தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெவ்வேறு பகுதிகளில் பழங்காலத்தைச் சேர்ந்த மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் கண்டு எடுக்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் சேவகியின் இரண்டு கல்சிலைகளும், முறப்பநாடு பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பெண் வெண்கலச்சிலையும் இதில் அடங்கும்.
இந்த சிலையை உள்ளூர் மக்கள் கண்டு பிடித்து அப்போதைய முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு மூலமாக தாசில்தார் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இதற்கிடையில் இந்த சிலைகள் அனைத்தையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து மக்கள் பார்வைக்கு வைத்திட முடிவு செய்தார். இதற்கான நடவடிக்கையும் எடுத்தார். அதன்பின் இன்று ஸ்ரீவைகுண்டம் விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த சிலைகளை திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளியிடம் மூன்று சிலைகளையும், அதற்கான ஆவணங்களையும் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் கௌரவ்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ ஆதிமூலம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முனைவர் கந்தசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


