கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஆழ்வார்கற்குளத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தொடக்கவிழா நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் இன்று முதல் 9.1.2023 வரை நடக்கும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது.
இந்த முகாமை கல்லூரியின் முதன்மையர் முனைவர் தேரடிமணி தலைமையுரை தாங்கித் தொடங்கி வைத்தார். இதில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மலைமேகலை கலந்து கொண்டார். முகாமின் முதல் நாளான இன்று கல்லுரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் முனைவர் ரமேஷ் வரவேற்புரை வழங்கினார்.
மேலும், மண்வளம் பேணுவோம் விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் மண்வளத்தால் விவசாயத்தில் ஏற்படும் பயன் பற்றிய தகவல்களை பேராசிரியர் முனைவர் ஜோதிமணி வழங்கினார். பேராசிரியர்கள் முனைவர் செந்தில்குமார், சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். கல்லூரி மாணவி திவ்ய பிரபா நன்றியுரை வழங்கினார். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், கால்நடை மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம், இலவச மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ முகாம் போன்றவை நடைபெறவுள்ளது.


