தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடவல்லநாடு கிராமத்தில் 130 ஏக்கரில் பாசன குளம் அமைந்துள்ளது. இந்த குளம் மூலம் சுமார் 1400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் இந்த குளம் தூர்வாரப்பட்டு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் குளத்தில் நீர்க்கருவை மரங்கள், அமலைச்செடிகள், படர்தாமரை செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. மேலும் குளத்தின் கரையும் மிகவும் மோசமாக உள்ளது.
எனவே இந்த குளத்தினை தூர்வாரி விவசாயத்திற்கு பயன்படும் குளமாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று வல்லநாடு பகுதியில் உள்ள இராசாங்குளம் விவசாய பராமரிப்பு சங்கம் சார்பில் இந்த இராசாங்குளம் குளத்தினை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் முதல் கட்டமாக குளத்து கரையில் உள்ள நீர்க்கருவை மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்து நீர் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மாற்றித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூர்வாரும் பணியில் இராசாங்குளம் விவசாய பராமரிப்பு சங்க தலைவர் தம்பான், செயலாளர் நங்கமுத்து, பொருளாளர் பாக்கியம், 3 நம்பர் மடை தலைவர் தம்பான், 6ம் நம்பர் மடை தலைவர் தம்பான், விவசாய ஆர்வலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் இந்த சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


