ஸ்ரீமூலக்கரையில் மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்கச் செல்லும் பெண் வீராங்கனைகளை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் உள்ள மதுரை, திருச்சி, வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கைப்பந்து போட்டியில் விளையாடும் பெண்கள், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரையில் எம்.கே.உயர்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு வார காலமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அடுத்த வாரம் பீகாரில் நடைபெறும் தேசிய பெண்கள் கைப்பந்து போட்டிக்கு இன்று செல்ல உள்ளனர். அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி இன்று பேட்மாநகரம் எம்.கே.உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து தலைவர் சாதிக் அலி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லெட்சுமி பிரபா கலந்து கொண்டு அனைவருக்கும் பயிற்சி உபகரணங்கள் வழங்கினார். அதன் பின்னர் பெண்கள் கைப்பந்து அணியை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கைப்பந்து வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைப்பந்து நிர்வாகிகள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், தமிழக அணியின் பயிற்சியாளர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆண் கைப்பந்து சங்க தலைவர் அப்துல்வஹது, செயலாளர் பாரத், பொருளாளர் ரம்யா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


