பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள்
– முத்தாலங்குறிச்சி காமராசு
31. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு சிறப்பு
தாமிரபரணியில் கட்டப்பட்ட படித்துறைகளும், மண்டபங்களும்.
தமிழர்கள் கட்டிடக் கலையில் சிறப்புற்று இருந்தார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. அதற்கு உதாரணமாகத் தாமிரபரணி நதியில் கட்டப்பட்ட படித்துறைகளையும், மண்டபங்களையும் எடுத்துக்காட்டலாம்.
தாமிரபரணி ஓடும் கரையெல்லாம் நூற்றுக்கணக்கான மண்டபங்கள் சிறியதும், பெரியதுமாகக் காட்சியளிக்கின்றன. இவை சேர, சோழர், பாண்டியர் காலங்களில் கட்டப்பட்டவை. திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டபம், திருப்புடை மருதூரில் உள்ள தைப்பூச மண்டபம் ஆகியவை புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.
திருமஞ்சன நீர் எடுத்துச் செல்லத் திருக்குடம் பொருந்திய மண்டபங்களை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் காணலாம். வெள்ளக்கோயில் பகுதியில் 42 தூண்களுடன் 150 பேர் வரை அமரக்கூடிய சுடுகாட்டு மண்டபம் இருக்கிறது. ஐங்கோண வடிவிலான மண்டபங்களும் உண்டு. பல்வேறு மண்டபங்களில் ஓவியங்களும், கல்வெட்டுக் குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன.
தாமிரபரணியில் படித்துறைகளுக்கும் பஞ்சமில்லை. அத்தாள நல்லூரில் உள்ள படித்துறையில் சத்தியப்படிகள், ஆழ்வார்திருநகரியில் வைகாசி விசாகம் தீர்த்தவாரி,
திருவைகுண்டம் நீண்ட படித்துறை, பாவநாசம், குறுக்குத்துறை போன்ற பகுதிகளில் மடித்து அமைக்கப்பட்டதான படித்துறைகள் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, 100க்கும் மேற்பட்ட தீர்த்த கட்டங்கள் ஆற்றங்கரையில் இருக்கின்றன.
திருநெல்வேலி, கைலாசபுரத்தில் கைலாசநாத சுவாமி கோயிலுக்கு எதிரே தாமிரபரணிக் கரையோரத்தில் மண்டபத்தை ஒட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும் மணற்பரப்பு இருந்துள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அதற்கும் முன்பும் இங்குதான் பொதுக் கூட்டங்கள் நடந்தன. 1908-&ஆம் ஆண்டில் இங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் வ.உ.சி. பேசியிருக்கிறார். தவிர, முத்துராமலிங்கத் தேவர், நாவலர் நெடுஞ்செழியன், சத்தியவாணி முத்து, அண்ணா, கருணாநிதி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இங்கே சொற்பொழிவாற்றியுள்ளனர். காலவெளியில் காணாமல் போய்விட்டது அந்த மணல்வெளி. 2008&ஆம் ஆண்டு நடந்த மகாபுஷ்கர திருவிழாவின்போது 11 நாள்களும் விழாக்கோலம் பூண்டு இருந்தது இந்த தைப்பூச மண்டபம்.
தாமிரபரணிக் கரையோரத்தில் அமைந்துள்ள மண்டபங்களை ஓவியமாக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் பொன்.வள்ளி நாயகம். இவரது ஓவியப் பயணத்தில் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள், மக்களின் பண்பாடு, அன்றாட வாழ்க்கையோடு ஆற்றங்கரை மண்டபங்கள் ஒன்றிப்போயிருக்கும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. “மண்டபங்கள் அமைந்துள்ள திசை, சூரிய ஒளி அவற்றின்மீது விழும் பாங்கு குறித்தெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டுதான் அவற்றை ஓவியமாக வரைகிறேன். பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் திருநெல்வேலியில் ஆற்றங்கரை மண்டபம் ஒன்றை ஓவியமாக வரைந்திருக்கிறேன். அனைத்து மண்டபங்களையும் வரைந்த பின்பு அவற்றைக் கண்காட்சியாக வைக்கவுள்ளேன்” என்கிறார் அவர்.
தாமிரபரணி வற்றாத ஜீவநதி. உயிரோட்டமான நதி. சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முன்பு ஆர்ப்பரித்து ஓடிய நதி. எங்கு ஓடியது? எப்படி ஓடியது? என்பது தெரியாமல் ஓடிய நதி. பல இடங்களில் பல பிரிவாக ஓடிய நதி தாமிரபரணி. இது உண்மை என்பதை உணர்த்தும் வகையாக தற்போது கூட, கடலில் கலக்கும் இடத்தில் 6 பிரிவாகத் தாமிரபரணி ஓடுவதைக் காணலாம்.
நதி மனம் போல ஓடப் பல காரணம் உண்டு. அந்தக் காலத்தில் நதியை மடக்கி, தேக்கி வைக்க, ஒழுங்கு செய்ய அணைக்கட்டுகள் கிடையாது. அதையெல்லாம் வரைமுறைப் படுத்தியவர்கள் நமது முன்னோர்களான தமிழர்கள்தான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓடிய தாமிரபரணியை முறையாக ஓட வழிமுறை செய்தார்கள். அணை கட்டினர். அதைப் பாசனத்துக்குப் பயன்படுத்தினர். தாமிரபரணி ஓட்டத்தினையும் கட்டுப்படுத்தினர்.
தற்போது மடையர்கள் என்றால், புத்தியில்லாதவர்கள் என்று கூறுகிறோமே. அது உண்மையல்ல. இந்த மடையர்கள் யார் தெரியுமா?. இவர்கள் பற்றி ஆய்வு செய்து எழுத்தாளர் டி.எல் சஞ்சீவி குமார் தனது நூலில் எழுதியுள்ளார்.
அந்தக் காலத்தில் தற்போது உள்ளது போல அணைக்கட்டுகள் இல்லை. பனை மரங்களையும், தழைகளையும் வெட்டிப் போட்டு தாமிரபரணியை அடைத்து, கால்வாய் வழியாக தண்ணீர் பாய்த்தார்கள். காலங்கள் கடந்த பிறகு கற்களை அடுக்கி, அதில் சிறு மடை வைத்து, தண்ணீரைத் தேக்கிக் கால்வாய் வெட்டி, அந்தக் கால்வாய் மூலமாக விவசாயப் பணி செய்தனர்.
அந்தக் காலகட்டங்களில் மடையர்களின் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தாமிரபரணியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயங்களில் மடை அடைத்து விட்டால் வெள்ளம் திமிறிக் கொண்டு நகருக்குள் பாய்ந்து அழிவை ஏற்படுத்தி விடும்.
இதற்காகவே மடையைத் திறக்கும் பணி செய்பவர்கள் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர்.
மடையை நீரில் மூழ்கித் திறப்பார்கள். அப்போது, தனது மூச்சை, தம் பிடித்து அடைத்துக் கொண்டு திறப்பார்கள். சில சமயம் மடை வழியாக இவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரையும் இழப்பர். சில நேரம் மடைக்குள் இவர்கள் உடல் இழுத்து உள்ளே போய் செருகி விடும். 100ல் 25 விழுக்காடு பேர் தான் மடையைத் திறந்து விட்டு வெளியே வருவார்கள். மற்றவர்கள் கதி அதோ கதிதான்.
ஊர் அழிந்து விடக்கூடாது; தன் உயிர்போனாலும் ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்தக் காரியத்தில் ஈடுபடுடவே இந்தக் குடும்பத்தால் வழிவழியாக வாழ்ந்து வருவார்கள். இவர்கள்தான் மடையர்கள். மடையை ஆளுபவர்கள் மடையர்கள்.
மடையர்கள் மடையைத் திறக்கப் போகும் போது, அவர்களின் குடும்பத்தார் கண்ணீர் மல்க வழியனுப்பி வைப்பார்கள். அவர்கள் திரும்ப வந்தாலும் தான் வருவார்கள் எனத் தெரிந்தும் அவர்களை வழியனுப்பி வைப்பார்கள்.
மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்தவர்கள் மடையர்கள். ஆனால் இந்த மடையர் என்ற வார்த்தை தற்போது வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது.
இது போல உயிர்ப் பலி ஏற்படுகிறது. தாமிரபரணி நீரோட்டம் தாறுமாறாக ஓடுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் தாமிரபரணியில் நமது முன்னோர்கள் காலத்தில் 7 தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதற்கு முன்பு தாமிரபரணியின் போக்கே வேறுவிதமாக இருந்தது.
பாவநாசத்துக்கு முந்தையது பழைய பாவநாசம் என்கிறார்கள். இந்தகங கோயில் தற்போது புலவன் பட்டி என்ற இடம் அருகில் உள்ளது. இந்த இடத்தில் தாமிரபரணி ஓடியது என்கிறது புராணங்கள். தற்போது தாமிரபரணி அங்கிருந்து சில பர்லாங்கைத் தாண்டித் தான் ஓடுகிறது.
அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு என்ற கிராமத்தில் 5 பிரிவுகளாக, ஊரைச் சுற்றித் தாமிரபரணி ஓடியுள்ளது. அந்த இடங்கள் எல்லாம் தற்போது வயற்காடுகளாக மாறிவிட்டன. ஆறு ஓடிய இடத்தில் வயற்காடுகள் பள்ளமாகவும், மற்ற இடத்தில் உயரமாகவும் காணப்படுவதைத் தற்போதும் நாம் காணலாம்.
ஊர்க்காட்டில் அகத்தியர் உருவாக்கியக் கோட்டியப்பர் ஆலயம் தாமிரபரணியில் உருவானது என்கிறது தாமிரபரணி மகாத்மியம். தற்போது தாமிரபரணி அந்த ஆலயத்தினை விட்டு ஒரு பர்லாங்கைத் தாண்டியே ஓடுகிறது.
நவகயிலாயங்கள் அனைத்துமே அகத்தியரின் சீடர், உரோம ரிஷி தாமிரபரணியில் 9 மலர்களை விடத் தோன்றியது என்கிறது புராணம். சங்காணி, 7 ஆவது கயிலாயம் தென்திருப்பேரை, 8 ஆவது கயிலாயம் ராஜபதி ஆகிய கோயில்கள் எல்லாம் தாமிரபரணி ஆற்றின் அருகில் தற்போது இல்லை. சற்று விலகியே காணப்படுகிறது.
திருவைகுண்டம் சிவன் கோயில் தல புராணத்தில் கோயில் முன்புறமாகத் தாமிரபரணி ஓடியது என்றும், பொன்னப் பிள்ளை என்பவர் தான் ஆற்றின் போக்கை மாற்றி அமைத்து விட்டார் எனவும் கூறுகிறார்கள்.
தாமிரபரணி பேரூர், ஆயத்துரை வழியாக ஓடியிருக்கிறது. இன்று ஆறு ஓடியதற்கானச் சுவடுகளாகத் தோண்டிப் பார்த்தால் ஆற்று மணல் காணப்படுகிறது. 2020&இல் ஆதிச்சநல்லூர் அகழாய்வின்போது முதல் முதலாக அகழாய்வு இயக்குநர் பாஸ்கர், நிதி அலுவலர் லோகநாதன் குழுவினர் வாழ்விடத்தினைக் கண்டுபிடித்தனர். அப்போது ஆதிச்சநல்லூர் ஊருக்குள் அகழாய்வு செய்த போது ஆற்று மணல் மிக அதிகமாக இருந்தது. இது அந்தப் பகுதியில் தாமிரபரணி ஆறு பல பிரிவாக ஓடியதைக் காட்டுகிறது. நாசரேத் வழியாகக் குலசேகர பட்டிணத்துக்கு, செவ்வாறு ஓடியது என்கிறார்கள். அந்தச் செவ்வாறே, தாமிரபரணி தான், என்ற கூற்றை எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி முன் வைக்கிறார். இதுபோல காயல்பட்டணத்தில் உள்ள மெய்கண்டேஸ்வரர் ஆலயத்தின் அருகிலும் தாமிரபரணி ஓடியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு தடவை காயல் பட்டினம் சென்ற போது, மெய்கண்டேஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர் எனக்கு ஒரு வரைபடம் காட்டினார்கள். அதில் தாமிரபரணி ஆறு ஓடிய சான்றுகள் உள்ளன.
அப்படியென்றால் தாமிரபரணியின் போக்கை மாற்றி அமைக்கும் அளவுக்குத் தமிழர்களின் நேர்த்தி இருந்துள்ளது. அதைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தியுள்ளார்கள்.
தாமிரபரணி ஆற்றில் உள்ள எட்டு தடுப்பு அணைக்கட்டில் 7 அணைக்கட்டு நமது முன்னோர்களான சிற்றரசர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் கோடை மேலழகியான் அணை, நதியுண்ணி அணை, கன்னடியன் அணை, அரியநாயகிபுரம் அணை, பழவூர் அணை, சுத்த மல்லி அணை, மருதூர் அணை போன்றவை நதியின் போக்குக்கு இணங்கக் கற்ககளால் கட்டி அடுக்கப்பட்டுள்ளது. இதன் தொழில் நுட்பம் எங்கிருந்து கற்றுக்கொண்டார்கள்? இதைக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? பல நூற்றாண்டுகளாக வரும் வெள்ளத்தினைத் தாக்குப்பிடித்துக்கொண்டு நிற்கிறதே, இந்த அணைக்கட்டுகள்.
மீன் -குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும் என்பார்கள். உண்மைதான். தமிழர்கள் கலைத் திறனுக்கு நிகர் வேறு எதுவும் உண்டோ?.
சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்கிறாரே வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி. அந்த ஆதிச்சநல்லூர் நாகரிகமே தாமிரபரணி கரை நாகரிகம் தானே. இங்கு எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கிறார்கள். சுமார் 3500 வருடங்களுக்கு முன்பே இவர்கள் மண்ணை, பாண்டங்களாகவும், செங்கற்களாகவும் தயாரித்துள்ளார்கள். இன்று வானுயர உயர்ந்து நிற்கும் பாண்டிய மன்னர்களின் கோபுரங்கள் எல்லாமே தமிழர்களின் கட்டிடக் கலைக்குச் சிறப்பு சேர்ப்பவைதானே. அணைக்கட்டுகளைக் கட்டி, தாமிரபரணியின் போக்கைச் சரி செய்த பிறகு நீரின் ஓட்டம் சீரானது; ஆனாலும் ஆற்று வெள்ளத்தில் அணைக்கட்டுக்கள் எப்படித் தாக்குப் பிடிக்கின்றன என்பது மர்மமாகவே உள்ளது.
16&ஆம் நூற்றாண்டின் விஜயநகரப் பேரரசின் கலை அளவுக்கு மீறிய நேர்த்தி வாய்ந்த கலை என்று மேலை நாட்டு அறிஞர் பெர்சிபிரௌன் கூறியுள்ளாரே. அந்தக் கலைகளை எல்லாம் செய்த தொழிலாளர்கள் தமிழர்கள்தானே. இவர்கள் பெயரைப் பொறிக்கவில்லை. யார் என்று எழுதி வைக்க வில்லை. ஆனால் அவர்கள் செய்த கலைகளும், கட்டிடங்களும் இன்றும் அவர்கள் செயல்திறனை வியந்து நம்மைப் பார்க்க வைக்கிறதே.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்..)


