பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள்
-முத்தாலங்குறிச்சி காமராசு
32. தாமிரபரணிக்கரையில் அதிராமல் நிற்கும் நினைவு பொக்கிஷங்கள்.
அந்தக் காலத்தில் தற்போது போல் தொழில் நுட்பம் இல்லை. சிமெண்ட் போன்ற கலவைகள் இல்லை. ஆனாலும் வெள்ளத்துக்குத் தாக்குப் பிடித்து நிற்கிறது அணைக்கட்டுகள்.
தாமிரபரணிக் கரையில் உள்ள தீர்த்தக்கட்டங்கள் மிகச்சிறப்பானவை. இந்தத் தீர்த்தக்கட்டங்கள் இம்மைக்கும், மறுமைக்கும் நலன் அளிப்பவை. தாமிரபரணி மகாத்மியத்தில் புராணக்கதைகளாகப் பேசப்படும் இந்த இடங்களில் எல்லாம் படித்துறை காணப்படுகிறது.
இந்தப் படித்துறைகள் எல்லாம் கற்களால் அடுக்கப்பட்டு, கடுக்காய், சுண்ணாம்பு, மூலிகைக் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் தேரழகு, பாவநாசம் படியழகு என்பார்கள். அது போலத்தான் பாவநாசத்தில் உள்ள படியழகைக் காணக் கண்கோடி வேண்டும். தாமிரபரணி தலையணையால் தடுக்கப்பட்டாலும், மலையில் இருந்து தனது முழு பலத்தினையும் தாமிரபரணி காட்டும் இடம் பாவநாசம் தான். பேயாறாகப் பாய்ந்து ஆர்ப்பரிக்கும் இடம் இதுதான்; ஆனால் இந்தப் பாவநாசத்தில் கட்டப்பட்ட படித்துறைகள் அழுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கிறதே. வருடத்துக்கு வருடம் அதைப் பார்க்கப் பார்க்க நேர்த்திக் கூடுகிறதே தவிரக் குறையவே இல்லையே. இது தானே நம்மவர்களின் கட்டிடக் கலைக்குச் சிறப்பு.
1992&இல் அடித்த புயல் மழை வெள்ளத்தில் தேக்கு மரங்கள் அடித்து கொண்டு வரப்பட்டது. சேர்வலாறு பகுதியில் கட்டப்பட்ட மிகப்பெரியப் பாலமே அடித்து நொறுக்கப்பட்டது. அதன் பிறகு அதில் இரும்புப் பாலம் போடப்பட்டுள்ளது. ஆனால் பாவநாசம் படித்துறைக்கும், அதில் இருக்கும் மண்டபத்துக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லையே. இது எல்லாம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தக் கூடிய தாகவே உள்ளது.
அம்பாசமுத்திரத்தில் இருக்கும் படித்துறைகளும், நீராழி மண்டபங்களும் பல வரலாறுகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. தேவி தீர்த்தம், குயில் தீர்த்தம், காசிப தீர்த்தம், தீப தீர்த்தம் எனப் பல புராண வரலாறுகளை இன்றும் பேசிக்கொண்டு தங்களின் தனித்தன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
தாமிரபரணியில் இருந்து பிரியும் கன்னடியன் கால்வாய் கல்லிடைக்குறிச்சி வழியாகச் செல்கிறது. இந்தக் கால்வாயில் கல்லிடைக்குறிச்சி வீடுகளில் புறவாசல்கள் படித்துறையாக உள்ளன. இதுபோன்ற அமைப்பை வேறு எங்கும் காண முடியுமா?. இதே கல்லிடைக்குறிச்சியில் கன்னடியன் கால்வாய் தண்ணீர் வாய்க்கால் வழியாகப் பிரிக்கப்பட்டு, திருவாடுதுறை ஆதீனத்தின் தளச்சேரி மடத்தின் உள்ளே நீராழி மண்டபத்துக்குள் ஓடுகிறது. இது எப்படிச் சாத்தியமானது? இந்தத் தண்ணீர் மனேந்தியப்பர் கோயில் தெப்பக்குளத்தில் நிரப்பப்பட்டு, மீண்டும் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. எத்தனை தொழில் நுட்பம்? இதில் பயன்படுத்தி உள்ளார்கள்.
ஊர்க்காடு எதிரே வயற்காட்டுக்குள் மானமங்கலம் என்றவொரு இடம் உள்ளது. சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த மண்டபம் வயற்காட்டுக்குள் தாமிரபரணி கரையில் உள்ளது. கல்லில் கடைசல் போட்டு கட்டப்பட்ட இந்த மண்டபம் எத்தனை நூற்றாண்டைத் தாண்டி கம்பீரமாக நிற்கிறது! இதன் அழகைப் பறைசாற்றும் விதமாகக் கைவண்ணம் காட்டிய அந்தக் கலை வல்லுநர் யார் என்றே தெரியவில்லையே. ஆனாலும் இந்த மானாமங்கலம் மண்டபம் தலை நிமிர்ந்து நிற்கிறதே.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அத்தாள நல்லூர் கஜேந்திர மோட்ச தீர்த்தக்கட்டம், திருப்புடை மருதூர் சுரேந்திர மோட்ச தீர்த்தக்கட்டம், சாட்டபத்து கருவூர் சித்தர் தீர்த்தக்கட்டம், அரியநாயகிபுரத்தில் பைரவ தீர்த்தக்கட்டம், சேரன் மகாதேவி மகாவியாதி பாதம் தீர்த்தக்கட்டம் என தாமிரபரணி முழுவதும் உள்ள ஒவ்வொரு தீர்த்த கட்டங்களும் இன்று படித்துறைகளாகக் காட்சியளிக்கிறதே. விழாக்காலங்களில் கொண்டாடப்படும் இந்தப் படித்துறைகள் எல்லாம் நமது கட்டிடக் கலையைப் பறைசாற்றிக் கொண்டே பல நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஆலயங்களை எப்படிக் கொண்டாடினார்களோ. அதுபோல படித்துறைகளையும் கொண்டாடினார்கள்; எனவே தான் அதற்கு விழாக்கள் வைத்தனர்.
இங்குள்ள மண்டபங்களும் சிறப்பானது. விக்கிரமசிங்கபுரம் அருகே புலவன் பட்டியில் தைப்பூசமண்டபம் என ஒன்று உள்ளது. இந்த மண்டபம் திருவிழாக்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆஷ் துரையைச் சுட்டு கொல்ல வாஞ்சிநாதன் உள்படச் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் திட்டம் போட்டதே இந்த மண்டபம் தான் என்பார்கள். ஊர்காட்டில் திருவலஞ்சுழி என்னும் இடத்தில் கஜேந்திர மோட்சம் நடைபெற விஷ்ணு சக்கரம் எய்த இடம்; இன்று தாமிரபரணி ஆற்றின் நடுவில் அந்த மண்டபம் இருந்தும் கூட, வெள்ளத்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இதே ஊரில் சுடலை சாமி கோயில் அருகே போடப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய நீர் உறிஞ்சும் தொட்டி மட்டும் வெள்ளத்தில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போலச் சாய்ந்து விட்டதே; ஆனால் மண்டபங்கள் சாயவில்லையே!
மேலச்செவல் அருகில் நடு ஆற்றில் சரஸ்வதி தீர்த்தக்கட்டம் என்ற பெயரில் ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் நடந்த பெரிய யாகத்தினால் தான் தாமிரபரணி தாமிரச் சத்து நோய் தீர்க்கும் அருமருந்தானது. அருகிலேயே அத்திரியின் புதல்வர் துர்வாச முனிவர் தீர்த்தக்கட்டம் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ளது.
குறுக்குத்துறை அருகே உள்ள நொண்டிப் பாலமும், முருகன் கோயிலில் அருகில் உள்ள நீராழி மண்டபமும் சிறப்பு வாய்ந்தவை. குறுக்குத்துறை முருகன் கோயில் அருகே உள்ள நீராழி மண்டபத்தில் சாதுக்கள் குளித்து விட்டு, அருகிலேயே அமர்ந்து, அங்கு அமைக்கப்பட்டக் கற்பலகையில் நீர் போக்கிலேயே தியானம் செய்யும் இடமாக நீராழி மண்டபம் உள்ளது. இந்த நீராழி மண்டபம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரும் போதெல்லாம் மூழ்கித்தான் விடுகிறது. ஆனால் இந்தக் கட்டிடத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லையே. சிந்துபூந்துறையும், குறுக்குத்துறையும், கருப்பன் துறையும் மூன்று முக்கண் தீர்த்தங்கள் அல்லவா-? இதன் சிறப்பைப் புராண வரலாறுகள் கொண்டாடுகிறதே.. இந்தத் தீர்த்தங்கள் உள்ளப் படித்துறைகள் எல்லாம் சிறப்பானது தானே.
வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோயில் அருகில் உள்ளத் தீர்த்தக்கட்டம் குட்டத் தீர்த்தம். இந்த தீர்த்தக்கட்டத்தில் உள்ளப் படித்துறையில் குளித்தால் குஷ்ட ரோகம் நிவர்த்தியாகுமாம். அதற்கான மூலிகை கலந்த தாமிரபரணி இந்த இடத்தில் வந்துள்ளது; ஆனால் தற்போது போக்குவரத்துக் கழக டெப்போவில் இருந்து வரும் கழிவு நீர் குஷ்டத்தினை உருவாக்கும் நிலையில் அல்லவா இங்கே வருகிறது.
ஆழ்வார்திருநகரியில் ஒவ்வொரு வீட்டின் பின் புறமும் தாமிரபரணி ஆற்றின் படித்துறையாக விரிந்து கிடக்கிறது. அந்தக் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் இங்கு வசித்தவர்கள் தங்கள் வீட்டுக் கொல்லைப் புறம் வழியாகவே குளித்து வந்துள்ளனர்.
ஆலயத்தின் ஒவ்வொரு விழாக்களுக்கும் இங்குப் படித்துறை அமைந்துள்ளது.
ஆழ்வார்திருநகரியில் சங்-கு மண்டபம் என்று ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்துக்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு. இந்த மண்டபத்தில் ஆற்று வெள்ளம் அதிகமாக வந்தால் சங்கு ஒலி எழுப்பும். உடனே மக்கள் அங்கிருந்து மேட்டுப் பகுதிக்குச் சென்று விடுவார்கள்.
இந்த வடிவமைப்பை எப்படி அமைத்தார்கள்? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
இந்த மண்டபத்தில் நீர் வரும் வழியில் தண்ணீர் வரும் போது ஒரு குறிப்பிட்ட ஓட்டை வழியாகத் தண்ணீர் உள்ளே செல்லுகிறது. அப்போது ஏற்படுகிற காற்று அழுத்தத்தில் சங்கு ஒலி எழும்புகிறது. இது போன்ற அமைப்பை வேறு எங்கேயும் கண்டது உண்டா?
1947&ஆம் ஆண்டு பாவநாசம் மேலணை வந்த பின்பு தாமிரபரணியில் வெள்ளம் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு சங்கு மண்டபம் மூழ்குவதும் இல்லை. ஒலியை எழுப்புவதும் இல்லை.
ஆனால் இன்றும் இந்த மண்டபங்கள் எல்லாம் நினைவுச் சின்னங்களாய் நின்று கொண்டே இருக்கின்றன. தற்போது கர்மக் காரியங்களுக்கு இந்த மண்டபத்தினைப் பயன்படுத்துகிறார்கள்.
அதன் பயன்கள் மாறிவிட்டன. ஆனால் உறுதிக்குக் குறைவே இல்லை. பல நூற்றாண்டுகளைக் கடந்து விட்டது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளைக் கடக்கத் தயாராக உள்ளது.
தமிழர்களின் கைவண்ணத்தினையும், கலை வண்ணத்தினையும் இந்த உலகிற்கு உணர்த்திக் கொண்டே தாமிரபரணி ஆற்றுக்குள் இருக்கிறது . மண்டபங்கள் சிறப்பைப் பற்றிக் கேட்டால் கட்டபொம்மனுக்கும், தானாவதிப் பிள்ளைக்கும், ஊமைத்துரைக்கும் கதை கொடுத்த பேராசிரியர் மாணிக்கம் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டே இருப்பார்.
தாமிரபரணியில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் மண்டபங்களுக்கும், படித்துறைக்கும் வற்றாமல் ஓடும் இந்த ஆற்றில் எப்படி அஸ்திபாரம் அமைத்தார்கள். இன்று ஆற்று மணலை 10 அடிக்குத் தோண்டியும் கூட அந்த அஸ்திபாரம் அதிராமல் இருக்கிறதே! அதற்குக் கைவண்ணம் அமைத்துத் தந்தவர்கள் நமது முன்னோர்கள்தானே! தமிழர்கள்தானே!தாமிரபரணி தண்ணீரைக் குடித்தவர்கள்தானே என்று கூறினால் அது நமது அனைவருக்கும் பெருமை தருவதாகவே உள்ளது.
இந்த உலகம் உள்ளவரை, தாமிரபரணி நதி வற்றாமல் இருக்கும் வரை, இந்த மண்டபங்கள் நமது முன்னோர்கள் புகழ் பாடிக்கொண்டே இருக்கும்.


