அந்தக் காலத்தில் செதுக்கப்பட்ட மரச்சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் இன்றைய மதிப்பு 100 கோடியாகும். விலைமதிப்பில்லா மரச்சிற்பங்கள், மியூரல் வகை ஓவியங்கள், திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள நாறும்பூ நாதர் ஆலயத்தின் ராஜகோபுரத்தின் உள் அடுக்கு மண்டபத்தில் உள்ளன.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் திருப்புடைமருதூர் உள்ளது. மிகவும் அழகான புண்ணியச் சேத்திரம். தாமிரபரணி ஆற்றில் வராக நதியும் கடனா நதியும் கலந்து முக்கூடலாகக் காட்சியளிக்கும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் அழகான ஊர். தாமிரபரணியின் அழகு ஒரு புறம், பிரமாண்டமான கோபுரம் மறுபுறமென. இவ்வூரில் இயற்கையும், பழைமையும் நம் மனதைக் கொள்ளைக் கொள்வதாகவே உள்ளது.
தாமிரபரணியின் வளைவு ஒன்றில் கிழக்கு நோக்கிய வண்ணம் நாறும்பூநாதர் என்றழைக்கப்படும் சிவன் கோயில் காணப்படுகின்றது. இக்கோயிலின் கட்டடக் கலையினை நோக்கும் போது இது முதலாம் இராசராச சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுள்ளது.
கோயில் வட்ட எழுத்து கல்வெட்டு விவரப்படி மாறன், சடையன் என்ற பாண்டிய மன்னர்கள் பெயர் கூறப்படுகிறது. கி.பி 650&இல் ஒரு சிறிய கோயிலாகக் கட்டப்பட்டு இருக்கலாம். அதன் பின் வந்த பாண்டியர்கள் இக்கோயிலை மாற்றி, சண்டிகேசுவரர் கோயிலாகக் கட்டியிருக்கவேண்டும்.
இடைக்கால பாண்டிய மன்னர்களின் மரபு வழிப்படி பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 575&-600) மாறவர்மன் அவனிக்குளாமணி (கி.பி. 500&-625) சடையவர்ம செழியன் வேந்தன் (கி.பி. 625-&640) மாறவர்மன் ஹரிகேசரி (கி.பி. 640&-670) கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 675&-710) ஆகியோர் இவ்வூரை ஆண்டதாகக் கல்வெட்டுக் குறிப்புகள்க் கூறப்படுகிறது.
கி.பி. 650&இல் மதுரையை ஆட்சி புரிந்தவன் மாறவர்மன் ஹரிகேசரி. இவரது மகன் கோச்சடையான் ரணதீரன். இவன் பெரும் படையுடன் திருப்புடைமருதூரில் மருத வனத்தில் படை வீடு அமைத்து வாழ்ந்து வந்தான். அப்போது பொதிகைப் பகுதியை ஆண்டு வந்தவன் அயினி என்ற மரபைச் சேர்ந்த ஆய்க்குடியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த ஆய்வேல் என்ற சேரமன்னன்.
ஆய்வேல் திடீரென்று ஒரு நாள் மிகப்பெரிய படையுடன் வந்து கோச்சடையான் படை வீட்டைத் தாக்கினான். இருவருக்கும் பயங்கரமான போர் நடைபெற்றது. இப்போருக்கு மருதூர் போர் என்று பெயர். இப்போரில் தாமிரபரணி இரத்த ஆறாக ஓடியது. அதில் ஆய்வேல் என்ற சேர மன்னனை, பாண்டிய மன்னன் கோச்சடையான் வென்றான்.
இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் 7&ஆம் நூற்றாண்டில் மூன்றிசமுடையார் கோயிலைக் கட்டினான் பாண்டிய மன்னன். இந்த இறைவனுக்கு மூன்றிசமுடையார் என்று பெயர். இப்பெயர் பாண்டியன் படை அமைப்புகளைக் குறிக்கிறது. பாண்டியனின் வலக்கை படை, இடக்கை படை, தர்மத்தைக் காக்கும் படை என்ற பிரிவுகளைக் கூறும் வகையில் இறைவனை மூன்று கை உடைய (இசமுடைய) நைனார் என்று பெயர் வழங்கப்படுகிறது. இதுவே மூன்றிசமுடையார் என்றானது.
களக்காடு பகுதியை ஆண்ட ராஜா வீரமார்த்தாண்ட பாண்டியன் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளார்.
தஞ்சைப் பெரிய கோயில் கட்டிய ராஜராஜசோழன் கி.பி 965&1014 ஆண்டு இக்கோயிலில் வந்து திருப்பணி செய்துள்ளார். திருப்புடைமருதூரை இவரின் கல்வெட்டுகளில் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இக்கோயிலில் ராஜகோபுரம், சபாபதி மண்டபம், மொட்டைக் கோபுரம், திருத்தேர் போன்ற பணிகள் யாவும் விஜயநகர மாமன்னன் சதாசிவராயர் காலத்தினைச் சேர்ந்தவையாகும்.
இவ்வூர் ராஜகோபுரத்தின் உள்தட்டில்தான் நெஞ்சை அள்ளும் அற்புதக் கலைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
16&ஆம் நூற்றாண்டின் கலைநயம் மிக்க வேலைப்பாடு கொண்டது. விஜய நகரச் சக்கரவர்த்தி சதாசிவராயர் காலத்து எழில்மிகு கலைத்திறன். இதை மேலை நாட்டு அறிஞர் பெர்சி பிரௌன் பாராட்டியுள்ளார். விஜயநகரக் கலையை மீறிய நேர்த்தி வாய்ந்தக் கலை இந்த ஓவியங்களில் இருப்பதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இதைக் காண நாம் செல்ல வேண்டுமென்றால் கண்டிப்பாகக் கோயில் நிர்வாக அதிகாரியிடம் அனுமதி பெற்றே தீரவேண்டும். பின் அவர்கள் காட்டும் வழியாக ராஜகோபுரத்தின் உள்அடுக்குள் இறுக்கமான படி வழியாக ஏறிச் செல்லவேண்டும். பேட்டரி லைட்டை கையில் வைத்துக் கொள்வது நலம். முதல் தளம் ஏறியவுடனே விஸ்தாரமான மண்டபத்தின் உட்புற சுற்றுச் சுவர் முழுவதுமே கலை பொக்கிஷங்கள். அங்குள்ள ஜன்னல்கள் வழியாகத் தெரியும் வெளிச்சத்தில் அங்குள்ள மரச் சிற்பங்களையும், ஓவியங்களையும் காணும் போது நமது மனமே கொள்ளை போய் விடும்.
சாதனையின் பெட்டகமாக, அரியப் பொக்கிஷமாகக் காட்சி அளிக்கிறது இந்தச் சிற்பங்கள். விலை மதிக்க முடியாத நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்தவை இவை. யார் செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள்? எத்தனை நாள் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? அடுக்காக, கேள்விகள் நம் மனதினை வருடிவிடும். அங்குள்ள ஓவியங்களைக் காண்கிறோம். அவை அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. இவை மியூரல் வகையைச் சேர்ந்தவை.
சுண்ணாம்புக் கலவையில் முட்டை, கடுக்காய் மற்றும் பலவகை மூலிகைச் சாறுகள், பதநீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஊற வைத்த கலவையால் பூசி மெருகேற்றப்பட்ட சுவரில் மூலிகை வண்ணங்களை வரையப் பயன்படுத்தி உள்ளார்கள். இந்த ஓவியங்கள் 16-&ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இதிகாச நிகழ்வுகள், அக்கால அரசியல் படையெடுப்புகள், சரித்திர நிகழ்வுகளை நமது கண் முன் விரித்துக் காட்டுகின்றன. அக்கால மக்களின் வாழ்க்கை முறை, பக்தி நிலை, கலாச்சாரம், அயல்நாட்டு வாணிபத் தொடர்பு போன்றவற்றை, தத்ரூபமாக வரைந்துள்ளார்கள். பச்சை, கறுப்பு, மஞ்சள், வைலட் உள்ளிட்ட மூலிகை வண்ணங்களைப் பயன்படுத்தித் தீட்டியுள்ளார்கள். நூற்றுக் கணக்கான ஓவியங்கள் அங்குக் காணப்படுகின்றன. அனைத்தும் ஒவ்வொரு கதைசொல்லிக்கொண்டிருக்கும் உயிரோட்டமான கதைசொல்லிகள். இந்த ஓவியங்களைச் சீரமைக்க தற்போது சுமார் 100 கோடி ரூபாய் தேவையாம். அறநிலையத்துறை அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
பல நாட்டைச் சேர்ந்தவர்களும் மரச்சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்து மகிழ்ந்து போற்றும் வகையில் இவை அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. உள் அரங்கு நிறை கலை மிளிர் மரச்சிற்பங்களின் சிங்காரக் கலைக் கூடத்தினை முதல் நிலை கோபுர மண்டபத்தினைப் பார்த்து அசந்து போய் நிற்கிறோம். அனைத்துமே உயிர்த் திறன் மிக்கவை.
ஒவ்வொரு ஓவியங்களை ஆய்வு செய்யும் நோக்கோடு நமது கண்கள் அவற்றை நோக்கி நகருகிறது.
தென்புறம் மகாவிஷ்ணுவினால் 10 அவதார நிகழ்ச்சிகளில் வாமன அவதார நிகழ்வுகள் காணப்படுகின்றன. மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார் பகவான். அவருக்கு மூன்றடி மண்ணை மகாபலி கொடுக்கின்றான். அந்தக் காட்சியும், வாமனர் சங்கு, சக்கரம், வில், அம்பு , ஏந்தி மகாவிஷ்ணு விசுவரூபம் எடுக்கின்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
இறைவன் சிவபெருமான் தட்சிணா மூர்த்தி கோலத்தில் அமர்ந்து இருக்க அருகில் 4 முனிவர்கள் தியான நிலையில் அமர்ந்து இருப்பது போலச் சித்தரிக்கப்பட்ட ஓவியம் அங்குச் சிறப்பாகக் காணப்படுகிறது.
மற்றொரு பகுதியில் அர்ச்சுனன் தனது சகோதரர்கள் மற்றும் பாஞ்சாலியுடன் அமர்ந்திருந்து பகவான் கிருஷ்ணனுடன் உரையாடும் நிகழ்ச்சி காணப்படுகிறது. தொடர்ந்து அர்ச்சுனன் சிவபெருமானை வேண்டிப் பாசுபதம் அஸ்திரம் பெறக் கடுந்தவம் இருக்கின்ற காட்சியும், குழந்தையைத் தனது இடுப்பில் சுமந்து வரும் பார்வதி தேவியும், வேடுவர் கோலம் கொண்ட சிவபெருமானும் அர்ச்சுனனைச் சோதித்து வம்புக்கு இழுப்பது போன்ற காட்சியும் காணப்படுகிறது. அவர்களுக்குள் நடக்கும் போர் முடிந்த பின் சிவபெருமான் உருவெடுக்கும் காட்சி, அர்ச்சுனனுக்கு அஸ்திரம் வழங்கும் காட்சி காணப்படுகிறது.
ஒவ்வொரு வரலாற்றையும் வரிசைப்படுத்திக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதம் நம்மை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. மாணிக்கவாசகர் பல்லக்கில் பொன் பொருளை எடுத்துக் கொண்டு கோயில் கட்டச் செல்லும் காட்சி மிக அருமையாக மரசிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
அவர் அரசவையில் இருப்பது, அரசன் கொடுத்த நிதியினைத் தலைச்சுமையிலும், பல்லக்கிலும் எடுத்துச் சென்று பின் திருவருளால் துறவியாகி இறைவனுக்குத் திருப்பணியாகத் திருக்கோயிலைக் கட்டும் வரலாற்றை மர ஓவியம் மூலமாக நமக்கு விளக்க மிக அருமையாகச் செதுக்கியுள்ளார் சிற்பி.
ஐந்து நடனக் கன்னிமார்கள் நடனம் புரியும் சிற்பத்தினைத் தூரத்தில் இருந்து பார்க்கும் போது குதிரை இருப்பது போலக் காட்சி தருகிறது. அருகில் சென்று பார்த்தால் ஐந்து நடனக் கன்னிகள் தெரிகிறார்கள். இந்த அபூர்வச் சிற்பங்களை ஆனந்தத்துடன் கண்டுகளிக்கிறோம். ஒரு சிற்பத்துக்கு மறு சிற்பம் சிறந்ததா—? இல்லை உயர்ந்ததா? என எண்ண முடியாத அளவுக்கு அத்தனையும் சிறப்பு வாய்ந்தவை.
அப்படியே நாம் கடந்துசெல்லும் போது மற்றுமொரு சிற்பம் நம்மை ஆட்கொள்கிறது. அதுவொரு ரத்தச் சரித்திரம்.
மாறவர்வன் அரிகேசரி பாண்டிய மன்னன் கி.பி 640 &ஆம் ஆண்டு ஆண்ட போது சமணர்களுக்கும், சைவர்களுக்கும் பெரும் போர் ஏற்பட்டது. அந்த வரலாற்றைப் பேசும் சித்திரமாகவே இங்கு வரைந்துள்ளனர். சமண சமயத்தைத் தழுவிய பாண்டிய மன்னர் வெட்கை நோயால் அவதிப்பட்டார். பாண்டியனின் மனைவியான மங்கையர்க்கரசியும், மந்திரி குலத்தாயும் அருகில் இருந்து அவரைப் பேணி பாதுகாக்கின்றனர். சோழநாட்டில் தன் மாணவர்களோடு யாத்திரை மேற்கொண்ட திருஞான சம்பந்தரைப் பாண்டிய நாடான மதுரைக்கு வரவேண்டி அரசன் வேண்டி நிற்கிறார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஞானசம்பந்தர் அரண்மனைக்கு வருகிறார். அரண்மனையில் சமண முனிவர்களுக்கும், திருஞான சம்பந்தருக்கும் இடையில் நடந்த அனல் பறக்கும் வாதங்களில் சைவம் வென்றது. மன்னனின் நோய் திருஞான சம்பந்தரின் திருநீறு கொண்டு நீக்கப்பட்டது.
தோல்வியைத் தழுவிக் கொண்ட சமணர்களை அவர்களே ஒப்புக்கொண்ட சவாலின் படி கழுவேற்றினர். அந்தக் கழுவேறிய காட்சி சிற்பமாக வரையப்பட்டுள்ளது. அதன் பின் மன்னன் தீவிர சைவரானது போன்ற காட்சிகள் இங்குக் காணப்படுகிறது. இந்த வரலாறு நம் கண் முன்னால் நடப்பது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் மீனாட்சியின் அவதாரங்கள் காணப்படுகிறது. கல்யாண நாளன்று விருந்துக்காக அமைக்கப்பட்ட உணவு பதார்த்தங்களை வண்டி வண்டியாகச் சிவபெருமானுடன் வந்த குண்டோதரனுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள். அனைத்து உணவுகளையும் உண்டு தீர்த்த அவனுக்குத் தாகம் எடுத்தது. சிவபெருமானிடம் தாகம் தீர்க்கும் படி கோரினான் குண்டோதரன். அவன் தாகத்தினைச் சாமான்யமாகத் தீர்க்க முடியுமா? எனவே சிவபெருமான், ‘குண்டோதரா வை கை’ என ஆணையிட்டார். குண்டோதரன் கை வைக்க அங்கே ஒரு நதி தோன்றியது. அந்த நதியைக் குடித்து, தனது தாகத்தினைத் தீர்த்துக் கொண்டான்.
“வை.கை.” என்று சொல்லியதால் குண்டோதரன் கை ஊன்றி உருவாக்கிய நதி வைகை என அழைக்கப்பட்டது. இதை உணர்த்தும் சிற்பங்களும் இங்கே காணப்படுகின்றன.
ராமபிரான், லெட்சுமணன் தோளில் நின்று வில்லைச் சோதிப்பது. அவர்களை அனுமன் வணங்குவது போன்ற ஒரு காட்சி அமைய பெற்றுள்ளது. சேரமான் பெருமான் குதிரை மீது அமர்ந்து திருக்கயிலாயம் செல்லும் காட்சி அமைக் கப்பட்டுள்ளது. -பள்ளி கொண்டுள்ள பெருமாள் பத்மநாபர் ஓவியத்தையும், பக்கவாட்டில் மகாவிஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளையும் ஓவியமாக இங்கு வரைந்துள்ளார்கள்.
ஒவ்வொரு தளமாக ஏறி நான்காவது நிலை மண்டபத்துக்கு வருகிறோம்.
திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமியின் தலபுராணங்களைச் சிறப்பாக விவரிக்கும் வகையில் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கஜேந்திர மோட்ச தலபுராணமான தேவேந்திரச் சுரேந்திரன் விருத்திகாகரனை வென்று கொன்றது; பின் பாவம் நீங்க இத்திருத்தலம் வந்து மருத மரமாகி இறைவனை நினைத்து, தவம் புரிவது. இறைவன் சிவபெருமான் மருத மரங்களுக்கு இடையே தோன்றிக் காட்சி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் இங்கு தத்துரூவமாக வரையப்பட்டுள்ளன. தாமிரபரணி தீர்த்தத்தில் மூழ்கிப் பாவம் நீங்கப் பெற்ற தேவேந்திரனைப் பிரம்மா, விஷ்ணு, முனிவர்களுடன் திருக்கயிலாயம் சென்று இறையருள் பெற்றுத் திரும்பவும் இத்தலம் வந்து மருத மரத்தடியில் சுயம்புலிங்க சிவனைப் பூஜைசெய்தல் போன்ற காட்சிகள் இங்கு வரையப்பட்டுள்ளது.
கருவூர்ச் சித்தர் தாமிரபரணி ஆற்றங்கரையில் நிற்கிறார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மருத மலர் வாசத்தில் இறைவன் இக்கரையில் இருக்கிறார். மனத்தை மட்டும் கருவூர் சித்தரால் நுகரமுடிகிறது. ஆனால் இக்கரை வர இயலவில்லை. இறைவனின் பெயரும் தெரியவில்லை. எனவே ‘நாறும் பூ நாதா அருள் தருவாயோ.’ எனப் பாடுகிறார். இவர் பாடலைக் கேட்க இறைவன் சற்று இடது புறமாகச் சாய்கிறார். இந்த அற்புதக் கதையை விளக்கும் சிற்பமும் இங்குச் செதுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த ஐந்தடுக்கு கோபுரத்தில் உள்ளே நுழைந்து மரச்சிற்பங்களையும், மியூரல் வகை ஓவியங்களையும் கண்டு கழித்தால் பல புராணங்களையும், இத்தலத்தில் நடந்த நிகழ்வுகளையும் கண்டு கழித்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.
மரச்சிற்பங்கள் சிறப்பானவையா? அல்லது ஓவியங்கள் சிறப்பானவையா? எனக் கேட்டால் இரண்டுமே. நம்மை ஆனந்த பரவசம் அடையச் செய்யும் கலைப் பொக்கிஷம் என்றே கூறத் தோன்றுகிறது.
பொருநை ரகசியங்களை தேடி பயணிப்போம்…


