துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள விண்வெளி தொழில் பூங்கா வாயிலாக, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிமான முதலீடு கிடைக்கும்,” என, தமிழக ராணுவ தொழில் பெருவழித்தட திட்ட இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ‘வான்வெளி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி துறையில் தொழில்நுட்பம்’என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கம் நடந்தது. அதில், ராணுவ தொழில் பெருவழித்தட திட்ட இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: இந்தியாவுக்காகவும், உலகத்திற்காகவும், சுயசார்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவத் துறையின் மிக முக்கியமான 11தளவாடங்கள், இதுவரைஇறக்குமதி செய்யப்பட்டுவருகின்றன. தற்போது,இவை உள்நாட்டு உற்பத்தியில் தயாரிக்கப்பட உள்ளன. 1.25 லட்சம் கோடி ரூபாயில், அடுத்து மூன்று ஆண்டுகளில், முக்கிய தளவாடங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில், 30 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், ஏற்கனவே 13 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கை அடைந்துள்ளோம். தமிழகத்தில் ராணுவ தொழில் பெருவழித்தடம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனமாக, ‘டிட்கோ’ எனும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. இதில், 3,500 கோடி ரூபாய் வரை முதலீடு கிடைத்துள்ளது.தொழில் துறைக்காக ‘சிப்காட்’ நிறுவனம் நில வங்கியை ஏற்படுத்தித் தருகிறது. இதுவரை, 30 ஆயிரம் ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், 10 ஆயிரம் ஏக்கர் நிலம், ஐந்து ஆண்டுகளில் கையகப்படுத்த உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகல் மற்றும் காரணையில் ‘டிரோன்’ பூங்கா அமைக்கப்பட உள்ளன. கோவையில், மூன்று ராணுவ தொழில் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதேபோல, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில், விண்வெளிப் பூங்கா, பொது வசதி மையங்களுடன் அமைக்கப்பட உள்ளன.
மேலும், ராக்கெட் தயாரிப்பு மற்றும் சேவை தொடர்பான பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கு ராக்கெட் தளம் அமைக்கப்பட உள்ளதால், அதை விண்வெளிக்கு அனுப்புவதற்கான செலவில், 50 சதவீதம் குறையும். இந்த பூங்கா வாயிலாக, 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு கிடைக்கும். இதே போல, வான்வெளி மற்றும் ராணுவம் உற்பத்தி தொடர்பாக, பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய இயக்குனர் நவ்நீத் கவுசிக், கருத்தரங்க தலைவர் ராஜிந்தர் பாட்டியா மற்றும் சி.ஐ.ஐ.,யின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் துணை குழு தலைவர் எம்.பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


