எட்டயபுரம் மகாராஜா ஒரு சமயம் டிஸம்பர் மாதத்தில் சென்னைக்கு சென்றிருந்தார். அவர்கூட அவரது பரிவாரங்களும் சென்றிருந்தார்கள். பாரதியாரும் அவரது நண்பர்களும் சென்றார்கள். போகும் சமயத்தில், “செல்லம்மா! வரும்போது உனக்கு தேவையான சாமான்களை வாங்கி வருகின்றேன்” என்று சொல்லிச் சென்றார். நானும்ஆவலாக அவர்கள் திரும்புவதை எதிர்நோக்கியிருந்தேன். பதினைந்து தினங்கள் கழித்து எட்டயபுரம் திரும்பினார். குதிரை வண்டிகள் இரண்டு வாயிலில் வந்து நின்றன. ஒன்றிலிருந்து தாம் மட்டும் இறங்கினார்.மற்றொரு வண்டியிலிருந்த மூட்டைகளை வண்டிக்காரன் உள்ளே கொணர்ந்து வைத்தான். மூட்டைகள் கூடத்தை நிரப்பின. அத்தனையும் புடவைகள், வெள்ளிப் பாத்திரங்கள் முதலியவைகளாயிருக்கலாமென்று
மனம் பூரித்தேன். அவரது நண்பர்கள் முதலியோர் வந்து விசாரித்துச்
சென்றார்கள்.நான் கடைசியாக மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்ததும் எனக்கு கோபந்தான் வந்தது. அத்தனையும் புஸ்தகங்கள்! புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், வள்ளுவர், வள்ளலார், கம்பராமாயணம், ஆங்கிலப் புஸ்தகங்கள்! ஒரே ஒரு புடவை மட்டும் வாங்கி வந்திருந்தார். “இதென்ன இது! மகாராஜா எவ்வளவு பணம் கொடுத்தார்?” என்று கேட்டேன். “ரூபாய் 500 கொடுத்தார்” என்று உரைத்துப் பணப்பையை என்னிடம் நீட்டினார். திறந்து பார்த்தால் ரூ.15 தான் இருந்தது.இவருடன் சென்ற இவரது நண்பர், வீட்டிற்கு வேண்டிய சாமான்களையும் வாங்கிக் கொண்டு, கையிலும் ரூ.30 கொணர்ந்தார். எனது முகக்குறிப்பையுணர்ந்து, “செல்லம்மா! நீ பணத்திற்கு ஆசைப்படாதே! அழியும் பொருளைக் கொடுத்து அழியாக் கல்விச் செல்வத்தைக் கொணர்ந்தேன். என் மனதிற்குப் புஸ்தகங்களே ஆனந்தங் கொடுக்கின்றன. எனக்கு சந்தோஷம் உனக்குத் திருப்தியில்லையா?” என்றார். “ரொம்ப திருப்தி” என்றேன்.


