203.தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று வயது 36
தமிழ்நாட்டில் இருபதாவது மாவட்டமாக, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பெயரால், சிதம்பரனார் மாவட்டம் 1986 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 19ஆம் நாள் அமைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல வட்டங்களைத் தன்னகத்தே கொண்டு சிறப்புடன் திகழ்கிறது சிதம்பரனார் மாவட்டம். தற்போது தூத்துக்குடி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இன்றோடு 36 வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது. இதையட்டி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில் ராஜ் அவர்கள் காயல்பட்டினம் கடற்கரையில் 3600 பனை மரக்கன்றை நட்டு வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மதர் டிரஸ்ட் இயக்குனர் டாக்டர் கென்னடி செய்து வருகிறார். நாளை 21 ந்தேதி இதையட்டி 36 மரங்களை கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில் ராஜ் நடுகிறார். தொடர்ந்து செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வரா மகாலில் 5036 மரச்செடிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிட்டு 5036 பேருக்கு மஞ்சள் பையை வழங்குகிறார். உடன் மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் கலந்துகொள்கிறார். ஏற்பாடுகளை மேலஆழ்வார் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவன இயக்குனர் முனைவர் சுந்தரேசன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தினை பற்றிய தகவல்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத தியாகிகள் நூலில் இருந்து காணலாம்.
பரந்த திருநெல்வேலி மாவட்டத்தை, இரு மாவட்டங்களாகப் பிரித்து, திறமையாகவும் அரசின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், நிதி, நீதி நிர்வாக நலன் கருதியும் தூத்துக்குடி மாவட்டம் உருவானது.
மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பற்பல நல்வாழ்வுத் திட்டங்களின் பயன், மக்களை முழுமையும் விரைந்து சென்றடைய வேண்டும்; அரசுக்கும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும்; இதற்காக மாவட்டங்கள் சிறியனவாக அமைந்திருத்தல் இன்றியமையாதது என்னும் கருத்தில் பெரிய திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது திருநெல்வேலி மாவட்டம், 22 நவம்பர் 2019 அன்று தென்காசி என்ற மற்றுமொரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டப் பகுதி மிகத் தொன்மையான பூமியாகும். டாக்டர் கால்டுவெல் பாதிரியார் இப்பூமியின் தொன்மைச் சிறப்பைப் பெரிதும் புகழ்ந்துரைத்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் அமைந்துள்ள கொற்கைத் துறைமுகத்தோடு பல நாடுகளும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல், தமிழ்ப் பண்பாட்டைப் போற்றி வளர்த்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழரின் தொன்மையான நாகரீகமான ஆதிச்சநல்லூர் நாகரீகம் மிகவும் தொன்மையான நாகரீகம் என போற்றப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகத்தின் நாகரீகம் தென் தமிழகம் தாமிரபரணிக் கரையில் இருந்து தான் எழுதப்படவேண்டும் என்றுகூறினார். அதற்குக் காரணம் ஆதிச்சநல்லூர் நாகரீகம். சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் என தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் இடங்கள் எல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உள்ளது.
இப்பகுதி ‘தென்பாண்டி நாடு’ என்று போற்றப்பட்டது. பாண்டியப் பெருமன்னர்க்குப் பெருமையளித்த முத்து, இம்மாவட்ட்தின் கடற்கரையில் இன்றும் குளிக்கப்படுகின்றனது. ‘முத்து குளிப்பதொரு தென்கடலே’ என்னும் பாரதியின் வரிகள் போற்றிக்குறிப்பது இப்பகுதியைத்தான்.
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், பாட்டுக்கொரு புலவன் பாரதி போன்ற பெருமக்களின் தாயகம் என்ற பெருமையையும், வெள்ளையருக்குத் தொல்லை தந்து, இப்பூமியிலிருந்து அவர்களை வேருடன் களைய வீர விளையாட்டு விளையாடிய வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த மண் என்ற பெருமையையும் ஒரு சேரப்பெற்றது இம்மாவட்டமே.
அதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கடலையூர், மணியாச்சி ஆஷ்துரை, தூத்துக்குடி நூற்பாலை, குலசேகரபட்டணம் லோன் துரை கொலை வழக்கு எனச் சுதந்திரப் போராட்டத்தில் அறியப்படாத வீரர்கள் மிக அதிகமாக உள்ளனர். அவர்களைப் பட்டியலிடவே இந்த நூல். சுதந்திர பேராட்டத்தின் நினைவு சின்னங்கள் பல தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் சுதந்திரபோராட்ட வீரர்களால் நிறுவப்பட்ட நினைவுத் தூணும், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் நினைவுத் தூணும் மிகச்சிறப்பாக உள்ளது.
மூவேந்தர் காலத்தில் முத்துக் குளிக்கும் துறைமுகமாக விளங்கிய தூத்துக்குடி துறைமுகம், இன்று சுதந்திர பாரதத்தின் சொத்துக்குவிக்கும் துறைமுகமாக விளங்குகிறது. சிதம்பரனாரின் கனவுகளின் அடிக்காலாக மட்டுமல்ல & அவருடைய நினைவாலயமாகத் திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டம்.
மருதம், முல்லை, நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலச்சிறப்புகளையும் தூத்துக்குடி மாவட்டம் இணைந்த, பண்டைய நெல்லை மாவட்டம் பெற்றிருந்தது. தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, இரண்டு மாவட்டங்களும் இத்ததைய சிறப்புகளில் சிலவற்றை இழந்து விளங்குகின்றன. என்றாலும், குறிஞ்சியை மட்டுமே தூத்துக்குடி இழந்து விட்டது. ஆனாலும் சிலர் வல்லநாட்டு மலையையும் குருமலையையும் குறிஞ்சி என்றும், ஒட்டப்பிடாரம் பகுதியை மேய்ச்சல் நிலமான முல்லை என்றும், ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதியை மருதம் என்றும், சாயர்புரத்தினையும், தேரிக்குடியிருப்பையும் பாலை என்றும், 7 முத்துகுளித்துறையை நெய்தல் என்றும் போற்றுகிறார்கள். அப்படி பார்த்தால் தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தாலும் கூட ஐவகை நிலங்களை விட்டுப் பிரியவில்லை. இதற்கிடையில் சுதந்திர போராட்ட வீரர்களைப் பார்க்கும் முன்பு வரலாற்று பாதையில் தூத்துக்குடி மாவட்டம் கடந்து வந்த பாதையை ஒரு பார்வை பார்ப்பது அவசியமாகிறது.
(நதி வற்றாமல் ஓடும்)


