அலுவலகக் கடிகாரம் நான்கு மணி என ஒலிக்க, பரபரப்பாகிய சுரேந்தருடன் பதட்டமும் ஒட்டிக்கொண்டது. ஆறு மணிக்கு பிளைட் லேண்டிங் என சிறு மூளை, பெருமூளைக்கு நினைவூட்ட, சேரிலிருந்து எழுந்தவன், மேனேஜரிடம் அனுமதி கடிதம் கொடுத்து விட்டு வெளியே வரவும், புக் பண்ணி இருந்த கால் டாக்ஸி வரவும் சரியாக இருந்தது. டாக்ஸியில் ஏறியவன் “ஐந்தரைக்குள் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும்” எனக் கூறி “வேகமாய் போங்க” என்றான். கட்டிளம் காளையான சுரேந்தருக்கு அடுத்த மாதம் இருபத்தியைந்து பூர்த்தியடைகிறது. மாநிறம், அடர்த்தியான புருவம், தடித்த மீசை, காந்தக் கண்கள், கணீர் குரல், கட்டுடல் தேகம் என வர்ணித்துக் கொண்டே இருக்கலாம். *’பல வருடங்களுக்குப் பின் விஜியை பார்க்கப் போகிறோம்’* என்ற எண்ணமே, அவனுடன் கிளர்ச்சியை ஏற்படுத்தியதில், பாடல் முணு முணுப்பாக வந்தது. அதை ஓரக்கண்ணால் பார்த்த டிரைவர் சிரித்துக்கொண்டார்.
சிக்னல்களை கடந்து வர மணி ஐந்தைத் தாண்டிவிட்டது. இருவரின் பெற்றோரும் நல்ல நண்பர்கள். எட்டாம் வகுப்பு வரை இணைபிரியாாமல் பிடித்த விஜியின் பெற்றோர், திடீரென காலமாகிவிட, தாய் மாமா அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விட்டார். பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் திரும்பி வரும் விஜியை வரவேற்கத்தான் ஏர்போர்ட்டுக்கு சென்று கொண்டிருக்கிறான் சுரேந்தர்.
முதல் நாளே பெற்றோரிடம் விஜயின் வரவைப் பற்றிச் சொல்ல, மகிழ்ச்சியில் திக்கு முக்காடி, கனவுக் கோட்டை கட்டினர். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான பேச்சு, அடக்கம், சிவந்த நிறம், கருவிழிகள், அனுசரித்து பழகும் விதம் என விஜியை நினைத்தாலே, சுரேந்தர் வானத்தில் பறக்க ஆரம்பித்து விடுவான்.
ஏர்போர்ட்டுக்குள் காரை நிறுத்திய டிரைவர் “சார் கனவு இன்னும் முடியவில்லையா” எனத் தட்டி எழுப்ப “சாரி” என வெட்கப்பட்டான்.
பிளைட் வர அதிலிருந்து இறங்கிய, ஜாடை மாறாக விஜியை எளிதில் கண்டுபிடித்த சுரேந்தர், வேகமாய் வந்து கட்டியணைக்க, நீண்ட நாள் பிரிவால் அன்பு மிகுதியில், சுரேந்திரனின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான் விஜி என்ற விஜயகுமார்.


