திருச்செந்தூருக்கும் எனக்குமான பந்தத்தினை என் வாழ்நாள் முழுவதும் யாராலும் பிரித்து விட முடியாது. நான் நான்கு வயதாக இருக்கும்போது என் தந்தையார் காலமாகிவிட என்னைச் சேர்த்து ஏழு குழந்தைகளை எப்படி வளர்த்து படிக்க வைத்து பெரிய ஆளாககொண்டு வருவது எனும் கவலையில் என்தாய் இருந்த காலகட்டம் அது. அதாவது 1970 தாண்டிய காலகட்டத்தில். அந்த நேரத்தில் அவரது மூன்றாவது அண்ணன் சேரன்மகாதேவியை சேர்ந்த எஸ்.கே.ஆர் என்று அழைக்கப்பட்ட எஸ்.கே.ராமச்சந்திரத் தேவர் சேரன்மகாதேவி பேரூராட்சி மன்ற தலைவர். மேலும் திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் ஆகவும் நியமிக்கப்பட்டார் இதனை வாய்ப்பாக கொண்டு என் மூத்த சகோதரர் சங்கர குற்றாலத்தை ஏழாவது வகுப்பிலும் அதற்கு அடுத்த சகோதரர் கந்தசாமி ஐந்தாவது வகுப்பிலும் என்னை ஆறாவது வகுப்பிலும் விடுதியில் அதாவது செந்தில் முருகன் சிறுவர் இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்தார்கள். அந்த வளரிளம் பருவத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களும் பிரமிப்புகளும் புதிய அறிவு சார்ந்த விஷயங்களுமே இன்றைய எனது நிலைக்கு அடிப்படை என கருதுகிறேன். பந்தல் மண்டபத்திற்குள் நுழையும் போது ஒரு வியப்பு… சன்னதி தெருவுக்குள் நீண்ட தூரம் நடந்து செல்லும் போது ஒரு வியப்பு… தூண்டிகை விநாயகர் கோவில் கடந்து ஒரு ஏற்றம் ஏறிப் பளிச்சென பரந்துவிரிந்து கண்ணில் தெரியும் கடல்பரப்பு ஒரு மாபெரும் வியப்பு! அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் கல்விப் பணி. ஒரு சமயம் பள்ளியின் முன்னால் கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவில் கைவைத்து தள்ளினால் ஆடுகிறது என சொல்ல நாங்களும் போய் ஆட்டிப் பார்க்க நிஜமாகவே ஆடியது. கோவில் அல்ல… அதற்கு முன்னால் கட்டப்பட்டிருந்த பந்தல். திருச்செந்தூர் பள்ளியில் நான் படித்த போது திரு முத்துசாமி அவர்கள் தான் தலைமை ஆசிரியர். ஒவ்வொரு நாளும் பிரார்த்தனைக் கூட்டத்தில் வரிசையில் நிற்கும் போது மயங்கி மயங்கி விழுவதில் நான் கெட்டிக்காரன். உடனே ஆங்கில ஆசிரியர் ராமகிருஷ்ணன் சார் ‘பைவ் இட்லீஸ் அண்ட் பாக்கெட் ஆப் சாம்பார்… அப்புறம் என்னடா மயக்கம்?’ எனக் கிண்டல் அடிப்பார். கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். வரலாறு புவியியல் ஆசிரியர் பெயர் நினைவில்லை ‘தாத்தே மாக்கா திராவிட மொழிகள் – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்’ என ஒரு ராகம் போட்டு சொல்லிக் கொடுத்தது இன்றும் மனதில். யாராவது ஒரு பையன் அதைச் சொல்லிக் கொண்டே மைதானத்தில் ஓடுவானானால் அவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான் என்று அர்த்தம். எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஜேம்ஸ் சார் கணிதம் எடுத்தார்கள். கரும்பலகையில் இந்த ஓரத்தில் இருந்து அந்த ஓரத்திற்கு துள்ளுவதும் அந்த ஓரத்தில் இருந்து இந்த ஓரத்திற்கு துள்ளி வந்து பாடம் நடத்துவதுமாக அவர் நடத்திய அழகில் தான் கணம் எளிதாக மனதில் பதிந்தது. என்னவோ தெரியவில்லை நான் இப்போது பணியாற்றும் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் கூட அடிக்கடிச் சொல்வதுண்டு ‘எனக்கு பத்தாம் வகுப்பு கணிதம் எடுத்த ஆசிரியர் யார் என்று நினைவே இல்லையடா… அப்படித்தான் என்னையும் நீங்கள் மறந்து விடுவீர்களா?’ எனக் கேட்பதுண்டு. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுவரை நானும் யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் மட்டும் நினைவுக்கு வரவே மாட்டேன் என்கிறார். அதற்குப் பின்னரான 12 ஆம் வகுப்பு டேனியல் சார் நினைவுக்கு வருகிறார். கல்லூரியில் கே.எஸ்.நாராயணன் சார், வி.சுந்தரம் சார், மருதை சார், கௌரிநாதன் சார் என எல்லோரும் நினைவில் இருக்கிறார்கள். நான் வேலையில் சேர்ந்த பிறகு படிப்புறுதிச் சான்றிதழுக்காக சுமார் 30 வருடம் கழித்துச் சென்றாலும் நான் கையெழுத்திட்டு பத்தாம் வகுப்பு சான்றிதழ் பெற்ற ஒப்புகைஏடு தொலையாமல் இருந்தது ஒரு ஆச்சரியம். அத்தனைக்கும் பள்ளி மாட்டுத்தாவணிக்கு இடம் பெயர்ந்திருந்தது. சரி அதை விடுங்கள் விடுதிக்கு வருகிறேன்… மதிப்பிற்குரிய காத்த பெருமாள் பிள்ளை அவர்கள் எங்கள் விடுதியின் காப்பாளர். மிகச் சிறந்த பக்திமான் கண்டிப்பு உண்டென்றாலும் விடுதி குழந்தைகள் மீது அளவற்ற பாசம் கொண்டிருப்பவர். அவரது மனைவியை நாங்கள் எப்போதும் அக்கா அக்கா என்று தான் சொல்லுவோம். இன்றும் சுசீந்திரத்தில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு கூட வருகை தந்து மனதார வாழ்த்தி அன்போடு அனைத்து ஆனந்த கண்ணீர் வரச் செய்தது பெரும் பாக்கியம். விடுதியில் நேர மேலாண்மை ரொம்ப முக்கியம். குளித்தல் – பூஜை – சாப்பாடு – பள்ளி செல்லுதல் – மாலை நேர தேவார வகுப்பு – இரவு நேர வாசிப்பு எல்லாம் மிகுந்த கண்காணிப்போடு நடைபெறும். சில நேரம் மாலை வேலைகளில் பூஜை நேரம் நீண்டு நீண்டு நீண்டு தூக்கம் கண்களில் சொக்கி விடும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் திருப்புகழ் தேவாரம் பாடிக்கொண்டே கடற்கரை கோவிலுக்கு சென்று வர வேண்டும். சுண்டல் உண்டு. புளியோதரை உண்டு. அப்போதெல்லாம் கோவிலுக்குள் வெளி பிரகாரம் உள் பிரகாரம் தடையின்றி சுற்றி வரலாம். கழுத்தில் ஒரு உத்திராட்ச மாலை எப்போதும் அணிந்திருப்பதால் அதுதான் நாங்கள் தடையின்றி செல்வதற்கான அனுமதிச்சீட்டு. முருகப்பெருமானிடம் நேரடியாக சென்று வணக்கம் செல்லும் உரிமை எங்களுக்கு உண்டு. அப்புறம் அந்த புளியோதரையின் சுவை இன்று வரை நான் மீளப்பெறாதது. திருவிழாக்கள் வந்து விட்டால் போதும் எங்கள் வார்டன் சாருக்கு கலை நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரப் பணியினை கொடுத்து விடுவார்கள். நான் கொஞ்சம் நல்லா எழுதுவதால் அவர் என்னிடம் அதனை ஒப்படைத்து விடுவார். மாலை பள்ளி விட்டு வந்ததும் வாரியார் சுவாமிகள் பேசுகிறார்… சீர்காழி கோவிந்தராஜன் இன்னிசை நடக்கவிருக்கிறது… சங்கர் கணேஷ் இசை நிகழ்ச்சி… எல் ஆர் ஈஸ்வரி அம்மன் பாடல்கள் பாடுகிறார்… திருக்கோவில் தேரோட்டம் காண வாரீர் என அத்தனைக்கும் கரும்பலகையில் வண்ணச் சாக்பீஸ் கொண்டு எழுதி இரவு 12 மணி வரை தூங்காமல் பேருந்து நிலையம் முன்பாக, சன்னதி தெரு முன்பாக, கலையரங்கம் முன்பாக வைத்து மகிழ்வோம். எனக்குத் தெரிந்து திருச்செந்தூர் கடற்கரைதான் அழகும் எழிலும் வாய்ந்தது. கடற்கரையில் அமர்ந்து கொண்டு கடல் அலையையும் சற்று தூரத்தில் செல்கின்ற விசைப்படகுகளையும் மணப்பாடு கலங்கரை விளக்க ஒளியினையும் பார்த்தோமானால் நேரம் போவதே தெரியாது. அப்போதெல்லாம் கடலுக்குள் அதிக தூரத்தில் நிற்பவன் நானாகத்தான் இருப்பேன். முதலில் உப்புத்தண்ணி கண்களை உருத்தினாலும் நேரம் ஆக ஆக பழகிவிடும். அப்படியே நாளிக்கிணற்று நல்ல தண்ணீரில் வந்து குளிக்கும் போது ஒரு சுகம் ஏற்படும் பாருங்கள் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியலாம். திருச்செந்தூர் மாசித் திருவிழாவிற்கும் ஆவணித் திருவிழாவிற்கும் கந்த சஷ்டிக்கும் புகழ் வாய்ந்த தளம். செந்தூரன் சன்னதிக்கு வருவதற்கு எப்போதுமே ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஒரு இயல்பு தன்மை இருக்கும். ரெண்டு பொண்டாட்டிக்காரர். மேலும் மயிலும் அருகில் அழகு சொரூபம் எல்லாம் இணைந்து ஏதோ ஒரு நெருங்கிய உறவுக்காரர் வீட்டுக்கு செல்வது போல மகிழ்ச்சி உணர்வை தரும். திருச்செந்தூர் கோயிலைப் பற்றியும் அதன் தல புராணத்தைப் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டும் என்ற அவசியம் இதனைப் படிப்பவர்களுக்கு தேவையில்லை என நினைக்கிறேன். வள்ளி குகை உள்ளே புகுந்து வருவதற்குள் நெஞ்சு ‘திக்கு திக்கு’னு அடித்துக் கொள்ளும். அப்போதல்லாம் முன்னர் ஒரே ஒரு அகல் விளக்கு தான் எரிந்து கொண்டிருக்கும். கூட்டமாக நுழைந்தால் குப்புற விழ வேண்டியதுதான். சில சமயம் இரண்டு நாள் மூன்று நாள் விடுமுறை எனில் கோயிலுக்கு முன்பிருந்து கரையோரமாக நடந்து நடந்து அமலிபுரம் தாண்டிச் சென்று திரும்புவோம். அப்போதெல்லாம் கடல் குச்சி ரொம்பப் புகழ்பெற்றது பள்ளி மாணவர்களிடம். எங்களுக்கு அதையும் சோவிகளையும் சேகரிப்பது தான் பொழுதுபோக்கு. இப்போதும் திருச்செந்தூர் பெரிய வளர்ச்சி ஒன்றும் கண்டிடவில்லை. ஒரு சில புதிய கட்டடங்கள். புதிய விடுதிகள் தவிர அன்று பார்த்தது போலவே. காலையில் குளிப்பதற்கு மேலரத வீதி தாண்டி குளத்தங்கரை அருகில் உள்ள கிணற்றடிக்குச் செல்வோம். மார்கழி மாதத்தில் தலையில் தண்ணீர் தெளித்து துடைத்துக்கொண்டு குளித்ததாக ஏமாற்றுவதும் உண்டு. அருகில் பெரிய தெப்பக்குளம் உண்டு. ஒரு முறை நானும் நண்பர்களும் தெப்பக்குளத்திற்கு நடுவே சென்றுவர முடிவெடுத்து நீச்சல் அடித்த போது போகப் போக தொலைவு நீண்டு கொண்டே போனது போல் தெரிந்தது. ஒரு கட்டத்தில் பயம் கண்களில். திரும்ப கரைக்கு திரும்பி விடுவோமா என நினைத்தபோது இருபுறமும் ஒரே தொலைவில் தான் இருக்கிறோம் வா நடுமண்டபத்திற்கு சென்று விடலாம் என தைரியம் கொடுத்த நண்பனால் ஒரு வழியாக நடுமண்டபம் சென்று ஒரு மணி நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பியது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. வார்டன் சாரின் குழந்தைகள் விஜய சௌமியன், தில்லை, உதயா மற்றும் சமையல்கார ஜானகிஅக்கா மகன் செந்தில் போன்றவர்கள் எங்கள் வயதுக்காரர்கள் என்பதால் அன்று பழகிய பழக்கம் இன்றும் தொடர்கிறது. நான் எப்போதும் விடுதியில் அமைதியாகத் தான் இருப்பேன். நானும் இரண்டு அண்ணன்களும் இரண்டு வருடம் ஒன்றாக விடுதியில் வசித்தோம். பெரிய அண்ணனுக்கு படிப்பை விட மற்ற விஷயங்களில் எல்லாம் ஆர்வம் அதிகம். நவராத்திரி கொலு வந்துவிட்டது என்றால் மாடியில் குத்துப்போணி வைத்து டியூப் வழியாக கீழே மூன்று பைசா வடிவில் கட்டப்பட்ட நீரூற்றில் கலர் கலராக தண்ணீர் மாற்றி ஆச்சரியப்படுத்துவார். பெரிய அண்ணனின் நண்பர்களில் கோவில்பட்டியில் தற்போது வசிக்கும் கணேசன் அண்ணன் இன்று வரை எங்கள் குடும்ப உறவாகவே இருந்து வருகிறார்.
வெங்கட்ராமன் என்றொரு அண்ணன் உண்டு வீட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தவர். என் திருமணத்தில் ஓடி ஆடி வேலை செய்தார்.இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. எனது நண்பர்களைப் பொறுத்தவரை வீரவநல்லூர் ஆறுமுகம் மிகவும் நெருக்கம். இப்போது வேலை பார்க்கும் சுத்தமல்லியில் கூட என்னை அடிக்கடி வந்து சந்தித்து விட்டுச் செல்வார். சமீபத்தில் தான் காலமாகிவிட்டார். என்னை விட ஒரு வயது மூத்தவரான மனோகரனும் தற்போது ஊட்டியில் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று வாழ்ந்து வருகிறார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அலைபேசியில் பேசி வருகிறோம். சோழவந்தான் கணேசன் என்றொரு நண்பர் உண்டு அவர் இப்போது எங்கே எப்படி இருக்கிறார் என்று அறிய முடியவில்லை. எப்போதும் பெரிய கோவில் திருவிழாவிற்கு முன்பாக வெயிலுக்கந்த அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று விடும். அந்த தெருவில் தான் டியூஷன் மாஸ்டர் உண்டு. நானும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கிலத்திற்காக ஒரு ஆறு மாதம் சென்று இருப்பேன். கூடப் படிக்கும் மாணவர்கள் எல்லாம் தலையாட்டுவார்கள். நானும் தலையை ஆட்டுவேன் அவர்கள் புரிந்து ஆட்டுவார்கள் நான்… அந்த தெருவில் தான் விடுதியை தவிர பள்ளியில் படித்த நண்பரான ராஜசேகர் வீடு உண்டு. ராஜசேகர் எப்போதும் மிக அழகாக பள்ளிச் சீருடை அணிந்து வருவான். நெற்றியில் விபூதி கோடு போட்டது போல… அவனும் நானும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் என் வாழ்க்கையில் விரும்பி எடுத்த முதலாவது புகைப்படம் என நினைக்கிறேன். அப்புறம் நான் கல்லூரி முடித்து வேலை பார்த்து வளர்ந்த பிறகு சந்திக்கவே இல்லை. என்றாலும் நண்பர் கவிஞர் தாணப்பன் அவர்கள் மூலம் அவருடனான நட்பு புதுப்பிக்கப்பட்டது. ஆம் ராஜசேகர் அப்பா ஆறுமுகநேரி தாரங்கதாரா கெமிக்கல்சில் வேலை பார்த்து வந்தார் முன்னர். தாணப்பன் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அந்தத் தகவலும் பரிமாறப்பட ராஜசேகரின் அலைபேசி எண் கிடைத்து நட்பை புதுப்பித்து எனது மகன் திருமணத்திற்குப் பின்பு திருச்செந்தூர் சென்ற போது அவரது இல்லம் சென்று வாழ்த்துக்களைப் பெற்று பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டு வந்தது ஒரு அதிசய நிகழ்வு. அவரோடு இணைந்து முத்துகிருஷ்ணன், செந்தில் ஆறுமுகம், பாலன் என சில நண்பர்கள் பெயர் நினைவில் இருக்கிறது. அங்குள்ள தேரடித் திடலில் பொதுக் கூட்டங்கள் மிகப் பிரபலம். அங்குதான் எம்.ஆர்.ஆர் வாசு பேச்சைக் கேட்டேன். சாட்டையடி சக்திவேலின் சிறுவயதுப் பேச்சைக் கேட்டேன். வீரமணி ராதா கச்சேரியும் அங்கு தான் கேட்டேன். இன்னும் சொல்லப்போனால் அதே கீழ ரத வீதியில் இருக்கக்கூடிய எங்கள் விடுதிக்கு அடுத்த வீடு தான் கோவில் ஆணையாளருடைய வீடு. அதனால் அவரது வீட்டு முன் திருவிழா சப்பரப் பவனிகளின் முன்பாக வருகின்ற செந்தில் நயினார்சாமி அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் ஆகியோரின் தவில் ராஜாங்கம் ஒரு மணி நேரமாவது நடக்கும். கண்களில் பிரமிப்போடு கேட்ட காலம் அது. இப்போது விடுதி புதிய பயன்பாட்டுக்காக இடிக்கப்பட்டு விட்டது. பின்பகுதியில் இருந்த கோவில் மாட்டுத் தொழுவமும் ஒரு பாழடைந்த கிணறும் எங்களுக்கு நிறைய பேய்க்கதைகளை சொல்லித் தந்தது. நடுவில் இருந்த நல்ல கிணற்றில் தான் எங்களுக்கு கை கழுவ மற்றும் அவசர குளியலுக்கு தண்ணீர் இறைப்போம். மாதத்திற்கு ஒருத்தராவது உள்ளே விழுந்து ரத்தக் கரையோடு வருவது என்பது ஒரு நேர்த்திக்கடன். அந்தக் காலங்களில் கிருஷ்ணா தியேட்டரில் படம் பார்ப்பது என்பது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆனந்த நிகழ்வு. இன்று போல் என்றும் வாழ்க மீனவ நண்பன் அவன் ஒரு சரித்திரம் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் பல்லாண்டு வாழ்க படத்திற்கு பயங்கர கூட்டம் திரைக்கு முன்னால் இருக்கக்கூடிய பிளாட்பாரத்தில் படுத்துக்கொண்டே அங்கிட்டும் இங்கிட்டுமாக திரையில் கண்ணைத் தவழ விட்டு கண்வலியும் கழுத்து வலியும் ரெண்டு நாள் அடையாளமாக. ஒரே ஒரு முறை திருட்டுத்தனமாக கமல்-தீபா நடித்த அந்தரங்கம் பார்த்துவிட்டு அப்படியே கடற்கரை மணல் சாலை வழியாக நம்ம விடுதித் தோழர்களோடு கோவிலில் ஐக்கியம் ஆகிவிட்டேன்.(யாருக்குமே தெரியாது… ஆனா இந்தக் கட்டுரையை வார்டன் சார் படிச்சா அவ்வளவுதான்!) தற்போது விடுதி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்குச் செல்லும் கடற்கரைச் சாலையில் செயல்பட்டு வருகிறது. முன்னரே சொல்லி இருக்க வேண்டும் ஒரு விஷயம்…என் கல்லூரி காலத்தில் நான் தேவாரம் திருவாசகம் படித்த ஓதுவார் அய்யா நமச்சிவாய அவர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்த போது கடிதத்தில் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தேன் உடனடியாக என்னை நினைவுபடுத்தி பதில் அளித்து இருந்தார். மறக்க முடியாத முகம். அதிலிருந்து சில வருடங்களுக்குப் பின்னர் காலமாகிவிட்டார். அங்கிருந்த போதுதான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் எமர்ஜென்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது அம்சத் திட்டம் ஒன்று மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. அத்தோடு காமராஜர் மறைந்ததும் நான் அங்கிருந்த போதுதான். தேர்வுக்காலம் என்றால் இப்போது சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இருக்கும் இடம் வரை நடந்தே வந்து படிப்போம். திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தால் தூக்கம் அப்படி சொக்கிக் கொண்டு வரும். ஆனந்த விநாயகர் பிள்ளையார் கோயிலை ஒரு சுத்து சுத்திவிட்டு காலாரா நடந்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுதிக்கு வருவது அத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும். எங்கள் வார்டன் காத்தபெருமாள் பிள்ளை அவர்கள் விடுதிக் குழந்தைகள் மீது வைத்திருந்த பாசத்தையும்ம் பொறுப்பையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தேர் இழுத்து முடித்ததும் பந்தல் மண்டபத்துக்குள் உள்ள சிவன் கோவிலில் உள்ளே அனைவரையும் அனுப்பி அடைத்துவைத்துப் பின்னர் ஒவ்வொருவராக வரச்சொல்லி அரைமுறித் தேங்காய் கொடுத்து அனுப்புவார்கள். எனது எனது இரண்டாவது அண்ணன் அப்படி வெளியே வரும்போது ஒரு காவலரின் பையில் கை பட்டு விட்டது. உடனே அவர் திருடுகிறான் என பலமாக அடித்து விட்டார். இதனை கேள்விப்பட்டதும் வார்டன் சார் காவல் நிலையத்திற்கு நேரே சென்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக லெப்ட் ரைட் வாங்கி அந்தக் காவலரை மன்னிப்பு கேட்க வைத்த பிறகு தான் அமைதியானார். வேறு என்ன சொல்ல இந்த கட்டுரையில்… திருச்செந்தூர் எனது இரண்டாவது சொந்த ஊர். என் கதை இருக்கட்டும். மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் குடும்பத்தினருக்கு ஏதோ ஒரு நிம்மதியும் ஏற்பட வேண்டும் என்று நினைத்தால் திருநெல்வேலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செந்தூரன் சன்னதிக்கு போய்விட்டு வாருங்கள். முருகனின் அழகு முகமும் கடல் அலையும் தாலாட்டும் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும் என்பது மட்டும் நிச்சயம். நான் ஊருக்கு வந்துவிட்டு திருச்செந்தூர் நோக்கி செல்லும் போதெல்லாம் குரும்பூர் தாண்டி அம்மன்புரம் தாண்டிய சிறிது தூரத்தில் கண்ணில் படும் இரண்டு வரிகளுக்காக பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் இருந்து கவனித்துக் கொண்டே வருவேன். அது…


