தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி புளியங்காய் காலனியில் குடியிருப்புகள் அருகே திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் பாதை உள்ளது. இந்த பாதை வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் தினமும் வந்து செல்கின்றன. ரயில் தண்டவாளத்தை தாண்டி சந்தன மாரியம்மன் கோயிலும், விவசாய நிலங்களும் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் தண்டவாளத்தை கடந்து தினமும் பாதுகாப்பற்ற முறையில் வந்து சென்று வரும் சூழல் உள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற மூதாட்டி அடிபட்டு சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி புளியங்காய் காலனியை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தங்களது பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். துணை வட்டாட்சியர் சுடலை வீரபாண்டியன் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.


