43. தாமிரபரணியில் குடிநீர் வழங்கல்
ஒருகாலத்தில் தாமிரபரணி கரையில் உள்ள மக்கள் ஆற்று மணலில் கிணறுதோண்டி குடிநீரை பயன்படுத்தினர். ஆற்று நீரை அருகில் உள்ள கிராமத்து மக்கள் மட்டும் பயன்படுத்தும் நிலை இருந்தது. தற்போது தாமிரபரணி தண்ணீரை நெல்லை, தூத்துக்குடி , தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பல உறிஞ்சி கிணறு தாமிரபரணி ஆற்றில் போடப்பட்டது.
தாமிரபரணியில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பதை நாம் அறியவேண்டியது அவசியம்.
1866 நவம்பர் 1 இல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மூன்று நகர்களும் நகராட்சிகளாக உருவாக்கப்பட்டன. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை நகராட்சிகளுக்குத் தேவையான குடிநீருக்குப் பிரதான ஆதாரங்கள், பாசனக் குளங்களும் கால்வாய்களும் தான். ஆனால், தூத்துக்குடிக்குத் திருவைகுண்டம் வடக்கு பிரதான கால்வாய் மூலம்தான் தண்ணீர் வழங்கப்பபட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இவற்றுக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு மிகவும் குறைவே.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு, தாமிரபரணி ஆற்றையட்டி யுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் யாவும் தங்கள் தேவைக் தாகத் தாமிரபரணியிலிருந்து தண்ணீரை எடுக்கத் தொடங்கின. 1970 வரையிலும், எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு ஆண்டுக்கு 6 மில்லியன் கனமீட்டர் மட்டுமே. ஆனால், 2000 இல் இந்தத் தண்ணீர்த் தேவை, ஆண்டுக்கு 26 மில்லியன் கனமீட்டராக அதிகரித்துவிட்டது. 2000 இல் ஒவ்வொரு நகருக்கும் மற்றும் ஊருக்கும் வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட குடிநீரின் அளவு பட்டியல் அதிகரித்துவிட்டது.
தாமிரபரணி ஆற்றிலிருந்து பல நகர்களுக்கும் கிராமப்புறப் பகுதி களுக்கும் குடிநீர் வழங்குவதற்காக மேலும் பல குடிநீர்த் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வகையில் எதிர்பார்க்கப் படும் தண்ணீர்த் தேவையின் அளவு 122 மில்லியன் கனமீட்டர் ஆகும். இதன் மூலம் குடிநீருக்கான மொத்தத் தேவை மட்டுமே 150 மில்லியன் கனமீட்டர் ஆகிவிடும். மாநில தண்ணீர்க் கொள்கைப்படி, மாநிலத்தின் முன்னுரிமையில் குடிநீர் வழங்கல்தான் முதலிடம் வகிக்கிறது. இதை மறுக்க முடியாது என்றாலும், தாமிரபரணிப் படுகைக்கு வெளியே தொலைதூரப் பகுதிகளுக்கு எல்லாம் இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாக விவசாயிகள் குறைப்பட்டனர். தொழிற் சாலைகள் மற்றும் மாநகராட்சிகளின் தேவைக்காக எடுப்பதன் மூலம் மணிமுத்தாறு அணையிலிருக்கும் தண்ணீர் குறைக்கப்படுகிறது. இதனால், தங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று மணிமுத்தாறு பெருங்கால் விவசாயிகள் புகார் செய்தனர். மணிமுத்தாறு பிரதான கால்வாய் விவசாயிகளும் இதே கருத்துகளைத் தெரிவித்தனர். தொழிற்சாலைகளுக்கும் மாநகராட்சிகளுக்கும் கோடைக் காலத்தில் எடுக்கப்படும் தண்ணீர் காரணமாக, பாபநாசம், -சேர்வலாறு அணைகள் வற்றச் செய்யப்படுவதால், ஜூன் முதல் தேதி இவற்றில் 500 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பதில்லை என்று தலைமடைப் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டினர். தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக, தங்களுடைய முன்பட்ட கார் சாகுபடிப் பரப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கடம்பாக்குளம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். வடக்கு பிரதான கால்வாயில் தொடர்ந்து வழங்கப்படும் தண்ணீரால் பயன்பெறும் பேய்க்குளம் விவசாயிகள்கூட, இதே புகாரைத் தெரிவித்ததுடன், தீர்வைத் தேடி நீதிமன்றத்துக்கும் சென்றனர். முடிவாக, தங்களுடைய தேவைகளைச் சமாளிப்பதற்காக, சிறப்புத் தண்ணீர் திறப்புகளுக்கு எனத் தனிப்பட்ட ஆணையைப் பெற்றிருக்கும் வெற்றிலை விவசாயிகள்கூட, தொழிற்சாலைகளா? வேளாண்மையா? – எதற்கு முன்னுரிமை என்று அரசு முடிவு செய்ய வேண்டும் என்று தவித்தனர்.
ஆனாலும் தாமிபரணியில் இருந்து ஏராளமான உறைகிணறு போடப்பட்டு தண்ணீர் அருகில் உள்ள கிராமத்துக்கு பயன்படுத்தப்பட்டது. அதை கட்டுப்படுத்த இயலவில்லை. அதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள் தொழிற்சாலைகள் இதையெல்லாம் தவிர்த்து குடிதண்ணீர் தாமிரபரணி மூலம் கொடுக்கப்படும் நிலை முழுவதுமாக ஏற்படடது. தலையணை பகுதியில் உறைகிணறு போடப்பட்ட பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதிக்கும், ஊர்காடு பகுதியில் இருந்து செங்கோட்டை பகுதிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பத்தமடை கூட்டு குடி தண்ணீர் திட்டம் மூலமாக திசையன்விளை நான்குநேரி பகுதிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
பழவூரில் இருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு தண்ணீர் கொடுக்கிறது என்பதும் ஆச்சரியமான ஒன்றாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் ஊராட்சி உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 400 குடியிருப்புக்கள், சங்கரன்கோயில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகராட்சி திருத்தங்கல் பேரூராட்சிக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்க தரைமட்ட நீர் தேக்க தொட்டி பழவூர் தாமிரபரணி ஆற்றங்கரையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. . இதற்காக 15 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரை மட்ட நீர்தேக்க தொட்டி கட்ட ரூ 78.70 லட்சம் தமிழ்நாடு குடிநீரு வடிகால் வாரியம் மூலம் ஓதுக்கிடு செய்யப்பட்டு, 7.01.2004 ல் பணி துவங்கப்பட்டது. இந்த பணி விரைவாக நடந்து 13 மாதங்களில் செயல்பட துவங்கியது.
இதனால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வரை இவ்வூரில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது என்பது மிகச் சிறப்பான பதிவாகும்.
கொண்டா நகரத்தில் இருந்து பேட்டை பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இங்கிருந்து தண்ணீர் பம்ப் செய்ய வித்தியாசமான முறைகளையெல்லாம் கையாண்டு உள்ளார்கள். இதே போல் மணப்படை வீடு பகுதியில் இருந்து பாளையங்கோட்டை பகுதிக்கு தண்ணீர் கொடுத்து உள்ளார்கள். சீவலப்பேரி கூட்டு குடிநீர்த்திட்டம் மூலமாக கோவில்பட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர்.
தூத்துக்குடிக்கு அகரம் பகுதியில் இருந்து மூன்று பைப் லைன் திட்டம் மூலமாக குடிதண்ணீரும், கலியாவூரில் இருந்து நான்காம் பைப் லைன் திட்டமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அகரத்தில் இருந்து விருதுநகர் காரியப்பட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல இங்கிருந்து அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆற்றின் கீழக்கரையில் உள்ள கிராமத்துக்கும் மேலக்கரையில் உள்ள கிராமத்துக்கும் கருங்குளம் கூட்டு குடிதண்ணீர் திட்டம் தனித்தனியாக இயங்கி வருகிறது. தொடர்ந்து முத்தாலங்குறிச்சில் இருந்து நெல்லை மாவட்டம் கூடன் குளத்துக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம் உடன்குடி கூட்டு குடிதண்ணீர் திட்டம் 308 கிராமங்களுக்கும், கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுகிறது. இதுபோக அந்தந்த ஊர்களில் உறை கிணறுபோடப்பட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் குடிதண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் நான்கு மாவட்டத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் வீதம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. சில உறை கிணற்றில் இருந்து 1 நிமிடத்துககு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை உறிந்து சேகரிக்கப்பட்டு குடிதண்ணீருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் நினைத்து பார்த்தால் தாமிரபரணி தாய் நமக்கு எவ்வளவு பெரிய உதவிகளை செய்து வருகிறாள். கோவில் பட்டியை பொறுத்தவரை ஒரு காலத்தில் தண்ணீர் இல்லாத காடாக இருந்தது என்றும் அந்த ஊருக்கு யாரும் பெண் கட்டி தரமாட்டார்கள் என்றும் தாமிரபரணி ஆற்று தண்ணீர் வந்த பிறகுதான் தன் நிலைக்கு வந்தது என்றும் எழுத்தாளர் சோ. தர்மன் முக நூல் பதிவொன்றில் கூறியிருந்தார். அவர் கூறியபடியே பல ஊர்கள் உண்டு.
ஆனால் இன்றோ தாமிரபரணி தண்ணீரை நாம் பெற்று குடித்து, குளித்து அதன் பின் அதை சாக்கடையாக்கி, அந்த சாக்கடையை தாமிரபரணியில் விட்டு நதியையே சாக்கடையாககி கொண்டிருக்கிறோம். அந்த நிலை மாறவேண்டும். சரி. அது ஒரு புறம் இருக்கட்டும்.
சேரன்மகாதேவியை சேர்ந்த முகம்மது அலி என்ற ஒருவரை பற்றி நாம் அறியவேண்டும். அவர் வித்தியாசமானவர். நாணயம் மற்றும் அபூர்வப் பொருள் சேகரிப்பாளர். இவரிடம் அதிசய ஓலைச் சுவடி ஒன்று உள்ளது. நாம் ஓலைச்சுவடியில் கவிதை மற்றும் தகவல்கள் எழுதுவதைப் பார்த்து இருப்போம். ஆனால் முகம்மது அலி சேர்த்து வைத்து இருக்கும் ஒரு ஓலைச் சுவடியில் பத்திரமே எழுதப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் நிலங்கள் பதிவினை ஓலைச்சுவடி மூலம் செய்து இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக இந்த ஓலைப் பத்திரப்பதிவு சுவடி இவரிடம் உள்ளது.
இவரிடம் ஏராளமான காசுகள் உள்ளன. அந்த காசுகளில் புதுக்கோட்டை அம்மன் காசு, கி.பி.1730 – 1769 சதாவாகனர் காசு, கி.பி. 3ஆம் நூற்றாண்டு ஆந்திரா, கர்நாடகா காசு, சேர மன்னர் காசு, (கி.மு. 250 -& 175) கி.பி 1740ல் வெளியிடப்பட்ட ராமர் பட்டாபிஷேக நாணயம், கி.பி.985 &- 1014ல் வெளிவந்த இராஜஇராஜசோழன் காசு, கி.பி. 1012 & 43 ல் அறிமுகம் செய்யப்பட்ட இராஜேந்திர சோழன் காசு ஆகியவை உள்ளன.
கன்னடியன் காலத்தில் உள்ள பருப்பு போன்ற தங்க நாணயம். கி.பி. 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டில் ராஜகோபால் சக்கரப் பொன் காசு போன்றவை முகம்மதுஅலி வசம் உள்ளது. அது மட்டுமல்லாமல் அதன்பின் நமது நாட்டுக்கு வந்த டச்சுக்காரர் கால பருப்பு போன்ற பொற்காசுகள், கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியன் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் 12ஆம் நூற்றாண்டு காசுகள் அதியமான் காசு உள்படப் பல நூறு காசுகள் இவரிடம் உள்ளது.
மேலும் 99 வெளிநாட்டுக் காசுகளை இவர் சேகரித்து வைத்துள்ளார். நாகலாந்து மக்கள் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் நாகர்கள் தாமிரபரணி கரையில் வாழ்ந்த நிலை குறித்து வரலாற்று ஆதாரங்களைத் திரட்டி வைத்துள்ளார்.
சங்க கால நாணயம், சேர, சோழ, பாண்டிய நாணயம் விஜயநகர பேரரசர்கள், சுல்தாக், ஹைதர் அலி, உடையார் கோல் கொண்டான், பல்லவர் காலத்துக் காசுகள் இவரிடம் உள்ளது.
வெளிநாட்டு நாணயங்களில் நேபாளம், ஜப்பான், பரு, தென் அமெரிக்கா, பர்மா, பூடான், சைனா, எகிப்து, ஜெர்மனி, பங்களாதேஷ், பிரேசில், அமெரிக்கா, கனடா, உராகுவே, சவுதி அரேபியா, சிங்கப்பூர், போலந்து, கத்தார், லாட்பியா, பாகிஸ்தான், மஸ்கட், குவைத், துபாய், அபுதாபி போன்ற நாட்டு நாணயங்கள் இவரது சேகரிப்பில் உள்ளன.
காந்தியடிகளைப் பற்றி பதினாறு நாடுகள் ஸ்டாம்பு மற்றும் நாணயங்களை வெளியிட்டது. அவை அனைத்தையும் முகமது அலி சேகரித்து வைத்துள்ளார். நமது நாடு நாணயங்களை வெளியிட்டபோது எந்த வகையான நாணயங்களை வெளியிட்டதோ, அவற்றையெல்லாம் அவர் சேகரித்து வைத்துள்ளார். 25 பைசா தபால் அட்டை வருவதற்கு முன்பு எந்தெந்த காசில் தபால் அட்டை வந்ததோ அவை அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளார். 1960ல் பத்து பைசாவிற்கு விற்பனையான இன்லண்ட் லட்டரையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். 1854ல் இருந்து 1990 வரை வந்த அஞ்சல் கவர்களையும் இவர் சேகரித்து வைத்துள்ளார். இவரிடம் காலணா, ஓட்டை காலணா ஆகியவையும் உள்ளது.
1939&-45ல் பர்மா மிலிட்டரி அட்மிஷன் என்ற ஸ்டாம்ப், 1914ல் புழக்கத்தில் இருந்த லெதர் (தோல்) காயின் ஆகியவற்றையும் சேர்த்து வைத்துள்ளார். 1912ல் கிரீடம் இல்லாத ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் படம் வைத்த நாணயமும், 1914ல் ஜெர்மன் நாட்டில் மொட்டைத் தலையுடன் ஜார்ஜ் மன்னன் தோல் நாணயத்திலும் காட்சி தருவது போன்ற வித்தியாசமான நாணயங்களையும் இவர் சேகரித்து வைத்துள்ளார்.
ஓவியப்பணி, ஆசிரியர் பணி, என்.சி.சி.ஆசிரியர், நாணயங்கள் சேகரிப்பாளர் எனப் பன்முகம் காட்டும் இந்த வித்தியாசமான மனிதர் 1952ல் இருந்து நடந்த முக்கியமான நிகழ்வுகள், பத்திரிகை செய்திகளையும் சேகரித்து வைத்துப் பார்ப்போரைப் பரவசமடைய செய்கிறார். இவர் கூறிய மற்றுமொரு தகவலில் நாகலாந்துக்கும் நமது நாட்டுக்கும் தொடர்பு ஒன்று உள்ளதாகவும் அதற்கு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியும் அவர் கூறியதாவது.
சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லெமுரியா கண்டம் கடல்கோளில் மூழ்கியது. அதற்குமுன் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசியா நெருங்கி இருந்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் மத்திய ஆசியா கண்டம் ஆகியவற்றில் இருந்த பழங்குடி மக்கள் கிழக்கு நோக்கி வந்து இந்தியாவில் குடியேற ஆரம்பித்தனர். அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலை போன்ற இடங்களில் வாழ்ந்தனர். அவர்களை நாகர்கள் என்று அழைத்தனர். நாகர்கள் குடியிருந்த இடத்தை நாகலாந்து என்றும் அழைத்தனர். அவர்களுடைய குல தெய்வம் நாகப்பாம்பு. ஆகவே நாகர்கள் தங்கள் அணிகலன்களில் நாகப்பாம்பு போன்ற உருவத்தை வரைந்து இருந்தனர். அந்த உருவம் வரைந்த நாகர்களுக்குச் சொந்தமான அணிகலன்கள் தாமிரபரணியில் கிடைத்துள்ளன.
ஈரான் தேசத்திலும் இதேபோல் பழங்குடி மக்கள் வசித்து வந்துள்ளனர். அங்கு நாகர்கள் கோவில்கட்டி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் அணியும் அணிகலன்களில் பாம்பு படங்களைப் பொரித்து இருப்பார்கள். அந்த அணிகலன்கள் தாமிரபரணி கரையில் கிடைத்துள்ளன. அதை முகமது அலி எடுத்துச் சேகரித்து வைத்து ஆராய்ச்சி நடத்தி உள்ளார். இதில் நாகர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பொதிகை மலை வழியாக இமயமலைக்குச் சென்றது உண்மைதான் என்றும் உறுதிப்படுத்தி உள்ளார்.
(பொருநை ரகசியத்தினை தேடி )


