டி. ஆர். இராமச்சந்திரன் சனவரி 9, 1917 – நவம்பர் 30, 1990) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது. இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.

இராமச்சந்திரனுக்குப் படிப்பில் ஈடுபாடு இருக்கவில்லை. குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது. தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். இக்கம்பனி சில காலத்திலேயே மூடப்பட்டதை அடுத்து உள்ளூரைச் சேர்ந்த மணி ஐயர் என்பவர் இக்கம்பனியை நடத்தி வந்தார். இவருடன் நாடகக் கம்பனியில் பணியாற்றிய எஸ். வி. வெங்கட்ராமன் (பின்னாளில் பிரபலமான இசை அமைப்பாளர்) புதிதாகத் தொடங்கிய நாடகக் கம்பெனி ஒன்றில் ராமச்சந்திரனும் அவரது குழுவினரும் சேர்ந்தனர். கருநாடகத்தில் கோலார் நகரில் தங்கியிருந்து நாடகங்களை நடத்தினர். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.


