தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையில் இருந்து ஆறாம்பண்ணை செல்லும் சாலையில் இருபுறமும் வயல்வெளிகள் உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை அந்த வழியாக வந்தவர்கள் வயல்காட்டில் ஒரு பெரிய லாரி வாழைத்தார் லோடுடன் கவிழ்ந்து விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின்னர் தான் இந்த லாரி படப்பிடிப்புக்காக தற்காலிகமாக லாரியை கவிழ்த்து வைத்தது தெரிய வந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படம் மூலம் பிரபலமானவர். இவர் அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்னும் படத்தை முடித்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தினை தற்போது எடுத்து வருகிறார். இந்த படம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொங்கராயகுறிச்சியில் பூஜையுடன் தொடங்கியது. இந்த புதிய படத்தினை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திரைப்படத்திற்கு வாழை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் இந்த படத்திற்காக வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது போல் இந்த படத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அந்த வழியாக செல்பவர்கள் பார்த்து பதற்றத்துடனே செல்கின்றனர்.


