தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கில் ஆஜராகுவதற்காக தனது மனைவி, சகோதரி உள்ளிட்ட தமது குடும்பத்தினருடன் இன்று ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
இந்நேரத்தில், குரும்பூர் பகுதியில் பேட்டரி திருடிய வழக்கில் ஆஜராகுவதற்காக நல்லூரை சேர்ந்த கருப்பசாமி மகன் நல்லதுரை என்ற 25 வயது வாலிபரும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
இந்நிலையில், நல்லதுரை நீதிமன்றத்தின் வெளிப்பகுதியில் நின்றபோது அந்த வழியாக வந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு பொது இடத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர், நல்லதுரையை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த நல்லதுரை, விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுத்த நிலையில் நீதிமன்ற வளாகப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் நல்லதுரையை பிடித்து வைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசாரிடம் பொதுமக்கள் நல்லதுரையை ஒப்படைத்தனர். இதுகுறித்து சப்&இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்கிளின் வழக்குப்பதிவு செய்து நல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள நல்லதுரை மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தின் வெளி வளாகப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.


