தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 1000 ரூபாயை உயர்த்தி 2000 ரூபாயாக வழங்க கோரியும், மாற்றுத்திறனாளி குடும்பங்களை வறுமைக்கோடு பட்டியலில் இணைக்க கோரியும், மாற்றுத்திறனாளி அனைவருக்கும் மாற்றுத்திறனாளி துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க கோரியும், மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரியும், கடந்த ஏழு வருடங்களாக மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித சலுகையும் வழங்காததை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவிகளை நிபந்தனைகள் இன்றி வழங்க வேண்டி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கால்வாய் மணிமந்திரம் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெபஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூவானி, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்கபுரம், தெற்குகாரசேரி, கால்வாய், செய்துங்கநல்லூர், நாணல்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


