்டப்பன் வருவார். “சே. எவ்வளவு மோசமான வில்லன்”. அவனை பார்த்தவுடன் எரிச்சலாய் வரும்.
அந்த எட்டப்பனை பத்தி ஆச்சி என்ன கதைச்சொல்லப்போறோ கேப்பமே. என ஆச்சியை எதிர் நோக்கி காத்திருந்தான் ராசுககுட்டி.
ராத்திரி வந்தது. மொட்டை மாடிக்கு சென்றார்கள்.
ஆச்சி மடியில தலை வைத்து படித்திருந்தான் ராசுக்குட்டி.
இன்னைக்கு கதை கேட்க ஆள்கள் கொஞ்சம் அதிகம். மனசா மயினி, கோசலை பாட்டி, மனோரஞ்சிதம் அத்தை, முத்துகிளி அக்கா எல்லோரும் வந்திருந்தார்கள்.
ஆச்சி சிரித்தப்படி ஆரம்பித்தாள்.
“எவமுலே சொன்னான். காட்டி கொடுத்தவன் எட்டப்பனு. அந்த செத்தபயலை, நாரபயலை உச்சியில அடிக்கணும். ஆமா” என்றார் ஆச்சி.
“ஏன் ஆச்சி. எட்டப்பன் நல்லவியளா?”
“எட்டயபுரத்தில பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள், ஒண்ணு, ரெண்டு ன்னு எண்ணும் போது ஏழு வரை எண்ணிட்டு அதுக்கு அப்புறம் எட்டுன்னு சொல்றதுக்கு பதிலாக மகாராஜான்னு சொல்லி, அதுக்கு பொறவு தான் ஒன்பது, பத்துன்னு எண்ணுவாவ தெரியுமா?. அந்த அவளவுககு அவுக மேலே மரிவாதை.”
எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“88 ன்னு சொல்லுததுக்கு பதிலா எண்பது மகாராஜா, 98 என்பதற்கு பதிலா தெண்ணூறு மகாராஜான்னு தான் சொல்லுவாவ. எட்டுன்னு சொல்லமாட்டாவ”. ஆச்சி பொக்கை வாயை காட்டி சிரித்தாள்.
“அந்த ராஜா அவ்வளவு கொடுமையானவரா அவ்வளவு பயமா?” ராசுக்குட்டி அப்பாவியாக கேட்டான்.
ஆனால் ஆச்சி விட வில்லை.
“அது மட்டுமா? நெல் அளப்பவைய கூட ஏழுன்னு எண்ணிப் பொறவு எட்டு வரும் போது மகாராஜா ன்னு சொல்லி ஒன்பது, பத்து ன்னு அளந்துட்டு போவாவ தெரியுமா?”
ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றான் ராசுக்குட்டி.
எல்லோருக்கும் ஆச்சிரியம் அவ்வளவு பேரும் ஆச்சியை ஏறிட்டுப்பார்த்தனர். “அப்படியரு மருவாதி மகராஜா மேலே. பள்ளிக்கூடத்து பிள்ளையை முதல் பெரியவிய வரை எட்டுன்னு வார்த்தையை தங்கள் வாயில வராம பார்த்துககுவா?”
“அவ்வளவு மருவாதியா? எட்டப்பனுக்கு”. முத்துகிளி கேட்டாள்.
“ஆமாம். எட்டப்பன் ங்கிற பேரில எட்டு இருப்பதால் மகாராஜாவின் பெயரைச் சொல்லக்கூடாதுன்னு அந்த ஊர் மக்க இப்படி பண்ணுனாவ. அது மட்டுமா? பெத்தப்பன் போனால் தான் என்ன? எட்டப்பன் இருக்கும் போதுன்னு மக்க அசைக்க முடியாத நம்பிக்கை வைச்சிருந்தாவ.”
“பொறவு எதுக்கு ஆச்சி எல்லோரும் எட்டப்பன்னு சொன்னா காட்டி கொடுத்தவனுன்னு சொல்லுதாவ?”. மனோரஞ்சிதம் கேள்வி இது.
“எட்டப்பன் பெர் வர்றதுக்கு ஒரு கதையே இருக்கு”. என ஆச்சி கதை சொல்ல ஆரம் பித்தாள். “ஒருகாலத்துல எட்டயபுரம் ராஜாவோட முன்னோடியும், அவுக முதல்வருமான அப்பா நாயக்கருல இருந்து குமாரமுத்து நாயக்கர் வரைக்கு பத்து பேரு ஆந்திராவிலுள்ள சந்திரகிரியில் ஆட்சி புரிஞ்சாவ. ஏறக்குறைய இவுக எல்லோருமே ஒரே வம்சத்தைச் சேர்ந்தவுக. சந்திரகிரியை கடைசியில ஆட்சி பண்ணுணவுக குமாரமுத்து நாயக்கரோட மவன் நல்லம நாயக்கர். இவரு தான் எட்டப்பன்னு பேரு வாங்கினவரு. ஒருசமயம் தனது படைவீரர்களை கூட்டிக்கிட்டு விஜயநகரமுன்னு சொல்லுத ராயவேலூர் சமஸ்தானத்துக்குச் போனாவ நல்லம நாயக்கர்.
அங்குள்ள மன்னர் சம்புவைச் சந்திக்கணும். ஆனால் சம்புவை சந்திப்பது சாதாரணமான காரியம் அல்ல. பல காவல்களைக் கடக்கணும். கோட்டிலிங்கக் கோவில் தெற்கு வாசலில் சோமன்னு ஒரு மாவீரன் இருப்பான். அவன் கூட சகோதரர்கள் 8 மல்லர்களுடன் தன் காலில் தங்கச் சங்கிலி கட்டிக் கொண்டு காவல் புரிஞ்சு வந்தாவ. அவுக தன்னை யாரும் வெல்ல முடியாத அளவுக்குப் பலசாலியாக இருந்தாவா. நல்லம நாயக்கர் சோமனை எதிர்த்து சண்டை போட்டு ஜெயிச்சாத்தான் போவ முடியும். அதனால சோமன் கிட்ட சண்டை போட்டாரு. சண்டையினா சண்டை அப்படியரு சண்டை. சும்மா ரெண்டு பேரும் கட்டிட்டு உருண்டுட்டாவ. கடைசியில சோமன் ரொம்ப அடிப்பட்டு போனாவ. உயிர் போவுற நிலைக்கு அடிச்சி தள்ளிப்புட்டவ எல்லப்ப நாயக்கரு. ஒரு கட்டத்திலே சோமன் செத்து போவும் நிலைக்கு போயிட்டவா. உடனே போரை நிறுத்துனாரு சோமன். நல்லம நாயக்கரை கூப்பிட்டு, “ யய்யா என்னை வென்ற நீ. பெரிய வீரன் தான். எனது உயிர் போய் விடும். இதுவரை எனது தம்பிகள் 8 பேரையும் நான் தான் காப்பாற்றி வந்தேன். அவர்களுக்கு வெளிஉலகம் தெரியாது. எனவே, அவர்கள் எல்லோரையும் இனி நீதான் காப்பாற்ற வேண்டும்” அப்படின்னு சொல்லி கதறிட்டாரு. சண்டையில் ஜெயிச்சாலும் கூட சோமன் சொன்னது நாயக்கருக்கு நெஞ்சம் வலிச்சுது.
“சோமனே கவலைப்படாதே.. உன் தம்பி எட்டு பேரையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். “இன்றையில் இருந்து நீ எனது எட்டுத் தம்பிகளுக்கும் அப்பன்” என்று சொல்லிவிட்டு அப்படியே சாஞ்சிட்டாரு. சோமன் உயிர் போயிட்டு. “எட்டு பேருக்கு அப்பன்” என்று பெயர் பெற்ற நாயக்கர்தான் எட்டப்பன்னு அழைககப்பட்டாவ. அதன்பிறகு வந்த எல்லா ராஜாக்களையும் “எட்டப்பன்” ன்னு கூப்பிடுதாவ நம்ம மக்க. அதுகப்புறம் மன்னர் ஜம்புவைச் சந்திச்சாவ நல்லப்ப நாயக்கர்.
அவரும் இவருக்கு நிறைய இடங்களை வழங்கி இளசைன்னு ஒரு ஊருக்கு அனுப்பி வைச்சு ஆட்சி செய்ய சொன்னாவ. அந்த இளசைதான் இன்னைக்கும் ராஜா பேருல எட்டயபுரமுன்னு கூப்பிடாவது. ஆண்ட மவாராஜாக்களை எட்டப்பன்னு சொல்லி அழைக்க ஆரம்பிச்சிட்டாவ. தமிழ்நாட்டுல 500 கிராமத்தை ஆண்ட பரம்பரை தான் இந்த எட்டப்ப ராஜா”. ஆச்சி பெரும்மூச்சியுடன் சொல்லி முடித்தாள்.
“அடி ஆத்தி இம்புட்டு கதை இருககா. நானும் என்னவோன்னு சினிமாவை பாத்து அவரை தப்பால நினைச்சி புட்டேன்”. ராசுக்குட்டி பெருமூச்சி விட்டான்.
“எட்டயபுரத்தை நினைக்கும் போது, மகாகவி பாரதி, கடிகை முத்துப் புலவர், முத்துசாமித் தீட்சிதர், சுவாமி சிவானந்தா, உமறுப்புலவர், நாவலர் சோமசுந்தர பாரதி போன்ற பிரபலமானவிய நமக்கு நினைவுக்கு வருவாவ”. ஆச்சி பெரிய ஞானி போல அமர்ந்து கதை சொன்னாள்.
நிலவு வெளிச்சத்தில் அவளின் தங்க பாம்படம் பளிச்சென மின்னியது. கம்பீரமான அவளது கதையை கேட்டு மெய்மறந்து போய் நின்றான் ராசுககுட்டி.
உண்மைதான் எட்டயபுரம் வரலாறு மிகவும் பிரமாண்டமானது. இன்றைக்கும் நாம் எட்டயபுரம் போனால் ராஜாவோட பிரமாண்டமான அரண்மனையை பார்’கலாம். அதுமட்டுமா? சிற்றாற்றில் கங்கைகொண்டானில் கட்டப்பட்ட பாலம், திருவைகுண்டம் பாலம் எல்லாம் எட்டயபுரம் ராஜா நிதி உதவியில கட்டப்பட்டது. இவையெல்லாம் தெரியாமல் தற்போது எட்டப்பன் என்றால் காட்டிக் கொடுப்பவன் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் சினிமா படம். இந்தப் படத்தில் எட்டப்ப மகாராஜாவை வில்லனாக, காட்டிக் கொடுப்பவராகச் சித்தரித்திருப்பார்கள். ஆனால் எட்டயபுரம் வரலாறு விசித்திரமானது. உறவுகள் பலவற்றைக் கொண்டது. சுதந்திரப் போராட்டமும் உண்டு. கும்பினியின் விசுவாசமும் உண்டு. தமிழகத்திலேயே மிகப்பெரிய ஜமீன் எட்டயபுரம் ஜமீன்தான். சுமார் 500 கிராமங்களை உள்ளடக்கியது. அது மட்டுமா?. தூத்துக்குடிக்கு ரயில் வர முக்கிய காரணம் எட்டயபுரம் ஜமீன்தான். இதுக்காக எட்வர்ட் மன்னன் டெல்லி தர்பாருக்கு எட்டாயபுரம் பிதா எட்டப்ப மகராஜாவை கூட்டிட்டு போய் கௌரவ படுத்தியிருக்கிறார்கள்.
ஆச்சி சிரித்தப்படி பேசினாள்.
“அதனாலத்தான் எட்டுன்னு வார்த்தையை ஊர்காரவிய சொல்லவே யோசிக்காவ. இன்னொரு விஜயம் இந்திய விடுதலை போராட்டத்துக்கு எதிரின்னு இவுகளை சொல்லுதாவளே. எட்டயபுரம் ராஜ காசி விஸ்வநாதபாண்டியன் தங்களோட சினிமா தியேட்டருக்கு பாரத மாதா டக்கீஸ்ன்னு பெயர் வைச்சிருக்காவ. அதோ மட்டுமில்லாம சினிமா ஆரம்பிககும் போது சுதந்திரம் அடையும் முன்னே தேசியகீதம் போட்டுருக்காவ. அது மட்டுமா? காமராஜர் அய்யா முதலமைச்சரா இருக்கும் போது முதல் முதலில மதிய உணவு திட்டத்தை மகாராஜாவோட பள்ளிகூடத்திலத்தான் ஆரம்பிச்சி இருக்காவ.” என்று ஆச்சி சொன்னார்.
யோசித்தான் ராசுக்குட்டி. “அப்பாடி. எவ்வளவு பெரிய மனுசன் இந்த எட்டப்ப மகராஜா. இவரை போய் காட்டி கொடுத்தாருன்னு சொல்லுதாவளே. வரலாறு எப்படியெல்லாம் மாறி யிருக்கு” என்று நினைத்தான். எட்டப்பராஜா நினைவு மறைவதற்குள் ஆச்சி சிரித்தப்படியே பேச ஆரம்பித்தாள்.
“ஒளிய தெரியாதவன், குலுக்கைகுள்ளே போய் ஒளிஞ்சான்னு ஒரு பல மொழி சொல்லுவாவளே ஏன் தெரியுமா?”
“தெரியலையே” ராசுக்குட்டி ஆர்வத்துடன் ஆச்சி மடியில் இருந்து எழுந்து கையை விரித்தப்படி அடுத்த கதையை ஆச்சியிடம் கேட்க தயாரானான்.
நாமும்தான்.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)


